வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (15/07/2017)

கடைசி தொடர்பு:18:14 (15/07/2017)

ஜி.எஸ்.டி-யால் ஏற்றுமதி ஏறுமுகமா, இறங்குமுகமா? #GST

நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரு வரி’ என்பது தாரக மந்திரமாகிவிட்டது. ஜிஎஸ்டி (GST) எனும் சொல் நாட்டையே ஆக்கிரமித்துவிட்டது. சாமானியர்களுக்கும் நுகர்வோர்களுக்கும், சிறு/குறு வணிகர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் இது ஒரு திடீர் அறிமுகம்போல இருக்கலாம். ஆனால், பொதுவாக வணிகர்களும், தொழில்துறையினரும் ஜிஎஸடி-யைக் கற்றுக்கொள்வது என்பது வேறு; நடைமுறை என்பது வேறு. 

ஜிஎஸ்டி GST

ஜிஎஸ்டி-யின் முதன்மையான பலன், நாடு ஒரு பொதுச் சந்தையாகிவிட்டது என்பதுதான். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது ஒரு குறிப்பிட்ட சேவை நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரே வரி விகிதத்தில் கிடைக்கும். ஒரு பொருளின் அல்லது ஒரு சேவையின் மேல் பல வரிகள் என்பது இனி இருக்காது. வணிக வளர்ச்சிக்குத் தடையாக இருந்த ஆக்ட்ராய், நுழைவு வரி போன்றவை இனி இருக்காது. வணிகம் மற்றும் தொழில்துறை விதிமுறைகள் எல்லாம் குறையும். வெவ்வேறு வரிகளுக்காக வெவ்வேறு அதிகார மையங்களுக்கு விதவிதமான அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டியிருந்த கட்டாயம் இனி இருக்காது. 

நுகர்வோரும் அவர்கள் வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகள் மீது விழும் வரிகளைப் புரிந்துகொள்ளலாம். பெரும்பாலானவற்றில் பொருள்கள் மீது தொடர் வரிகள் விழுவதும் நீங்கி, நிறுவனத்தின் உற்பத்திக்கு கடன் பேரில் பொருள்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து கிடைக்கும் என்பதால், ஒரு பொருள் அல்லது சேவை மீதான வரிவிதிப்பின் மொத்த சுமை குறையும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி நடைமுறையால் ஏற்றுமதி எப்படி இருக்கும் என்பது குறித்து பாங்க் ஆஃப் இந்தியா, முன்னாள் துணை மண்டல மேலாளர் மு.எ.பிரபாகரபாபுவிடம் கேட்டோம்.

"ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள ஒரு விதிப்படி, உள்வந்த சேவை மீது செலுத்திய வரிகள், வெளிச்சென்ற சேவையின் மீதான வரியைவிட அதிகமாக இருந்தால் தொழில் ஒப்பந்தங்கள் போன்றவை தவிர்த்த பிறவற்றில் பணத்தைத் திருப்பித் தரப்படும். அதுபோன்ற ஒரு அறிவியல்பூர்வமான வரிவிதிப்பு, எல்லா மறைமுக விரிகளையும் நீக்கி, ஒட்டுமொத்தமான வரிச்சுமையைக் குறைக்கும். இது நுகர்வோருக்கு பெரும் பலன்களைக் கொடுப்பது உறுதி. ‘இந்தியாவில் தயாரி’ நோக்கத்துக்கு ஜிஎஸ்டி ஒரு பெரிய வரமாகக் கருதப்படுகிறது. சிலவற்றில், தற்போதுள்ள கூடுதல் சுங்க வரிக்கான விலக்கும் நீங்கிவிடும். உள்நாட்டுப் பொருள் உற்பத்தியாளர்கள் கலால் வரியுடன், முழு மதிப்புக்கூட்டு வரி செலுத்த, இறக்குமதிப்பொருள் மீது 4% கூடுதல் சிறப்பு வரியாக இருக்கும். இது உள்நாட்டில் பொருள் உற்பத்தி செய்பவர்களுக்கு ஒரு எதிர்மறை பாதுகாப்பைக் கொடுக்கிறது.

ஜிஎஸ்டி நடைமுறையில், இறக்குமதியாகும் அனைத்துப் பொருள்களுக்கும் முழு மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக (ஐஜிஎஸ்டி) செலுத்தப்படும்; இது இறக்குமதியோடு வைத்துப் பார்க்கையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு முழுமையான சம வணிகச் சந்தையை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி நடைமுறை, ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கக் கூடும். பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது, அவற்றின் மீது உள்நாட்டில் செலுத்தப்பட்ட வரிகள் முற்றிலுமாகத் திருப்பித்தரப்படும். ஏற்கெனவே ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு இருந்த ‘வரி திரும்பப்பெறல்’ நடைமுறையில் ஏற்றுமதி பொருள்கள் மீது செலுத்தப்பட்ட மத்திய வரிகளைத் திருப்பப்பெறும் முறை இருந்தது. 

ஆனால், ஏற்றுமதிப் பொருள்களுக்கான உள்ளீட்டுப் பொருள்கள் மீது செலுத்தப்பட்ட மதிப்புக்கூட்டுவரிகளுக்கு இது பொருந்தாது. பெரும்பாலான மாநிலங்கள் மதிப்புக்கூட்டுவரியை ஏற்றுமதியின்போது திருப்பித் தருவதில்லை; அல்லது ஓரிரு வருடங்களுக்குப் பிறகே திருப்பித் தருகின்றன. ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு, ஏற்றுமதிகளின் உள்ளீட்டுப் பொருள்களின்மீது செலுத்தப்பட்ட மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகளும், மத்திய அல்லது மாநில அரசின் ஒற்றை அதிகார மையத்தால் திருப்பித் தரப்படும். திரும்பப் பெறலுக்கான முழுமையான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட ஏழு நாள்களுக்குள் 90 சதவிகிதத் தொகை இடைக்காலத் தொகையாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வெளிநாட்டிலிருந்தோ அல்லது உள்நாட்டின் வரிவிதிப்பு பகுதியில் இருந்தோ, ஒருங்கிணைந்த வரியைச் செலுத்தாமலே பொருள்களைக் கொணரும் ஏற்பாடும் உள்ளது. அதாவது, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அன்றாடச் செயல்பாட்டு மூலதனத்துக்குத் தடை இருக்காது. ‘இந்தியாவில் தயாரி’ திட்டமும் பெரிதும் வளரும். ஜிஎஸ்டி என்பது முதலிலிருந்து இறுதிவரைக்குமான வரிவிதிப்பு முறை என்பதால், அரசு வருவாயில் நிறைநிலை இருந்தபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பதிவு செய்யப்பட்ட விற்பனையாளரிடமிருந்து பொருள்களை வாங்கி உள்ளீட்டு வரிவரவு எடுத்துக்கொள்ளும் வசதி இருப்பதனால் இந்நிலை உருவாகக்கூடும். இது ஒவ்வொருவரையும் வரிசெலுத்தலுக்குள் வருவதற்கு ஊக்கப்படுத்துவதாக அமையும். மேலும், பொருள்கள் மற்றும் சேவைகள் சார்ந்த, அந்தந்த வியாபாரங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் விலைப்பட்டியல் வாரியாகப் பொருத்திச் சரிபார்க்கப்படுவதால் வரியைத் திருப்பித்தருதல் எளிதாகும்; உள்ளீட்டு வரி மோசடிகளும் தவிர்க்கப்படும்" என்றார் அவர். 


டிரெண்டிங் @ விகடன்