Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமதமாகும் மருத்துவ மாணவர் சேர்க்கை... தில்லுமுல்லுவில் இறங்கும் நிகர்நிலைக் கல்லூரிகள்!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைபட்டியல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவச் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 32,000 பேரும், பொறியியல் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று இன்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்த 1,41,000 பேரும் காத்திருக்கிறார்கள்.

மருத்துவ மாணவர் சேர்க்கை

இதுவரை நீட் தேர்வு வேண்டாம் என்று நடைபெற்ற வழக்குகள் வலுவிழந்து விட்டன. மருத்துவச் சேர்க்கையில் மாநில பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15% சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்தார். அதில் இருந்து ஒதுக்கீடு குறித்த வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடந்து வருகின்றன. 

‛சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்த மாணவனின் வழக்கில், உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவச் சேர்க்கைக்கு இடைக்கால தடை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே ஜூலை 17-ம் தேதி நடக்க இருந்த மருத்துவக் கவுன்சலிங்கும், மருத்துவக் கவுன்சலிங்க்குப் பின்பு நடைபெற இருந்த பொறியியல் கவுன்சலிங்கும் தள்ளிப்போகின்றன. இதனைத் 'தனியார் சுயநிதி கல்லூரிகளும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தில்லுமுல்லுவில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றன' என்கிறார்கள் பெற்றோர்கள். 

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் தனியார் சுயநிதி கல்லூரிகளும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நடத்தின. அப்போது நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 118 பெற்றவர்களிடம் நன்கொடையைப் பெற்றுக் கொண்டு மாணவர்களைச் சேர்த்தனர். அதேபோல இந்த ஆண்டும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களிடம் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு தங்களுடைய கல்லூரியில் சேர்ப்பதற்கு பேரம் பேசி வருகிறார்கள்.

குறிப்பாக நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் கவுன்சலிங்கை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Directorate General of Health Services (DGHS) மேற்கொள்கிறது. பொதுவாகக் கவுன்சலிங் என்றால் மாணவர்கள் திரையின் முன்பு அமர்ந்து அவர்களுக்குத் தகுந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் DGHS நடத்தும் கவுன்சலிங் இணையம் வழியாக நடத்தப்படுகிறது. இதில் யார் வேண்டுமானாலும் மாணவர்களுக்குக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க முடியும். இதனைத் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ‛நாங்களே மருத்துவ இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம். உங்கள் பையனோ பெண்ணோ நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் போதும். எங்கள் கல்லூரியில் உங்களுக்கு நிச்சயம் இடம் கிடைத்துவிடும். எங்களிடம் முன்னரே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து வையுங்கள்’ என்று பெற்றோர்களிடம் பேரம் பேசி வருகின்றன. 

மருத்துவ மாணவர் சேர்க்கை இளங்கோவன்"ஏற்கெனவே நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தி இருக்கும் நிலையில் சட்டவிரோதமாகப் பெற்றோர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மருத்துவச் சேர்க்கை நடத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தக்க முறையில் கலந்தாய்வின் மூலமே மாணவர்களின் சேர்க்கையை நடத்த வேண்டும். பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

இதைப்போலவே தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் மாநில அரசுக்கான ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத வகையில் நிகர்நிலை மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகின்றன. கர்நாடகாவில் கன்னட மொழியினை முதன்மையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனைப்போலவே தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும்" என்று கோரிக்கையையும் வைத்தார் காஞ்சிபுரம் இளங்கோவன். 

இவர், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்திய பின்பு  நீட் தேர்வைக் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன குழுவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் 4000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை 250 பள்ளிகள் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு 88,000 பேர் விண்ணப்பித்தார்கள். இதில் 82,000 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 5000 பேர் சி.பி.எஸ்.இ மற்றும் இதரப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 26,000 பேரும், சி.பி.எஸ்.இ மற்றும் இதரப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 4,000 பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

நாடாளுமன்றத்தில் நீட் குறித்த விவாதத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, ‛மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடும், போனஸ் மதிப்பெண்ணும் வழங்கிக்கொள்ளலாம்’ என்று அறிவித்திருந்தார். இதற்கு முன்னுதாரணமாக ராஜஸ்தான் மாநில அரசு அந்த மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கி சேர்க்கையை நடத்தியது. ஆகவே, தமிழக அரசு வழங்கி உள்ள உள்ஒதுக்கீடு சரியானது என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யவே வாய்ப்பு அதிகம். 

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 3% பேர் மட்டுமே சேர்கிறார்கள். மீதமுள்ள இடங்களை சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்தவர்கள் நிரப்புகின்றனர். இதைத்தவிரத் தமிழக அரசு அறிவித்துள்ள 15% ஒதுக்கீடு உள்ளது. இந்த வகையில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 27% ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள். அதாவது, தமிழ்நாட்டில் 6% மட்டுமே உள்ள சி.பி.எஸ்.இ மாணவர்கள் 27% ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள். ஆனால், 94% பேர் உள்ள தமிழக மாணவர்கள் 73% இடங்களையே  பெறுகிறார்கள். இதனை எல்லாம் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து விரைவில் மருத்துவக் கலந்தாய்வை  நடத்திட வேண்டும்" என்கிறார் இளங்கோவன். 

"இந்த ஆண்டு அரசு ஒதுக்கீடு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் இடங்களுக்கும் சேர்த்து 51,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. விண்ணப்பங்களை முறைப்படுத்தி ஆய்வு செய்து வருகிறோம். உயர்நீதிமன்றத்தின்  உத்தரவு வந்தவுடன் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்" என்கிறார் தமிழ்நாடு மருத்துவச் சேர்க்கைக்கான செயலர் செல்வராஜ். 

தமிழக மாணவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close