சுவையான சாத வகைகளோடு காமராஜர் விழா கொண்டாடிய பள்ளி! | kamarajar birthday celebration in school

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (14/07/2017)

கடைசி தொடர்பு:17:50 (14/07/2017)

சுவையான சாத வகைகளோடு காமராஜர் விழா கொண்டாடிய பள்ளி!

காமராஜர்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் அனைத்துக் கட்சியினராலும் கொண்டாடப்படுபவர். அவர் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறைக் கொண்டு பல திட்டங்களை உருவாக்கியவர். அவற்றில் ஒன்றுதான் மதிய உணவுத் திட்டம். படிப்பதற்கு அனுப்பாமல் பசியைப் போக்குவதற்காக தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர் பெற்றோர். இந்த நிலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டார் காமராஜர். அதன் விளைவே பிள்ளைகளுக்குப் படிப்போடு மதிய உணவை வழங்க முடிவெடுத்து, செயல்படுத்தினார்.

அரசுப் பள்ளி

காமராஜரின் பிறந்த நாள் நாளை (ஜூலை 15) நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஒரு முன்னதாகவே கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் அந்தத் திட்டம் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் இன்றைக்கான சத்துணவாக பல வகை சாதங்களைச் சமைத்தனர். இதனை தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பரிமாறியிருக்கிறார்கள். காமராஜருக்கு அரசு உதவிப் பெறும் பள்ளியின் நன்றித் தெரிவிக்கும் விதமாக இந்நிகழ்வு நடந்தது.