வழக்கு போட்டாலும்... சிறை வைத்தாலும்... நாளை  எங்கள் போராட்டம் தொடரும்.. நெடுவாசல் மக்கள் | Neduvasal protest will continue: protesters say in unison

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (14/07/2017)

கடைசி தொடர்பு:08:38 (15/07/2017)

வழக்கு போட்டாலும்... சிறை வைத்தாலும்... நாளை  எங்கள் போராட்டம் தொடரும்.. நெடுவாசல் மக்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் 94-வது நாளாக போராட்டம் நடத்திவிட்டார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி போராடுவதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி கேட்டனர் போராட்டக்குழுவினர். அனுமதி அளித்துள்ள நிலையில், போராட்டம் நடைபெறும் இடமான  புதுக்கோட்டை சின்னப்பா திடலில் போலீஸார் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

  

நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 94 நாள்களாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு விதமான நூதனப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் பொதுமக்கள். இந்நிலையில், நாளை புதுக்கோட்டை சின்னப்பா திடலில் மிகப்பெரியளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், நெடுவாசல் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நோட்டீஸ் விநியோகம் செய்த சேலம் மாணவிகள் வளர்மதி, ஜெயந்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள், எதிர்ப்பு தெரிவித்து யார் அனுமதி தந்தாலும், தராவிட்டாலும் எத்தனை பேரைக் கைது செய்து, வழக்கு போட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார்கள்.  

இதுகுறித்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் வீரசெல்வத்திடம் பேசினோம், 'எங்கள் உரிமை மட்டுமல்ல வாழ்வாதாரத்தைக் காக்க நாங்கள் உயிரையும் கொடுக்கத் தயார். ஏனென்றால், எங்களுடைய பிள்ளைகளுக்கும், சந்ததியினருக்கும், பணத்தையோ பொருளையோ சேமித்து வைக்கவில்லை, எங்களிடம் பாரம்பர்யமாக உள்ள மண்ணை எந்தப் பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்துக் கொடுத்துவிட்டால் அதுவே போதும். அதைத்தான் எங்களோடு போராடுகிற மக்களும் நினைக்கிறார்கள். அதற்காக நாங்கள் எதையும் இழக்கத்தயாராக இருக்கிறோம். 94 நாள்கள் போராடியாச்சு, இந்த அரசுக்கு உரைக்கிறதா? என்றுகூட தெரியவில்லை. மிகப்பெரியளவில் போராட்டத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கவேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். 110-க்கும் மேற்பட்ட கிராமங்கள், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி போராட இருக்கிறோம்' என்றார்.

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்ததாகத் தெரியவில்லை. போராட வருபவர்கள், வாகனங்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்துவற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெளிமாவட்டத்திலிருந்து போலீஸார் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்சிமிட்டியபடி பேசினர் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க