வயிற்றுப் பிழைப்புக்காக பிள்ளைபோல் வளர்த்த தென்னை மரங்களை விற்பனைசெய்த விவசாயிகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில், 20 ஊராட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திருப்புவனம் வட்டத்தின் ஒரு பகுதி, வைகை ஆற்றுப் பாசனமாகவும் மறு பகுதி வானம் பார்த்த பூமியாகவும் உள்ளது. இந்தப் பகுதியில், 13 ஹெக்டேரில் நெல் விவசாயம் நடைபெற்றுவந்தது. தற்போது போதிய மழை இல்லாததால், ஒரு சில பகுதிகளில் மோட்டார் பம்ப்செட் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக மழை இல்லாததால், விவசாய நிலங்கள் அனைத்தும் பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கின்றன. விவசாயமும் இல்லாமல் கால்நடை வளர்ப்பும் கை கொடுக்காததால், விவசாயிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

           

    

விவசாயிகளின் அவல நிலையைத் தெரிந்துகொண்ட புரோக்கர்கள், அவர்களுடைய வயல்களில் உள்ள தென்னை மரங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, வெளியூர்களுக்கு அனுப்பி விற்பனை செய்துவருகின்றனர்.

இந்தப் பகுதியின் விவசாய சங்கத்தின் தலைவர் தண்டியப்பனிடம் பேசும்போது....

 ' திருப்புவனம்' வட்டாரத்தில் மணலூர், பழையூர், கீழடி, கொந்தகை, மாரநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. பட்டா நிலங்களில் உள்ளது போக மதுரை-பரமக்குடி சாலையிலும் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இவற்றை சிலர் இரவு நேரங்களில் வெட்டிக் கடத்திவருகின்றனர். பட்டா நிலங்களில் ஒரு பனை மற்றும் தென்னை மரங்களை 70 முதல் 80 ரூபாய் வரை வாங்கும் புரோக்கர்கள், செங்கல் சூளைகளுக்கு அவற்றை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை வைத்து விற்பனைசெய்துவருகின்றனர். பனை மற்றும் தென்னை மரங்கள் நீண்ட நேரம் நின்று எரியும் என்பதால், செங்கல் சூளை அதிபர்கள் தென்னை மரங்களை  விலைக்கு வாங்கிப் பயன்படுத்திவருகின்றனர்.

 ஏற்கெனவே மழையின்றித் தவித்து வரும் நிலையில், வயல்களில் உள்ள தென்னை மரங்களைத் தங்கள் குழந்தைபோல வளர்த்து, அவற்றை விற்பனைசெய்துவருவதால், விவசாயிகள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். மேலும், மழையளவு குறைய வாய்ப்புண்டு என்பதுடன் தென்னையை நம்பியே உள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தென்னை மரங்களை வெட்ட தடை ஏதும் இல்லாததால்,தினசரி நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுவருகின்றன.

எனவே, வறட்சி காரணமாக தென்னை மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வனத்துறையும் வருவாய்த்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!