சூரியன் உதிப்பதற்கு முன்பே ஏமாறும் பயணிகள் - இது கன்னியாகுமரி சதுரங்கவேட்டை!

மாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிகழ்வு. ஆனாலும் ஏமாற்ற/ஏமாற ஒரு நேரம் காலம் கிடையாதா? சூரியன் உதிக்கும் முன்பே மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். எங்கு தெரியுமா? இந்திய தென்பகுதி எல்லையான கன்னியாகுமரியில்தான்!

கன்னியாகுமரி

சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் சூரியன் உதிப்பதைப் பார்க்க, ஆயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிவர். சூரியன் எப்போது உதயமாகும் என,  மக்கள் அனைவரும் கிழக்கு நோக்கியே பார்த்துக்கொண்டிருப்பர். அப்போது, சிலர் மண்வெட்டியுடன் கடலில் இறங்குவர். கடல் மண்ணை வெட்டி அரித்துப் பார்த்து எதையோ தேடுவார்கள். அதே சமயம் கடற்கரையில் சிலர் அரிப்புகளில் சிவப்பு, மஞ்சள், கறுப்பு, பச்சை எனப் பல வண்ணங்களில் நவரத்தின கற்கள் மாதிரி விற்றுக்கொண்டிருப்பர். அவற்றில் முத்து, பவழம்போல இருக்கும். `கடலிலிருந்து எடுத்தது' எனக் கூவியும், பயணிகளிடம் `கல்லு வேணுமா... கல்லு? மோதிரம் செஞ்சி போடலாம்' என ஒவ்வோர் இடமாகக் கேட்டு விற்பர். இதன் விலை 30 ரூபாயிலிருந்து தொடங்கும். காலை சூரியோதயத்தைப் பார்த்துவிட்டு, கடலில் கால் நனைத்த மகிழ்ச்சியில் ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிச் செல்வர்.

‘உண்மையில், கன்னியாகுமரி  கடலிலிருந்துதான் கலர்கலரான கற்களை எடுக்கிறார்களா?' என்ற சந்தேகம் வந்தது. இதனால் சூரியன் உதிப்பதற்கு முன்பே கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்துக்குச் சென்றோம். பயணிகளும் மக்களும் உதயசூரியனைக் காண ஆவலோடு காத்திருந்தனர். அதே சமயம் சிலர் கையில் மண்வெட்டியுடன் கடலில் இறங்கி மண்ணை வெட்டி அரித்து, தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தார்கள். கையில் அரிப்போடு கற்களை விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் பேசினோம்...

“இந்தக் கற்களை எங்கே இருந்து கொண்டுவர்றீங்க?'' என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்...

“கடல்ல இருந்து. அதோ மண்வெட்டியை வெச்சு வெட்றாங்களே, அவங்க தேடி எடுத்துவருவாங்க, நாங்க விற்கிறோம்'' என்றார்.

“கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?'' என்று கேட்டதற்கு, “நான் புதுசு. ஆறு மாசமாத்தான் விற்கிறேன். பின்னாடி ஒருத்தர் நிற்பார். அவர்தான் ரொம்ப வருஷங்களா விற்கிறார். அவர்கிட்ட கேளுங்க நிறைய தகவல் கிடைக்கும்'' என்று நழுவினார்.

கன்னியாகுமரி

இன்னொருவரிடம் கேட்கும்போது பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டார். அப்போது சில பயணிகள் கடலில் மண்ணை வெட்டி அரித்துக்கொண்டிருந்தவரிடம் கற்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அவர் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து கற்களைக் காண்பித்துக்கொண்டிருந்தார். “கடல்ல இருந்து இப்போதுதான் எடுத்தது'' எனச் சொல்லிக்கொண்டிருந்தார். பயணிகளும் `இவர்கள் கடலில் மண்ணை வெட்டி தேடியதைப் பார்த்துக் கற்களை உண்மையில் கடலிலிருந்துதான் எடுக்கிறார்கள்' என நம்பி வாங்கிச் சென்றனர். அப்போது அங்கு இருந்த கடற்கரை போட்டோகிராஃபரிடம் கேட்டோம்...

கன்னியாகுமரி

“இந்த கலர் கல்லு, கடல் கரையில இருந்து கிடைக்காது; ஆழ்கடல்லதான் கிடைக்கும். இங்கே விக்கிறது கன்னியாகுமரி சேட் கடையிலிருந்து வாங்கிட்டு வந்து, கடல்ல எடுத்ததாகச் சொல்லி விக்குறாங்க. இது டூப்ளிகேட். கிலோ கணக்குல குறைஞ்ச விலைக்கு  வாங்கிட்டுவந்து, அதைக் கொள்ளை லாபத்துக்கு விக்குறாங்க. மக்களும் நம்பி ஏமாந்து வாங்கிட்டுப் போறாங்க. கடல் மண்ணை வெட்டும்போது அதை பாக்கெட்ல போட்டுட்டு வெட்டுவாங்க. யாராவது கேட்டா, பாக்கெட்ல இருந்து எடுத்துக் குடுப்பாங்க. இவங்க கடல் மண்ணை எதுக்காக வெட்டித் தேடுறாங்கனா, பயணிகள் சில வேண்டுதல்களுக்காகக் காசு, தங்கம், வெள்ளி, வைரம்னு கடல்ல வீசுவாங்க. அதைத் தேடி எடுக்கிறதுதான் இங்கே வேலை. காலை 5 மணியிலேயிருந்து 9 மணி வரை வெட்டித் தேடிட்டு, வேற வேலைக்குப் போயிடுவாங்க'' என்றார்.

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!