Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘கொடைக்கானல்ல இரோம் ஷர்மிளா தங்குறதுல இவங்களுக்கு என்ன பிரச்னை?’’ கொதிக்கும் சூழலியல் போராளி அர்ச்சனா#Irom Sharmila

இரோம் ஷர்மிளா

 


மணிப்பூர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ராணுவச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தவர் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா. தனது வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்காக அகிம்சை வழியில் போராடிக் கழித்தவர். அதே மக்கள் மத்தியில் சுயேட்சையாக தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவியபோதும் கலங்காதவர். இருந்தும், 'மக்களின் உரிமைக்காக அறவழியில் என் போராட்டம் தொடரும்' என்று சொல்லும் அந்த அகிம்சை மனுஷிக்குக் கொடைக்கானலில் அடுத்தடுத்து நடக்கும் அவமரியாதைகள் வருத்தம்கொள்ள வைக்கின்றன.  

ஒரு போராளியாக கொடைக்கானல் மண்ணில் இரோம் ஷர்மிளா காலடி எடுத்து வைத்தபோது அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கியவர்கள் பலர். ஆனால், அங்கு நடைபெற இருக்கும் ஷர்மிளாவின் திருமணத்துக்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது முரணாக இருக்கிறது. அரசியல் தோல்வியை அடுத்து மன அமைதிக்காக கேரளாவில் சில நாள்கள் இரோம் ஷர்மிளா சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அரசியல் மற்றும் போராட்டங்களில் இருந்து சில நாள்கள் தான் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்த அவர், அடுத்தடுத்து மன அமைதிக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார். விரைவில் தனது காதலரை மணந்துகொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த 12ம் தேதி, தன் காதலரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேஷ்மாண்ட் கௌடின்ஹோவை கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொள்ள விண்ணப்பித்தார் ஷர்மிளா. டேஷ்மாண்ட், கொடைக்கானலில் தங்கியிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். எனவே, திருமணத்துக்குப் பின் தான் கொடைக்கானலில் வசிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார் ஷர்மிளா. இந்தியத் தனித் திருமணச்சட்டத்தின் படி, திருமணத்துக்கு முறைப்படி விண்ணப்பித்து 30 நாள்கள் எதிர்ப்பு இல்லாத நிலையில் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கொடைக்கானல் சார்பதிவாளர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்  ஷர்மிளாவின் திருமணம் கொடைக்கானலில் நடப்பதற்கு மகேந்திரன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இரோம் ஷர்மிளாவைப் பார்க்க பல போராளிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வதாகவும், அப்படி வரும் நபர்களால் பின்னாளில் கொடைக்கானலின் அமைதிக்குப் பிரச்னை வரலாம் என்றும், அதனால் அங்கு சுற்றுலாத் தொழில் பாதிக்கப்படும் என்கிற ரீதியிலும் அவர் இரோம் ஷர்மிளாவின் திருணமத்தைக் கொடைக்கானலில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களுக்காகப் போராடிய ஒரு சமூகப் போராளிக்கு அடிப்படை மனித உரிமையை மறுக்கும்படி கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மனு, பலரையும் கொதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 

கொடைக்கானல் பகுதியில் உள்ள பாதரசம் ஃபேக்டரியால் உருவாகும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடி வரும் சூழலியல் போராளி அர்ச்சனா சேகரிடம் இது குறித்துப் பேசினோம். அவர் இந்த விஷயத்தில் தனது கோபத்தையும், ஷர்மிளாவுக்கான ஆதரவையும் பகிர்ந்துகொண்டார். 

 

இரோம் ஷர்மிளா

'' 'தி அதர் மீடியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கொடைக்கானலில் உள்ள பாதரச ஃபேக்டரிக்கு எதிராக கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நான், கொடைக்கானல் மக்களின் உரிமைகளை மீட்பதற்காக பல போராட்டங்கள் நடத்தியுள்ளேன். 2016ம் ஆண்டு அந்த ஃபேக்டரியில் வேலை பார்த்து பாதிக்கப்பட்ட 591 பேருக்கு இழப்பீடு கிடைக்க எங்கள் போராட்டம் உதவியிருக்கிறது. அந்த ஃபேக்டரியால் கொடைக்கானல் காற்றிலும், தண்ணீரிலும் இன்னும் மாசு கலந்துகொண்டுதான் இருக்கிறது. மேலும், கொடைக்கானல் மக்களுக்குப் படிப்பு, மருத்துவம், போக்குவரத்து என ஆயிரம் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இதையெல்லாம் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடாமல், 'இரோம் ஷர்மிளாவின் திருமணம் கொடைக்கானலுக்குக் கேடு விளைவிக்கும்' என்று எதிர்ப்புத் தெரிவிப்பது அபத்தமாக இருக்கிறது. கொடைக்கானலில் இரோம் தங்குவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? 

இது பொது சமூகத்தின் மலிவான புத்தியைத்தான் காட்டுகிறது. சமூகத்துக்காகப் போராடும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தியாகியாகவே வாழ்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர். அதை வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், அந்தப் பெண் தான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வரும்போது விமர்சிக்கக் கிளம்பிவிடுகிறார்கள். பலருக்குப் பெண்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்வதில் பிரச்னை, சிலருக்கு ஒரு பிரபலத்தை எதிர்ப்பதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்ற எண்ணம். இதற்கெல்லாம் ஷர்மிளாவை பலியாக்குகிறார்கள். 

அவர் தான் வாழும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. அதை எதிர்க்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மக்கள் பிரச்னைக்காக அகிம்சை வழியில் போராடி தன் வாழ்வில் பாதியை இழந்து நிற்கும் பெண்ணை அவமதிப்பது கண்டனத்துக்கு உரியது. இரோம் ஷர்மிளாவின் திருமணம் கொடைக்கானலில் நடக்கவிருப்பதை மனதார வரவேற்கிறோம். அவர் எங்கள் மண்ணில் நிறைவுடன் வாழ வாழ்த்துகிறோம்!" 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close