Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாசுபடிந்திருக்கும் வைகை நதி! 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வைகை நதி புனிதமானது என்று போற்றிய நம் முன்னோர்களின் வழி வந்த நம் மக்கள், வைகையை மலம் கழிக்கும் திறந்த வெளிக்கூடமாகவும் குப்பை கொட்டும் இடமாகவும்,  இறைச்சிக் கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாற்றிவிட்டார்கள். நீர் நிலைகளை சிறப்பாகப் பராமரிப்பவர் சொர்க்கத்துக்குச் செல்வார்கள் என்றும் புராணங்கள் சொல்கிறது . ஆனால், வைகை நதியின் தற்போதைய நிலை மூக்கில் கை வைத்துக்கொண்டு கூறும் அளவுக்கே உள்ளது. இந்நிலையில் வைகை நதி பாதுகாப்பு தொடர்பாக  கே.கே ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "வருசநாட்டு மலைப் பகுதியில் உருவாகும் வைகை ஆறு ராமநாதபுரம் வரை சுமார் 258 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. மிகவும் பழமையான இந்நதி அரசின் பராமரிப்பு குறைவால் பயன்படுத்த இயலாத அளவு மாசடைந்து காணப்படுகிறது. வைகை ஆற்றின் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை பாய்ந்து தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், நதி கடந்து வரும் பாதைகளில் துர்நாற்றம் உடைய குப்பைகளும் கழிவு நீரும் கலக்கிறது. மேலும் ஆக்கிரமிப்பும் அதிகமாகியுள்ளது. டன் கணக்கான குப்பைகளால் பல நோய்களும் ஏற்படுகிறது, விவசாயமும் பாதிப்படைகிறது. அரசை பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். எனவே, வைகை ஆறு மாசடைவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும். வைகை ஆற்றை மாசுபடுத்துபவர்கள் மீதும் அங்கு மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 5 மாவட்டங்களிலும் வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும். குப்பைக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்க உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் கொண்ட அமர்வு, வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலர் மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close