வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (14/07/2017)

கடைசி தொடர்பு:21:40 (14/07/2017)

ரஹ்மானிடம் இந்திப் பாடல்களைக் கேட்டு வட இந்தியர்கள் அடம்பிடிப்பதே நம் வெற்றிதானே!

ஆர்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் போன்ற இந்தி இசையமைப்பாளர்கள், ஒருசில தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளனர். பாடல்களுக்கு மட்டுமே அவர்கள் இசையமைப்பார்கள். பின்னணி இசைக்கு வேறு ஒருவரைத் தேடிச் செல்ல வேண்டும். `உயிரே உனக்காக' படத்துக்கு லக்ஷ்மிகாந்த்-பியாரிலாலும் `பூமழை பொழியுது' படத்துக்கு ஆர்.டி.பர்மனும் இசையமைத்திருந்தனர். இந்தி இசையமைப்பாளர்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலத்தில், தமிழகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்திப் பாடல்களை மறையச் செய்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு என்றால், வட இந்தியர்களேயே தமிழ்ப் பாடல்களைக் கேட்கவைத்த பெருமை ரஹ்மானுக்கு உண்டு. 

இளையராஜா, `ஹேராம்' போன்று தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு இசையமைத்தவர். மற்றபடி, இந்திப் படங்களுக்கு இளையராஜா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஆனால், ரஹ்மானின் கதையே வேறு. 1992-ம் ஆண்டு ரஹ்மானின் இசையில் வெளியான `ரோஜா' படப் பாடலின் இனிமையில் இந்தியாவே மயங்கியது. அதேபோல், `ரோஜா' படத்தின் பின்னணி இசையிலும் மிரட்டியிருப்பார் ரஹ்மான். `காதலன்' படத்தில் வரும் `முக்காலா முக்காப்லா...' பாடல் உள்பட பல தமிழ்ப் பாடல்கள் வட இந்தியாவிலும் ஹிட்டானது.

பாடல்

ராம்கோபால் வர்மாதான், `ரங்கீலா' படத்தின் மூலம் ரஹ்மானை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர். இந்தியில் நதீம் ஷ்ரவன், அனுமாலிக், ஜெயிந்த் லலித் போன்ற டாப் க்ளாஸ் இசையமைப்பாளர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது.  ரஹ்மான், அவர்களைவிட ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசப்பட, பாலிவுட் பிரமித்தது. தமிழனின் இசைக்கு பாலிவுட் தலையாட்டத் தொடங்கியது. ரஹ்மானின் இசைக்காக பாலிவுட் இயக்குநர்கள் தவம்கிடந்தனர்.  

1999-ம் ஆண்டு `தால்' படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். 2002-ம் ஆண்டு கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான `லகான்' படத்துக்கும் ரஹ்மான்தான் இசை. தமிழில் இளையராஜாவின் படம் போட்டு `ராஜாவின் இசையில்' என விளம்பரப்படுத்துவதுபோல இந்திப் படங்களும் `ரஹ்மானின் இசையில்' என விளம்பரப்படுத்தியது. இந்தி சினிமா பாடல்களைத் தமிழர்கள் முனுமுனுத்த காலம் போய், தமிழ் இசையமைப்பாளரின் பாடலை வட இந்தியர்கள் முனுமுனுக்கத் தொடங்கினர். உச்சகட்டமாக `ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஹோ' பாடல் இசைத் தமிழனை ஆஸ்கர் தமிழனாக மாற்றியது. 

இசைக்கு, மொழி கிடையாது. இந்தி தெரிந்துகொண்டுதான் தமிழர்கள்  `ஏக் துஜே கேலியே' முதல் `தில் தோ பாஹல் ஹே' வரை இந்திப் பாடல்களைக் கேட்டு ரசிக்கவில்லை. ரஹ்மான் இந்திப் படங்களுக்கு இசையமைக்கும் முன்னரே, அவரின் தமிழ்ப் பாடல்களை வட இந்தியர்கள் கேட்டு தலையாட்டிக்கொண்டுதான் திரிந்தனர். `ட்யூன்' என அழைக்கப்படும் மெட்டுதானே பாடல்களுக்கு மிக முக்கியம். வரிகளைவிட இசைதானே மயக்கும். இப்போதும்கூட இந்தி மொழி தெரியாத பல மாநில மக்களும் இந்திப் பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள் என்றால், அதற்கு ட்யூன்தானே காரணம். `முத்து' படப் பாடல் ஜப்பானில் பாப்புலரானது இப்படித்தானே. மொழி தெரிந்தா ஜப்பானியர்கள் கேட்டார்கள்... ஆடினார்கள்? இசை ஆடத் தூண்டியது அவ்வளவுதானே!

வட இந்தியர்களை கெஞ்ச வைத்த ரஹ்மான்

இதையெல்லாம் புரிந்துகொள்ளாத சில வட இந்தியர்கள், லண்டனில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியை வைத்து சர்ச்சையைக் கிளப்பிவருகின்றனர். பிரிட்டன்வாழ் தமிழர்களுக்காக ஜூலை 8-ம் தேதி லண்டன் `வெம்ப்ளி' பகுதியில் உள்ள எஸ்.எஸ்.எஸ் அரீனாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்.  நிகழ்ச்சியின் பெயர் `நேற்று இன்று நாளை' எனத் தெளிவாகத் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் தன் ட்வீட்டில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். ரஹ்மானைப் பொறுத்தவரை, தன் இசை நிகழ்ச்சியில் சில இந்திப் பாடல்களையும் பாடுவது உண்டு. ஏனென்றால், அவரின் இசையில் வெளியாகி ஹிட்டான இந்திப் பாடல்களும் ஏராளம். அதனால், இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான வட இந்தியர்களும் டிக்கெட் வாங்கியிருந்தனர். 

நிகழ்ச்சிக்குச் சென்ற வட இந்தியர்கள், இந்திப் பாடல்களைப் பாடுமாறு கோஷமிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூடியிருந்த நிகழ்வு அது. எனினும் ரஹ்மான் குழுவினர் நான்கு இந்திப் பாடல்களைப் பாடியிருக்கின்றனர். திருப்தியடையாத வட இந்தியர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் திட்டியபடி, அரங்கத்தைவிட்டு வெளியேறினர். `இசை நிகழ்ச்சியில் இந்தியில் ஒரு சதவிகிதப் பாடலைக்கூட ஏ.ஆர்.ரஹ்மான் பாடவில்லை. தவறாக விளம்பரப்படுத்தியதால் எஸ்.எஸ்.எஸ். அரீனா நிரம்பியது. தமிழில் பேசி ஏ.ஆர்.ரஹ்மான் எங்களை அவமதித்துவிட்டார்' எனவும் ட்வீட்டரில் வட இந்தியர்கள் கொதித்தனர். `நிகழ்ச்சிக்கான கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும்' என்றும் `ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுமென்றே இந்திப் பாடல்களைப் புறக்கணித்தார்' என்றும் ரஹ்மானுக்கு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவருகின்றனர்.

இந்தச் சர்ச்சை குறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஹ்மானின் ரசிகர்கள் ``தமிழ் இசை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இந்திப் பாடல்களைப் பாடச் சொல்வது எந்தவிதமான மனநிலை என்பது தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான்  `The Mozart of Madras'  என்றுதான் தன்னைக் குறிப்பிடுவார்.  `நேற்று இன்று நாளை' என்ற பெயரில்தான் நிகழ்ச்சி நடத்தினார். `நேற்று இன்று நாளை' என்பது ஸ்பானீஷ் மொழியா? உண்மையாகவே இசையை ரசிப்பவர்கள் மொழியைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். `ஆஸ்கர் மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனத் தமிழில் பேசியவர் ரஹ்மான்'' என வட இந்தியர்களுக்குப் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இசைத் தமிழனிடம் இந்திப் பாடல்களைக் கேட்டு வட இந்தியர்கள் அடம்பிடிப்பதே நமக்குக் கிடைத்த வெற்றிதானே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்