பயிர்காப்பீட்டுத் தொகையை வழங்கிடக்கோரி விவசாயிகள் கோவில்பட்டியில் தொடர் போராட்டம்! | Farmers protest in Kovilpatti continues for 9th day

வெளியிடப்பட்ட நேரம்: 22:14 (13/07/2017)

கடைசி தொடர்பு:08:38 (14/07/2017)

பயிர்காப்பீட்டுத் தொகையை வழங்கிடக்கோரி விவசாயிகள் கோவில்பட்டியில் தொடர் போராட்டம்!

விவசாயிகள் செலுத்திய பயிர்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விவசாயிகள் 9-வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்து வரும் விவசாயிகளின் தொடர் போராட்டம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடந்து வருகிறது.

போராட்டத்தில் பேசிய நாராயணசாமி, ‘’கடந்த 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை அதை  உடனடியாக வழங்கிட வேண்டும். தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகையும்  வழங்கப்படவில்லை. உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட பிறகு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. இதை வலியுறுத்தி கடந்த 5-ம் தேதி முதல் மண்டியிடுதல், பிச்சைஎடுத்தல், கழுத்தில் தூக்கு மாட்டுதல், கண்ணைக் கட்டி உடுக்கை அடித்தல், அங்க பிரதட்சணம், ஒப்பாரிப் போராட்டம், மொட்டையடிக்கும் போராட்டம் என தினம் ஒரு போராட்டத்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரையில் எங்களது காத்திருக்கும் போராட்டம் தொடரும்’’ என்றார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இன்று 9-வது நாளாக தலையில் முக்காடு போட்டு, கையேந்தி மெளனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க