Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எங்க எம்எல்ஏ-வை டிவியில்தான் பார்க்கிறோம்'- விஜயதரணிக்கு எதிராக தொகுதி மக்கள் ஆவேசம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தொகுதி. அதற்குக் காரணம் கேரள தமிழக எல்லையில் இந்தத் தொகுதி இருப்பதால் கேரள தாக்கம் அதிகம் காணப்படுகிறது.1987-ல் சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் காங்கிரஸில் சேர்ந்தவர் விஜயதாரணி. பின்னர், நளினி ப.சிதம்பரத்திடம் ஜூனியராக இருந்து, வழக்கறிஞரான பின் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2011-ம் ஆண்டுதான் முதல் முதலாகப் புதுமுகமாக வந்து இறங்கினார். அப்போது கம்யூனிஸ்ட் வசமாக இருந்த தொகுதியை, வெற்றி பெற்று காங்கிரஸ் வசமாகக் கொண்டுவந்தார். குமரி கேரளாவோடு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறி சர்ச்சையில் மாட்டினார்.

'விஜயதரணி எம்.எல்.ஏ-வை காணவில்லை 'என இவரது தொகுதியில் மற்ற கட்சியினர் பேனர் வைக்கும் கூத்தும் அடிக்கடி நடந்தது. மாவட்ட காங்கிரஸ்காரர்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க, தனக்கென ஆதரவாளர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டார். இளங்கோவனுடன் மோதல், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து நீக்கம் போன்ற தொடர் சரிவுகளில் இருந்த விஜயதரணிக்கு இந்த முறை சீட் கிடையாது என்று காங்கிரஸார் சொல்லி வந்தனர். அதையும் மீறி தனது செல்வாக்கால் விளவங்கோடு தொகுதியைத் திரும்பப் பெற்று மீண்டும் வேட்பாளரானார். அவருக்கு. தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் இருந்ததால் கடந்த தேர்தல் வெற்றியைப்போல இந்தத் தேர்தலிலும் 68,789 வாக்குகள் பெற்று 33,143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் இரண்டாவது முறையாக விளவங்கோடு எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறைபோல இந்த முறையும் தமிழ்நாடு காங்கிரஸின் ஒரே பெண் எம்எல்ஏ விஜயதரணிதான். தமிழகத்தில் விளவங்கோடு தொகுதி இன்று விஜயதரணியால் தமிழகத்துக்கு நன்கு அறிமுகமான தொகுதியாக மாறிவிட்டது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜயதரணி, இப்போதெல்லாம் தொகுதிக்கு வருவதே இல்லை. கடந்த முறை அடிக்கடி தொகுதிக்கு வந்து வளர்ச்சிப் பணிகளைச் செய்து வந்தார். தொகுதியில் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் உடனே வந்துவிடுவார். அதனால் தொகுதி மக்களுக்கு அவர் மேல் நல்ல மரியாதை இருந்தது. அதனால் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தோம். ஆனால், இந்த முறை வெற்றி பெற்றபின் 5 முறைகூட வரவில்லை. எம்எல்ஏ-வைப் பார்க்க வேண்டும் என்றால் டி.வி-யைத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. டி வி-யில் தினமும் போய் பேச நேரம் இருக்கிறது. ஆனால், தொகுதி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்க விஜயதரணிக்கு நேரமில்லை. அடுத்த முறை அவர் எங்கள் தொகுதியில் நின்றால் கண்டிப்பாக தோற்கடிப்போம்'' என விளவங்கோடு தொகுதி மக்கள் சொல்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close