" 'முத்துக்குமாரபுரம்' என்று பெயர் வைத்தபோது மகிழ்ந்தவர் வீரசந்தானம்!" - நெகிழும் இயக்குநர் | Veera Santhanam demise made me sad, says this Tamil Director

வெளியிடப்பட்ட நேரம்: 21:16 (14/07/2017)

கடைசி தொடர்பு:21:16 (14/07/2017)

" 'முத்துக்குமாரபுரம்' என்று பெயர் வைத்தபோது மகிழ்ந்தவர் வீரசந்தானம்!" - நெகிழும் இயக்குநர்

ஓவியர் வீரசந்தானம் மறைந்தார். தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது, கலைத் துறை, ஓவியத் துறை எனப் பல்துறை சார்ந்தவர்களிடையேயும் அவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுப் பணியில் இருந்தாலும், தொடர்ந்து ஓவியத் துறையில் தன் பங்களிப்பை அளித்துவந்தார். அதேபோல் திரைத் துறையிலும் அவர் தன் இருப்பைப் பதிவுசெய்துள்ளார். பாலுமகேந்திராவின் `சந்தியாராகம்' படத்தில் தொடங்கி பல்வேறு படங்களிலும் நடித்தவர். தோற்பாவைக் கலைஞராக வீரசந்தானம் நடித்த `அவள் பெயர் தமிழரசி' படத்தின் இயக்குநர் மீரா கதிரவன், அவர் குறித்த நினைவுகளைப் பகிர்கிறார். 

வீர சந்தானம்

``அவர் எனக்கு மிக முக்கியமானவர்; தந்தை போன்றவர். `அவள் பெயர் தமிழரசி'யில் அந்த கேரக்டர் தோற்பாவைக் கலைஞர் என்பதால், தன் ஓவியங்களிலும் தோற்பாவைகளைக் கொண்டுவந்த வீரசந்தானம் நடிக்க வேண்டும் என விரும்பினேன். `சந்தியாராகம்' படத்துக்குப் பிறகு 25 வருடங்கள் நடிக்காமல் இருந்தார். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டைப் படிக்கக் கொடுத்தேன். முழுமையாகப் படித்த பிறகே `நான் நடிக்கிறேன்' என ஒப்புக்கொண்டார். உண்மையில் அவரைக் கௌரவப்படுத்த கிடைத்த வாய்ப்பாகவே அதை நான் கருதுகிறேன்.

அந்தப் படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில்தான் ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. படப்பிடிப்பின் இடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு இடங்களுக்கு போன் செய்து, போரின் நிலவரம் பற்றி தெரிந்துகொள்வார். சரியாகவே சாப்பிட மாட்டார். அதிலும் இறுதிப்போரின் கடைசி மூன்று நாள்களும் அவர் ஒரு வாய் உணவுகூட உட்கொள்ளவில்லை. அவர் எந்த அளவுக்கு உணர்வுள்ளவர் என்றால், படத்தில் ஒரு காட்சியில் ஓர் ஊர் வரும். அதுவரை அந்த ஊருக்குப் பெயர் வைக்கவில்லை. `அந்த ஊருக்குப் பெயர் வைக்க வேண்டும்' என்றார் வீரசந்தானம். `முத்துக்குமார புரம்' எனப் பெயர் வைத்தேன். அவருக்கு அதில் பெரும் மனநிறைவு. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட அவருக்கு இனத்தின் மீதுதான் அக்கறை இருக்கும்.

என் அடுத்த படமான `விழித்திரு' படத்தில் முழுமையான ஒரு கதாபாத்திரத்தை அவருக்காக உருவாக்கியிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருக்கு முதுகுத்தண்டில் அடிபட்டு நடிக்க முடியாமல்போய்விட்டது. அவர் குணமடைந்தவுடன் `இந்தப் படத்தில் உங்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும்' எனக் கேட்டேன். அதனால் ஒரு நிமிடம் வரக்கூடிய காட்சி ஒன்றில் அவர் நடித்துக்கொடுத்தார். `முத்துக்குமாரின் உடலை துருப்புச்சீட்டாக்கி மக்களை ஒன்றுதிரட்டி அறிவாயுதம் ஏந்துவோம்' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாகப் பேசி நடித்தார். என்னைப் பொறுத்தவரை, வீரசந்தானம் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவரின் இறப்பு, எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. அவர் உதட்டளவில் உணர்வாளராக இல்லாமல், உண்மையான இன உணர்வுடன் இருந்தார்.  இப்போதுகூட இளம் கலைஞர்களின் உழைப்பில் உருவாகிவரும் படத்தில் தன்னார்வமாக நடித்தார். எப்போதும் கொதிநிலையிலே இருந்ததாலும், ஏற்கெனவே கோமா நிலைக்குப் போய்த் திரும்பியதாலும்தான் கடந்த இரண்டு நாள்களாக `மூச்சுத்திணறலாக இருக்கிறது' எனச் சொல்லியுள்ளார்.  அவரின் இழப்பு, தமிழ் உணர்வாளர்களுக்கு, கலைஞர்களுக்கு, ஓவியர்களுக்கு மட்டுமல்ல, எனக்குமே ஈடுசெய்ய முடியாத ஒன்று" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்