தேசிய மீனவர் பேரவையின் கடற்கரை யாத்திரை! | Awareness yatra in coastal villages

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/07/2017)

கடைசி தொடர்பு:19:20 (14/07/2017)

தேசிய மீனவர் பேரவையின் கடற்கரை யாத்திரை!

மீனவர்

தேசிய மீனவர் பேரவை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளில் விழிப்புஉணர்வு யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக் குழுவினர் கடற்கரையோர கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலமாக மீனவ மக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், கடலோர வளங்களையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த யாத்திரையை மீனவர் பேரவை தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தின் நீரோடி என்னும் கிராமத்தில் கடந்த 10-ம் தேதி இந்த யாத்திரை தொடங்கியது. குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இரு தினங்களாக விழிப்புஉணர்வு நடத்திய இந்தக் குழுவினர், ஜூலை 12-ம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு வருகை தந்தனர். நெல்லை கடலோர கிராமங்களில் இக்குழுவினர் மீனவ மக்களைச் சந்தித்துப் பேசினர்.

கூடங்குளம் மீனவ கிராம மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னர், முரசு கலைக்குழுவினரின் விழிப்புஉணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், நாடகங்கள், பாடல்கள் மூலமாக கடலோர மக்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களின் உரிமைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 'பச்சைத் தமிழகம்' கட்சியைச் சேர்ந்த கதிரவன், கெபிஸ்டன், நாம் தமிழர் கட்சியின் சகாய இனிதா, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று, குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். 

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள், "தொழில் துறையினரால் கடலோரப் பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாகர்மாலா, கடற்கரைப் பொருளாதார மண்டலம், கடற்கரை தொழில் மண்டலம் போன்ற திட்டங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீனவர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கின்றன. கூடங்குளம் அணு உலை சரக்குப் பெட்டக முனையம் அமைப்பது, புதிய துறைமுகம் அமைக்கும் திட்டங்கள் போன்றவை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்" என விளக்கமாக எடுத்துரைத்தனர். 

குமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், புதுவை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் வழியாக ஜூலை 27-ம் தேதி சென்னையை வந்தடைய உள்ளது. வழிநெடுகிலும் உள்ள மீனவ கிராமங்களில் இந்தக் குழுவினர், அப்பகுதி மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளனர். இந்தக் குழுவினருக்கு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.