வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (14/07/2017)

கடைசி தொடர்பு:20:06 (14/07/2017)

தொடரும் அரசின் அலட்சியம்... உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் முடங்கிய பணிகள்!

உள்ளாட்சித் தேர்தல்

ள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், பொதுமக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு நிதி கொடுக்காததால், பணிகள் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சாலைப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

நிதி தரவில்லை

இது குறித்து உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசனிடம் கேட்டோம். "தமிழக பட்ஜெட்டில் உள்ளாட்சித் துறைக்குக் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்குவார்கள். அந்த நிதியை மூன்று மாதங்களுக்கு ஒரு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவார்கள். ஆனால், இந்த நிதி கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. இப்படி நிதி வழங்காவிட்டால், மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மாநில அரசிடம் வலியுறுத்துவார்கள். ஆனால், இப்போது கேட்பதற்கு ஆள் இல்லாததால், கொடுக்க வேண்டிய நிதியைக் கூட கொடுக்காமல் இருக்கிறார்கள். இதனால், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பணிகள் முடங்கி இருக்கின்றன. மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குபவர், துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. சென்னையைப் பொறுத்தவரை வர்தா புயலின் போது ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான பணிகளுக்கு மட்டும் மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்தப் பணிகளுக்கான டெண்டர்கள் மட்டும் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முடங்கி இருக்கின்றன. புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்படவில்லை. முடிவு செய்யப்பட்ட தார்சாலைகள் போடப்படவில்லை. நகராட்சி, பேரூராட்சிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் போர்வெல் போட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால் மாற்று ஏற்பாடு செய்வார்கள். அதிகாரிகள் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர். தண்ணீர் கேட்டு மறியல்கள் நடக்கிறது. தனியார் ஒரு குடம் 5 ரூபாய்க்கு விற்கின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்

கூட்டுக்குடிநீர் திட்டங்கள், அதில் பெரும்பாலும் 100 கோடி , 200 கோடிக்கு மேல் வரும் திட்டங்கள். மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக திருப்பூர் குடிநீர்த்திட்டம் மத்திய அரசு நிதி கிடைக்காமல் நிற்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்கள் இருக்கும் பட்சத்தில் மக்கள் தரப்பில் அவர்களிடம் புகார் செய்து குடிநீர் கிடைக்க வழி செய்வார்கள். ஆனால், இப்போது அதிகாரிகளை மட்டுமே மக்கள் நம்பி இருக்கிறார்கள். அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளுடன் மீட்டிங், மீட்டிங் என்று போய்விடுகின்றனர். மக்கள் யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் விழிக்கின்றனர்"  என்று உள்ளாட்சி அவலங்களை பாயின்ட், பாயின்ட் ஆக குறிப்பிடுகிறார். 

தாமதம் ஆகும் பணிகள்

சென்னையைப் பொறுத்தவரை தி.நகர் பகுதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதற்கான பணிகள் மெள்ள, மெள்ள நடந்து வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி அமைப்புக்குத் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் பணிகள் ஏதும் தொடங்கவில்லை. சென்னையுடன் அறிவிக்கப்பட்ட புனே உள்ளிட்ட சில நகரங்களின் ஸ்மார்ட் சிட்டித்திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. எனவே, அதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் கால்வாய்கள் அமைப்பது, மழை நீர் கால்வாய்களைத் தூர்வாருவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்