'எலி தானே என அலட்சியம் காட்டாதீங்க'- வேதனையில் டெல்டா விவசாயிகள்

பிரதமர் மோடி மட்டுமல்ல... எலிகளும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. வறட்சியினால் கடந்த சில ஆண்டுகளாக காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை இல்லை. கர்நாடகத்தின் வஞ்சகத்தால் காவிரிநீரும் வரவில்லை. இதனால், தங்களது பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடகாவிடமிருந்து காவிரிநீரை பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் பல்வேறுவிதமான தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பல நாள்கள் அங்கேயே காத்திருந்தார்கள். ஆனால், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக பிரதமர் மோடி இதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசும் காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் காவிரி நீர் வராததால் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். நிலத்தடிநீர் மிகவும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்ட நிலையில் போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு குறுவை நெல் சாகுபடி மேற்கொண்டார்கள். உழவு, விதை, உரம் உள்ளிட்டவைகளுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரை வளர்த்துக்கொண்டு வந்த நிலையில், திடீர் பேரிடியாக எலிகள் தாக்கி நெற்பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இதனால், 70 சதவிகிதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நாளுக்கு நாள் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எலிப்பொறி, மருந்து எதற்கும் சிக்காமல் தப்பிவிடுகின்றன. தமிழக வேளாண்மைத் துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த ஆண்டு இந்தளவுக்கு எலித்தாக்குதல் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். குறுவை பருவம் தொடங்குவதற்கு முன்னதாக, ஒரே சமயத்தில் பரவலாக பெரும் எண்ணிக்கையில் எலிகளை ஒழிக்க எலி ஒழிப்பு முகாம் நடத்தப்படுவது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த வேளாண்மைத் துறை அலட்சியமாக இருந்துவிட்டது. இதில் தமிழக அரசு நேரடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். இதை சாதாரண எலித் தொல்லைதானே என அலட்சியம் காட்டக்கூடாது. விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கும் இப்பிரச்னை நன்றாகவே தெரியும்'' என்கிறார்கள் விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!