Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தையிடம் பணம் கொடுக்கத் தயங்கும் பெற்றோரா நீங்கள்? #GoodParenting

குழந்தை

‘நாங்க சம்பாதிப்பதே எங்க புள்ளைங்களுக்காகத்தான்' இப்படிச் சொல்லாத பெற்றோர்களே இல்லை என்றே சொல்லிவிடலாம். அவர்களின் உழைப்பு, கனவு, நேரம் அனைத்தையும் தங்கள் பிள்ளைகளுக்காகவே. எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பது தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். பள்ளிச் செல்லும்போது 'பாக்கெட் மணி' கொடுக்கத் தவறுவதுமில்லை. ஆனால், குழந்தையிடம் பணம் கொடுப்பதற்குத் தயங்கும் அல்லது கொடுப்பது சரிதானா எனக் குழம்பும் பெற்றோர்களும் அதிகம். அவர்களில் நீங்கள் ஒருவரா? உங்களுக்கான சில ஆலோசனைகள் இதோ.

kids குழந்தைகள் சாப்பிடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சலடிப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்வதைப் போலவே பணத்தைக் கையாளுவதையும் பழக வேண்டும் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களிடம் பணம் கொடுப்பது தவறான செயல் அல்ல. ஆனால், அந்தப் பணத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்காமல் இருப்பதே தவறு.

உங்கள் குழந்தையின் வயது ஏற்ற அளவில் பாக்கெட் மணியைத் தீர்மானியுங்கள். அது போதுமான அளவுதான் எனக் குழந்தைக்குப் புரிய வையுங்கள். பள்ளிக் கட்டணம் உள்ளிட்டவற்றை நீங்களே சென்று கட்டுங்கள்.

பணம் கொடுக்கும்போது அதிக மதிப்புள்ள நோட்டாகக் கொடுக்காமல், சிறிய மதிப்புள்ளதாகக் கொடுங்கள். மேலும், அன்றைக்கு உரிய தொகையை மட்டும் கொடுங்கள். ஒரு வாரத்துக்கு எனப் பெரிய தொகையைக் கொடுக்காதீர்கள்.

குழந்தைகள் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்? கடைகளில் சாக்லேட், பபிள்கம் போன்றவற்றை வாங்கிச் சாப்பிடுவார்கள். ஏதேனும் விளையாட்டுப் பொருள்களை வாங்குவார்கள். நண்பர்களுக்கு, உறவினர்களுக்குப் பரிசு பொருள் வாங்குவார்கள். இவை அனைத்து சரியானவைதானே. ஒரு சில குழந்தைகள் பள்ளியில் பயன்படுத்தும் பொருள்களில் ஏதேனும்  உடைந்தோ காணாமலோ போனால் அந்த விஷயத்தைப் பெற்றோரிடம் சொல்வதற்குப் பயந்து, தாங்களே அந்தப் பொருளை வாங்குவார்கள்.

பெற்றோர்கள் இதில் என்ன செய்ய வேண்டும்? கடைகளில் தின்பண்டங்கள் வாங்கும்போது அவற்றை வாங்காதே என்று சொல்லாமல், அவற்றில் எது உடலுக்குக் கெடுதல் கொடுக்காததோ அதை வாங்கப் பழக்குங்கள்.

பள்ளியில் கேண்டீனில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்குவதில் சில குழந்தைகள் ஈடுபடுவர். அது அவர்களின் உடலுக்கு உகந்ததாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால், முடிந்தவரை அந்தச் சூழல் உருவாகாத அளவுக்கு வீட்டிலிருந்து குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளைக் ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்புங்கள்.

பணம்

தினந்தோறும் கொடுக்கப்படும் பாக்கெட் மணியைச் சேர்த்து வைத்து, விலை அதிகமுள்ள பொம்மையோ, விளையாட்டுப் பொருளையோ வாங்க ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்குப் பணம் சேர்ந்ததும் நீங்களே கடைக்கு அழைத்துச் சென்று, உங்கள் தரப்பிலிருந்து இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கிக்கொடுங்கள். இது அவர்களுக்குச் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கும்.

நண்பர்களோடு செலவழிப்பதாகக் குழந்தைகள் கூறினால், அந்த நண்பர்கள் யார், எதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பதை நட்போடு பேசித் தெரிந்துகொள்ளுங்கள். திடீரென்று பாக்கெட் மணியை உயர்த்திக் கேட்டு குழந்தை அடம்பிடித்தால், கோபப்படாமல் என்ன காரணம் என ஆராயுங்கள். ஏனெனில் அவர்களின் பள்ளி நண்பர்களுக்கு அவர்கள் வீட்டில் பாக்கெட் மணியை அதிகப்படுத்தியிருப்பார்கள்.

வீட்டுக்கு எப்படியெல்லாம் வருவாய் வருகிறது என்பதைக் குழந்தைகளிடம் கூறுங்கள். அதேபோல ஒரு மாதத்திற்கு என்ன செலவாகிறது என்பதையும் பகிருங்கள். வீட்டுக்கு ஏதேனும் பொருள் வாங்கும் முடிவு எடுத்தால் அதற்குக் குழந்தைகளிடம் ஆலோசனை செய்யுங்கள்.

வருங்காலத்தில் குழந்தைகள் பணத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கவும் சேமிக்கவும் வேண்டுமெனில் இந்த வயதில் பழக்கப்படுத்துவதே சரியானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close