Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா இருக்கும்போது இதைச் சொல்லியிருக்கலாமே... ரஜினியை விளாசும் அன்புமணி!

'எதையும் முழுமையாக முடிவெடுக்கத் தெரியாத நபர் ரஜினிகாந்த்' என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


மதுக்கடைகளை மூட சட்டப்போராட்டம் நடத்திய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு பா.ம.க சார்பில் பாராட்டு விழா அரியலூரில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அன்புமணி, "டாஸ்மாக்குக்கு எதிராக நாங்கள் வழக்கு போட்டபிறகுதான் இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளையும் மூட வைத்தோம். தமிழகத்தில் 55 விழுக்காடு டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் நிலையில் விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். எல்லா இடங்களிலும் பிளாக்கில் மதுபானங்கள் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இது எவ்வளவு கேவலம். இதைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசு கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. மக்கள் செத்து மடிந்தால்கூட கவலையில்லை. இவர்களுக்குப் பதவி பறிபோய்விடக்கூடாது என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.
காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். நமக்கு சோறு போடும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். மக்களை வஞ்சிக்கும் ஓ.என்.ஜி.சி, மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற திட்டங்களை இங்கிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திப் பார்த்துவிட்டேன் எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயத்தை காக்க மாபெரும் புரட்சியில் ஈடுபடப்போகிறோம்.

 

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஒன்றரை கோடி மக்கள் ஓட்டு போட்டு காப்பாற்றியதுபோல், ஒன்றரை கோடி மக்கள் எனக்கு ஓட்டு  போட்டிருந்தால் நான் தமிழக மக்களின் தலை எழுத்தையே மாற்றியிருப்பேனே. இது ஏன் உங்களுக்கு தெரிவதில்லை. கூத்தாடிகளிடம் நாட்டை கொடுத்து குட்டிசுவராக்கியது போதாதா. இன்னும் குட்டிசுவராக்கனுமா யோசிக்க வேண்டும் மக்களே. தமிழ் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்பது 40 ஆண்டு கழித்து இப்போதுதான் ரஜினிக்கு தெரியவந்ததா. இந்தச் செய்தியை ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சொல்ல வேண்டியதுதானே. அப்போது விட்டுவிட்டு இப்போது சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம். அதேபோல கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்திய அப்போதே ரஜினி சொல்லியிருக்கலாமே. அப்போதெல்லாம் சொல்லாமல் இப்போது சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம். எதையும் முழுமையாக முடிவெடுக்கத் தெரியாத நபர் ரஜினி.

தமிழகத்தின் மானத்தை காற்றில் பறக்க வைத்தவர் ஜெயலலிதா. அவர் உயிருடன் இருந்திருந்தால் ஊழல் வழக்கில் சசிகலாவுடன் ஜெயிலுக்குச் சென்றிருப்பார். தெருவில் நடந்து சென்றால்கூட எடப்பாடி பழனிசாமியை யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. இவருக்கு எதற்காக இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு. சின்னத்தைப் பார்த்து ஓட்டுபோட்ட மக்கள் இனி திட்டத்தைப் பார்த்து ஓட்டுப் போட வேண்டும். 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டை  நாசப்படுத்தியவர்களைத் தூக்கிப் போடுங்கள். இனி நாட்டுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருபவர்களுக்கு ஓட்டு போடுங்கள். தமிழகத்தை முன்னேற்ற பல திட்டங்கள் என்னிடம் இருக்கிறது. ஆறுமணி நேரம் நீர் மேலாண்மையைப் பற்றிப் பேசுவேன். ஸ்டாலின் பேசுவரா, எடப்பாடி பேசுவாரா. தி.மு.க. டி.என்.ஏ.யில் ஊழல் நிறைந்துள்ளது. ஊழல் கட்சியை மாற்ற முடியாது. ஊடகம் மனம்மாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் மாற்றம் வரும்" என்று பேசிமுடித்தார்.

அடுத்ததாகப் பேசிய ராமதாஸ், "யாரைப் பார்த்தாலும் மக்கள் கேட்கும் கேள்வி இன்னுமா இந்த ஆட்சி உள்ளது. இதை முடிக்கப்போவது பா.ம.க-தான். தமிழகத்தில் 200 , 300-க்கு மக்கள் லஞ்சம் வாங்கி ஓட்டை விற்றுவிட்டீர்கள். ஆனால், இனிமேல் அதுபோல் செய்யமாட்டீர்கள் என நினைக்கிறேன். பெண்கள் குடிநீருக்குப் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை. இதை எங்களால் போக்க முடியும். தமிழகத்தில் 81 லட்சத்து 18 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். 20 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலையைத் தந்து இருக்கலாம். ஆனால், யாரும் தரவில்லை. ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் வேலைக்காக ஒன்று சேர்ந்து வேலை கொடு, இல்லை சோறு போடுனு ஒரு போராட்டத்தை ஏன் நடத்தக்கூடாது. தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், பொது நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களுக்குத்தான் வேலை வழங்கப்படுகிறது. மிகப்பெரிய அநீதியாகும். இந்த நிலைமாற வேண்டும். இதற்கு பா.ம.க போராட்டத்தை நடத்தும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement