வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (15/07/2017)

கடைசி தொடர்பு:14:11 (20/07/2017)

“ஒரு சீரியல், 100 சினிமாக்களுக்குச் சமம்” - விருது கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் சின்னத்திரை கலைஞர்கள்

சினிமாவுக்கும் சின்னத்திரைக்கும் உள்ள வித்தியாசமே மக்களைச் சென்றடையும் விதம்தான். ஒவ்வொரு பெண்மணியின் மனதையும் வென்று, அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களை வீட்டில் ஒருவராகப் பார்க்கும் மனோபாவத்தையும் உருவாக்குகிறது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் ஆண்கள் எதிர்பார்ப்பது, அமைதியையும் அன்பையும்தான். வீட்டில் இருக்கும் பெண்களும், `எப்போதுதான் அவர் வருவாரோ... நேரமே இருக்க மாட்டேங்குது... இன்னிக்காவது மனசுவிட்டுப் பேசணும்' என்று எண்ணுவதுண்டு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த இடைவெளியை `ஃபயர் கேஜ்' (Fire Cage) என அழைப்பார்கள். நான் எது நினைத்தாலும் ‘தன்னவனிடம் கூறிவிட வேண்டும்' எனப் பெண்கள் எண்ணுவதும், `எல்லாவற்றையும் பேசியே தீர்த்துவிட முடியாது. சிலவற்றைப் பேசாமலேயே புரிந்துகொள்ள வேண்டும்' என்று ஆணும் நினைக்கும் மனோபாவத்தில் உள்ள வித்தியாசங்கள்தான் சீரியல் பெண்களால் அதிகம் விரும்பப்படுவதற்கு அடிப்படையாக  அமைகிறது. 

சின்னத்திரைக்கான  2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சிறந்த தொடர்கள், சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள், ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குவதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதில் ‘திருமதி செல்வம்', `வசந்தம்', `தெய்வமகள்', `தென்றல்', `சாந்திநிலையம்', `நாதஸ்வரம்', `இரு மலர்கள்', `உதிரிப்பூக்கள்' மற்றும் `வாணி ராணி' ஆகியவை சிறந்த நெடுந்தொடர்களுக்கான விருதைப் பெற உள்ளன. 

அழுகை, வஞ்சம், கோபம் மற்றும் வில்லித்தனம் என எல்லாவற்றையும் தாண்டி சீரியல்கள் மக்களைச் சென்றடைவது அதன் கலாசாரத்தின் அடிப்படையில்தான். சினிமாவில் எல்லாவற்றையும் காட்டிவிடலாம், எப்படி வேண்டுமானாலும் காட்சிகள் அமைக்கப்படலாம். ஆனால், சீரியல் கலாசாரம் சற்று மாறுபட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சென்று சேரும்விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

“ஒரு சீரியல் என்பது, 100 சினிமாக்கள் நடிப்பதற்குச் சமம். ஒருமுறை பெட்ரோல் பங்க்கில் ஒரு பெண்மணியைச் சந்தித்தபோது, `மேடம், நீங்க நடிக்கும் ரோல் அப்படியே என்னுடைய கேரக்டர்தான். வாழ்க்கையில் ஒவ்வொரு முறை பிரச்னைகளைச் சந்திக்கும்போதும் மனம் தளர்ந்துபோகிறது. பலமுறை தற்கொலை எண்ணங்கள் தோன்றியுள்ளன. நீங்களும் இந்த சீரியலில் பிரச்னைகளை எதிர்கொள்வதைப் பார்த்த பிறகுதான் எனக்குள் நம்பிக்கையே வந்தது' என்று கூறியது, என்னை பேரானந்தத்தில் மூழ்கடிக்கச் செய்தது. ஒரு சீரியல் நடிகைக்கு, இதைத் தவிர வேறென்ன வேண்டும்?" என்று கூறுகிறார் சீரியல் நடிகை விஜி சந்திரசேகர்.

இவர் நடித்த ‘அழகி’ நெடுந்தொடரில், சுந்தரி கதாபாத்திரத்துக்கு 2012-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகை விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீரியல்கள்

வீட்டில் வேலைசெய்யும் பெண்ணின் கதைகொண்டு முதல்முறையாக வெளியான சீரியல்தான் `அழகி'. `மெட்டி ஒலி', `தென்றல்' போன்ற சீரியல்களின் வரிசையில் `அழகி', தனியொரு பெண்மணியின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்திரிகிறது.

“அபிதா என்ற என் பெயரை மறந்து, ‘அர்ச்சனா’ என்றுதான் எல்லோரும் என்னைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். சின்னத்திரையில்தான் மக்களை தினமும் பார்க்க முடியும். எனக்கு படத்தைவிடவும் சீரியலில் நடித்ததுதான் அதிக வெற்றியைத் தந்தது. என்னுடைய படங்களில் மிகவும் முக்கியமானது `சேது'. அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வாங்கினேன். அந்த அளவுக்குப் பேரும் புகழும் வாங்கித்தந்தது `திருமதி செல்வம்' சீரியல்தான்" என்றார் நடிகை அபிதா. இந்த சீரியல், 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடர் விருதைப் பெறவிருக்கிறது.

சீரியல்கள்

‘திருமதி செல்வம்' தொடரை இயக்கிய இயக்குநர் குமரனின் அடுத்த வெற்றி `தெய்வமகள்' சீரியல். இது, 2013-ம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடர் விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `ஊஹாலா பல்லாகிலோ' என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சியிலும்  ஒளிபரப்பாகிவருகிறது. இதன் வெற்றிகுறித்து நடிகை ரேகா கிருஷ்ணப்பா கூறியதாவது, “எனக்கு தமிழில் நடிப்பது புது அனுபவத்தைத் தந்துள்ளது. என்னுடைய ரோலில் சிறு சிறு நெகட்டிவிட்டி இருந்தாலும் மக்கள் அதைப் புரிந்துகொள்ளும்விதம் பாசிட்டிவாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கன்னடத்தைவிட தமிழ் சீரியல்தான் எனக்கு பெயரை வாங்கிக்கொடுத்துள்ளது. எல்லா பெருமைகளும் இயக்குநர் குமரனையே சேரும்" என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை வாணி போஜன், "சின்னத்திரையில்தான் மக்களை எளிதாகப் சென்றடைய முடியும். மேலும் சத்யா ரோல் எனக்கு மிகவும் பெயர் வாங்கிக்கொடுத்துள்ளது. சீரியல் என்பதைத் தாண்டி அனைவரின் வீட்டில் செல்லப் பொன்னாக சத்யா மாறியிருப்பது பெரும் ஆச்சரியம்" என்றும் கூறியுள்ளார்.

வாணி போஜன்-ரேகா கிருஷ்ணப்பா

சீரியலைப் பற்றி முரண்பாடான சில கருத்துகள் எப்போதுமே உண்டு. `இதுவும் ஒருவிதமான அத்தியாவசியப் பொழுதுபோக்கு' என்று ஒருபுறமும், `பெண்களை, சின்னத்திரை வீணடிக்கிறது' என்று மறுபுறமும் பலவாறான கருத்துகள் இருக்கின்றன. இதுகுறித்து, நடிகை ராதிகாவிடம் பேசியபோது, ``சீரியல் அவசியமான ஒன்றுதான். பெண்களுக்கான பொழுதுபோக்குகளில் தவிர்க்க முடியாததும்கூட'' என்று கூறினார். இவர் தயாரித்துவரும் `வாணி ராணி' தொடர் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடர் பட்டியலில் முதல் பரிசை வென்றுள்ளது. ``இதில் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்துவருவதிலும், பல திருப்புமுனைகளால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றதால் மகிழ்ச்சி. இந்த விருது அடுத்த வெற்றிக்கான ஊக்கத்தைக் கொடுத்துள்ளது" என்றும் கூறினார். 

சீரியல்கள்

“வளர்ந்த கலைஞர்களுக்கு, அனுபவங்களாலேயே சீரியல் வாய்ப்புகள் கிடைத்துவிடும். என்னைப்போல் புதுமுகங்களுக்கு `தென்றல்' தொடரில் கதாநாயகி ரோல் கிடைப்பது மிகவும் கடினம். இந்த சீரியலை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி" என்று `தென்றல் சீரியல் கதாநாயகி நடிகை ஸ்ருதி கூறியுள்ளார்.

சீரியல்கள்

வெள்ளித்திரையைவிட சவால்களும் வேலைகளும் நிறைந்திருப்பது சின்னத்திரையில்தான். தினம் தினம் டி.ஆர்.பி ரேட்டிங்கிலிருந்து ஆரம்பிக்கிறது இந்தப் பொழுதுபோக்குச் சவால். ஒவ்வொரு நாளும் பல திருப்புமுனைகள் நிறைந்த கதைக்களத்தை அமைப்பதே மாபெரும் வெற்றிதான். அதில் கூடுதல் சுவையாகச் சேர்ந்திருக்கின்றன இந்த  ஆறு வருடங்களுக்கான விருதுகள்.

இவர்களின் கனவுப்பட்டறை மேலும் சிறக்க வாழ்த்துகள்.


டிரெண்டிங் @ விகடன்