மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது..! மு.க.ஸ்டாலின் தாக்கு | Tamilnadu government betrayed students, says M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (14/07/2017)

கடைசி தொடர்பு:15:03 (14/07/2017)

மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது..! மு.க.ஸ்டாலின் தாக்கு

‘தமிழக மாணவர்களுக்கு, அரசு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்துள்ளது' என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

மு.க. ஸ்டாலின்

சட்டப் பேரவைக் கூட்டத்தொடருக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்றுவரும் பணிகளைப் புதிய அறிவிப்புகள் போல முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்துவருகிறார். மானியக் கோரிக்கைகளில் அளிக்கப்படும் பதில்கள், கேள்வி நேரங்களில் அளிக்கப்படும் பதில்கள் உறுதிமொழி குழுவுக்கு அனுப்பப்படும். அதேபோல, 110 விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளும் உறுதிமொழிக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில், தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாக மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். ஆனால், அதற்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களை அரசு காவு வாங்கியுள்ளது. அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளது' என்று தெரிவித்தார்.