Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மறைந்த ஓவியர் வீர சந்தானம் ஆசைப்பட்டது இதற்குத்தான்...!

வீர சந்தானம்

"அவ்வளவு லேசில் என் உயிர் போகாது. தனி ஈழத்தை பார்த்துவிட்டுதான் இந்த உயிர் பிரியும்'' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பார் வீர சந்தானம். அவரது மறைவு  காரணமாக தமிழ் சமூகம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது.

விருப்ப ஓய்வு

ஓவியர் வீர சந்தானம், கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில் என்ற ஊரைச் சேர்ந்தவர். நவீன ஓவியராக, சமூகப் போராளியாக அறியப்பட்டவர். மத்திய நெசவாளர் மையத்தில் பணியாற்றியவர். இந்த மையத்தின் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றியவர். 25 ஆண்டுகள் பணிக்குப் பின்னர், தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற அக்கறையோடு தானாக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். தஞ்சை அருகே விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தில் உள்ள சிற்பங்களுக்கான ஓவியங்களை வரைந்தவர்.  பாலுமகேந்திராவின் சந்தியா ராகம் திரைப்படத்தில் நடித்தவர். பீட்சா உட்பட மேலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகராக...   

கடந்த 2015-ம் ஆண்டு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல் நலம் தேறினார். ஈழத்தமிழர்களுக்கான கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார். கி.ராஜநாராயணன் எழுதி, இயக்குநர் வ.கெளதமன் இயக்கிய வேட்டி என்ற குறும்படத்தில் வீர சந்தானம் நடித்திருக்கிறார்.

வீர சந்தானம் மறைவை அடுத்து தமிழ் இன உணர்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். வ.கெளதமனிடம் வீர சந்தானத்தின் நினைவுகள் குறித்து கேட்டோம். "தம் வாழ்நாள் முழுக்க, தமிழ், தமிழ் இனம், தமிழ் ஈழ விடுதலை என வாழ்ந்த ஒரு தூரிகைக் கலைஞர். தம்முடைய மனைவி மனநிலை சரியில்லாத நிலையில் கூட, ஒரு குழந்தையைப் போல காதல் மனைவியைப் பார்த்துக்கொண்டவர். கூட்டங்களில் பங்கேற்க செல்லும்போது, தம் மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், உடனே வீட்டுக்குத் திரும்பி மனைவியை கவனித்துக்கொள்வார்.

குறும்பட நாயகர்

ஒரு முறை உடல் நிலைக்குறைவாக இருந்தபோது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். வெளிச்சம் படக்கூடாது என்று கூறி இருந்தனர்.

அந்த சமயத்தில் லயோலா கல்லூரி மாணவர்களுக்காக, கி.ராஜநாராயணன் கதையை வேட்டி என்ற பெயரில் குறும்படமாக நான் எடுத்தேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். மருத்துவர்கள் வெளியே சொல்லக் கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதைச் சொன்னார். என்னை கொல்லப்பார்க்கிறாய் என்றும் சொன்னார். அப்படி இல்லை. நீங்கள் முழுக் கதையையும் கேளுங்கள், நீங்களே நடிக்க விரும்புவீர்கள் என்றேன். அதன்படி முழுக் கதையையும் சொல்லி முடித்த உடன், 'நான் இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சாவேன்' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

என்னிடம் அவர், ஒரு பைசா கூட வாங்காமல் குறும்படத்தில் நடித்தார். தம் சொந்த செலவில் சென்னையில் இருந்து டாக்சியில் காஞ்சிபுரத்துக்கு நடிக்க வந்தார். அதேபோல குறும்படத்தின் இறுதிக் காட்சியில் மிகவும் ஆக்ரோஷமாக இந்த தேசத்தை நினைத்து காரி உமிழ்வது போன்ற காட்சி இருந்தது. அதில் ஆக்ரோஷமாக அவரால் கத்த முடியுமா என்று நினைத்தேன். அப்போது அவர், அதை மட்டும் டப்பிங்க் மூலம் குரல் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நான், இல்லை நீங்களே சொன்னால்தான் சரியாக இருக்கும் என்றேன். அதன் படி வேட்டி படத்துக்காக குரல் கொடுத்தார்.

போய்வா என் கதாநாயகனே  

தமிழினத்துக்காக உயிர்கொடுத்துப் போராடியவர். இந்த மண்ணில் இன்றைக்கு அவர் உயிரை விட்டிருக்கிறார். என்னை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்தவர். தமிழ் உணர்வோடு நான் இருக்க வேண்டும் என்று விரும்பினார். உலகம் முழுக்க இருந்து வீர சந்தானம் இழப்பு பற்றி என்னிடம் கேட்டு வருகின்றனர்.

போய் வா என் கதாயாநாயகனே,
உன் ஆன்மா அமைதியாகட்டும்
உன் சொல், உன் செயல் அசராமல்
பின் தொடர்கிறோம் போய்வா

அவர் பணியை நாங்கள் பின் தொடருவோம் என்பதுதான் அவருக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலியாக இருக்கிறது. 'எவ்வளோ ஓவியங்களை தீட்டி இருக்கிறேன். ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வைக்கப்பட்ட சிற்பங்களுக்காக, நான் வரைந்த ஓவியமும், வேட்டி படத்தில் நடித்ததையும் தமிழ் இனம் என்றைக்கும் மறக்காது' என்று என்னிடம் கூறி இருக்கிறார்" என்று குறிப்பிட்டார். தனி தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற அவரது ஆசை மட்டும் இன்னும் நிறைவேறவில்லை. தமிழ் இன உணர்வாளர்களில் அந்தப் பணியை வீர சந்தானம் ஒப்படைத்துச் சென்றுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement