Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கு நடக்கும் விஷால் திருமணம்? என்ன சொல்லப்போகிறது நீதிமன்றத் தீர்ப்பு?

விஷால்

எம்.ஜி.ஆர், சிவாஜி எஸ்.எஸ்.ஆர் துவங்கி இன்றைய விஷால் தலைமை வரை நடிகர் சங்க விவகாரம், ஒரு திரில்லர் படத்துக்குரிய கதையம்சத்துடன் நகர்கிறது.

சினிமா நடிகர்கள் பொதுவாக தாங்கள் நடித்து வெளியாகப்போகும் படத்தின் ரிலீஷ் தேதியைத்தான் பரபரப்பும் பரிதவிப்போடும் எதிர்பார்த்து நிற்பார்கள். முதன்முறையாக நீதிமன்றத்தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக 33 அடி சாலையை ஆக்கிரமித்திருப்பதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் தீர்ப்புத் தேதி வரும் 18ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படபடப்பு இன்னும் கூடியுள்ளது. சென்னை, தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ளது நடிகர் சங்க அலுவலகம். சங்கம் துவக்கப்பட்டபோது அதற்கென சொந்தக் கட்டிடம் இல்லை. பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியம் இல்லம், ராயப்பேட்டையில் தற்போது அதிமுக அலுவலகம் உள்ள இடம் எனத் தற்காலிகமாகப் பல இடங்களில் செயல்பட்டபின் 1957 ம் ஆண்டு சங்கத்திற்காக தற்போதுள்ள இடம் வாங்கப்பட்டது. இன்றுவரை நடிகர் சங்கம் இங்குதான் செயல்பட்டுவருகிறது. 

நடிகர் சரத்குமார் தலைமையிலான கடந்த நிர்வாகம், சங்கத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்த நிலையில் விஷால் மற்றும் நாசர் தலைமையில் திரண்ட கணிசமான நடிகர்கள், சங்க இடத்தைக் குறைந்த விலைக்குத் தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விட்டு லாபம் அடைந்ததாக சரத்குமார் அணி மீது குற்றச்சாட்டு எழுப்பினர்.  

இந்நிலையில் அடுத்துவந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி படுதோல்வி அடைந்து பாண்டவர் அணி எனப்பட்ட விஷால் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும் விஷால் செயலாளராகவும் தேர்வாகினர். புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதும் முதல்வேலையாக, தனியார் கட்டுமான நிறுவனத்துடன் முந்தைய நிர்வாகம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ததுடன் “நடிகர் சங்கக் கட்டடத்தை விரைவில் கட்டி எழுப்புவோம்” என சூளுரைத்தது. அதற்கான ஆரம்பப் பணிகளையும் துவக்கியது. 

விஷால்

26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு மாடிகளுடன் புதிய கட்டடம், நவீன தொழில்நுட்பத்துடன் சங்கத்திற்கென கட்ட புதிய நிர்வாகம் முடிவெடுத்தது. நடிப்புப் பயிற்சிக் கூடம், நவீன ஜிம், தியேட்டர் பிரம்மாண்ட மீட்டிங் ஹால் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டிடம் அமையும் என நடிகர் சங்கம் அறிவித்தது. சென்டிமென்டாக தன் கல்யாணமும் இங்குதான் நடக்கும் என சினிமா பாணியில் கூறி உறுப்பினர்களை நெகிழ வைத்தார் விஷால். 

கடந்த மார்ச் மாதம் 31 - ம் தேதி புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்த நிலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பு செய்ததாக நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு கிளம்பியது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடமும் புகார் தரப்பட்டது. 

நடிகர் சங்க வளாகம் எனக் கூறப்படும் இடத்தில் காலம் காலமாக புழக்கத்தில் இருந்துவரும் மாநகராட்சிக்குச் சொந்தமான 33 அடி பொதுச்சாலையை ஆக்கிரமிப்பு செய்ததுடன் அதிகாரிகள் துணையுடன் அதைப் போலியான ஆவணங்களாக்கி உள்ளதாகவும் நடிகர் சங்கத்தின் மீது புகார் கூறப்பட்டது. 

சரத்குமார்நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக பட்டா நகலில் சம்பந்தப்பட்ட இடத்தின் நான்கு திசைகள் மற்றும் அதுதொடர்புடைய சாலைகள் தெளிவான நீல அகலங்களுடன் வரைபடம் (diagram)இருக்கவேண்டும்” என்ற நடைமுறையை அதிகாரிகள் காற்றில் பறக்கவி்ட்டதாக அங்கு வசித்துவரும் வித்யோதயா காலனி மக்கள் சார்பாக புகார் சொல்லப்பட்டது. பிளான் சர்வேயில் மாநகராட்சிக்குச் சொந்தமான 33 அடி சாலை,  திட்டமிட்டு மறைக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது என அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த ஆக்கிரமிப்பின் மதிப்பு ரூபாய் 8 கோடி என்கிறார்கள். 

கடந்த காலத்தில் நடிகர் சங்க கட்டடம் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுவதாக தி.நகர் வித்யோதயா காலனி சார்பாக பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அங்கு வசித்துவருபவர்களில் ஒருவரான காழியூர் ஸ்ரீரங்கன் என்பவர். இந்த வழக்கின் தீர்ப்பு தேதியைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 18 ந்தேதி என அறிவித்துள்ளது. 

ஸ்ரீரங்கனிடம் பேசினோம். “நடிகர் சங்க வளாகத்தில் அபிபுல்லா சாலையையும் பிரகாசம் சாலையும் இணைக்கும் 33 அடி சாலை எங்கள் குடியிருப்பு பகுதியான வித்யோதயா காலனி வழியாக செல்கிறது. இது பலவருடங்களாக புழக்கத்தில் இருந்த ஒரு சாலை. நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டது 57 ல்தான். ஆனால் எங்கள் குடியிருப்புகள் 40 களிலேயே உருவாகிவிட்டது. இந்த 33 அடி சாலைக்கான ஜக்பந்தி, எங்கள் ஒவ்வொருவருடைய வீட்டின் ஆவணங்களிலும் தெளிவாக உள்ளது. நடிகர் சங்கம் சங்கரதாஸ் ஸ்வாமிகள் கலை மன்றம் என்ற பெயரில் இயங்கியபோதும் பின்னாளில் டிராமா தியேட்டராக இயங்கியதுவரை அந்த இடத்தில் பல ஆண்டுகளாக ஒரு தபால் நிலையம் செயல்பட்டு வந்தது. அதை 80 கள் வரை எந்த தடையுமின்றி பயன்படுத்திவந்திருக்கிறோம். இத்தனையையும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் அதிகாரிகளிடம் மோசடியாக பெற்ற சில ஆவணங்களை வைத்துக்கொண்டு தங்களுடையது என உரிமை கொண்டாடியது நடிகர் சங்கம். அந்த வழியையும் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருக்கிறது நடிகர் சங்கம். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு, 'இருட்டிவிட்டது' என்றதுபோல், தங்களுடைய ஆவணத்தில் அப்படி எதுவும் இல்லை என்பதால் அது எங்கள் இடம்தான் என ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் சிஎம்டிஏ, மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறது. இது மிகப்பெரிய மோசடி.  தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் பிரிவு 2 ன்படி தண்டனைக்குரிய குற்றமும் கூட.  

ஸ்ரீரங்கன்இதை எதிர்த்து குடியிருப்புவாசிகளில் ஒருவரான நான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் விரிவான ஒரு கடிதம் அனுப்பியிருந்தோம். நடிகர் சங்கத்தின் அப்போதைய சரத்குமார் தலைமையிலான நிர்வாகத்தை அழைத்துப்பேசிய அவர் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்திருப்பதைக் கடுமையாகக் கண்டித்ததாக சொன்னார்கள். இப்போது வழக்கின் தீர்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் இன்று திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என சிலர் கேட்கிறார்கள். அன்றைக்கு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா எனத் திரையுலகினரே ஆட்சியில் இருந்ததால் அவர்களிடம் இந்தப் பிரச்னையைக் கொண்டு போகத் தயக்கம் இருந்தது. இன்று அந்த நிலைமை இல்லை. அதேசமயம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டாலும் முன்பு எங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது வணிக நோக்கத்தோடு அங்கு பெரிய பெரிய கட்டடங்கள் எழுப்பத் திட்டமிட்டுள்ளது நடிகர் சங்கம். தன் திருமணம் இங்குதான் நடக்கும் என விஷாலே அறிவித்திருக்கிறார். குடியிருப்புப் பகுதியான இங்கு விஷால் போன்ற பிரபலங்களின் திருமணம் மற்றும் விசேஷங்கள் நடக்கத்துவங்கினால் திரண்டு வரும் கூட்டம் மற்றும் வாகன நெருக்கடிகளால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். நிம்மதி பறிபோகும். அதனால்தான் சட்டப்போராட்டம் நடத்த முடிவெடுத்தோம். என்றார். 

“தீர்ப்பு நடிகர் சங்கத்துக்குச் சாதமாக இல்லாமல்போனால், 33 அடி சாலையை இழக்கவேண்டியது வருவதோடு, இதனால் தங்களின் லே அவுட்டை மொத்தமாக மாற்றவேண்டியதிருக்கும்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர். 

“கட்டடத்தின் பரப்பளவுக்குத்தக்கபடிதான் எத்தனை தளம் என்பது முடிவாகும். அதனால் 33 அடி சாலை இல்லாமல் போகுமானால் முந்தைய லே அவுட்டின்படி கட்டடம் எழுப்பமுடியாது. மூன்றில் ஒரு பங்கு இடம் குறைந்துவிட்டால் கட்டட அளவும் சுருங்கிப்போகும். மேலும், சாதாரணமாக 1000 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்குக் கூட அனுமதிப் பெற கார் பார்க்கிங்குக்கான இடத்தையும் லே அவுட்டில் குறிப்பிடவேண்டும் என்கிறது விதி. அப்படியிருக்கையில் இத்தனை வசதிகள் கொண்ட நவீன கட்டடத்தினை பயன்படுத்துவோர் எண்ணிக்கையின் படி பார்த்தால் குறைந்தது 500 முதல் 1000 கார் நிறுத்துவதற்காகவாவது இடவசதியை ஏற்படுத்தவேண்டும். இதற்கு வாய்ப்பு குறைவு. அப்படி முடியாதபோது அனுமதி கிடைப்பதில் சிக்கல் உருவாகி கட்டடமே எழும்பாமல் போக வாய்ப்புண்டு.

விஷால்

 எனக் கவலைப்படுகிறார் அந்த மூத்த நடிகர். 

பதற்றத்துடன் காலண்டரைப் பார்த்தபடி இருக்கிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள். 18ந்தேதி தெரிந்துவிடும் நடிகர் சங்கத்தின் 'க்ளைமேக்ஸ்'

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement