வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (14/07/2017)

கடைசி தொடர்பு:16:19 (13/07/2018)

இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! தினகரன் பெயர் இல்லை

இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

டிடிவி தினகரன்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அப்போதைய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர். ஜூன் 1-ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. 

இந்நிலையில் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ், தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெயர் மட்டும்தான் இடம் பெற்றுள்ளதாம். டி.டி.வி.தினகரனின் பெயர் இதில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தினகரன், வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி போலீஸ், 'வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என்று கூறியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டெல்லி காவல்துறை இணை ஆணையர் பிரவீன் ரஞ்சன் ‘இன்னும் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. தினகரன் குற்றவாளி இல்லை என்று கூற முடியாது’ என்றார்.