Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியிருப்புப் பகுதிக்குள் தார் தொழிற்சாலையா? - போராடும் திருப்பூர் மக்கள்!

தார் கலவை தொழிற்சாலை

திருப்பூர் மாவட்டம் மொய்யாண்டம்பாளையம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் தார் கலவை தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ளது மொய்யாண்டம்பாளையம் கிராமம். இங்கு அமைக்கப்பட்டு வரும் தனியார் தார் கலவை தொழிற்சாலை நிறுவனமானது, ஊராட்சி மன்ற உரிமம், வட்டாட்சியர் உரிமம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி என எதையுமே பெறாமல் அப்பகுதியின் சுற்றுப்புற சூழலுக்கும், அங்கு குடியிருக்கும் மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் வகையில்  தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பேசினோம்:- 

மொய்யாண்டம்பாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.  இங்கு சமீபகாலமாக சுடு தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கி வருகிறார்கள். இந்தத் தொழிற்சாலை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால், இப்பகுதியின் சுற்றுவட்டாரங்களில் மிகபெரிய அளவுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாவதோடு, அருகில் உள்ள விலை நிலங்கள் அனைத்துமே நாசமாகி விடும். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளை உண்டாக்கும். எனவே
அந்தப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூன் மாதத்திலேயே பொதுமக்கள் அனைவரும் சென்று மனு அளித்துவிட்டு வந்தோம்.

அதன் பின்னர் ஆய்வு செய்ய வந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் கோட்ட அதிகாரிகள், தொழிற்சாலை அமைக்கப்படவிருக்கும் இடத்தில் ஆய்வு செய்துவிட்டு எங்களைச் சந்தித்தனர். அப்போது "தார் கலவை தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் வீடு, பள்ளி, தொழிற்கூடம் என எதுவும் இல்லையென்றால் மட்டுமே அந்த தொழிற்சாலைக்கு உரிமம் வழங்கலாம் என்ற அரசு விதி இருக்கிறது " என்றனர். ஆனால் அளவீடு செய்து பார்க்கையில் 500 மீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே  விசைத்தறிக் கூடம், குடியிருப்புகள், கோயில், துணை மின் நிலையம் போன்றவை அனைத்தும் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் அவிநாசி வட்டாட்சியர் அவர்கள், தார் கலவை தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்தில் இருந்து 1 கி.மீட்டருக்கு அப்பால் தான் குடியிருப்புகளும், தொழிற்கூடங்களும் இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்து அந்த தனியார் தார் தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படும் முனைப்பில் வட்டாட்சியர் ஈடுபட்டு வருகிறார். எனவே அச்செயலுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, எங்கள் பகுதி மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் தார் கலவை தொழிற்சாலை இங்கு அமைவதை அரசு தடுக்க வேண்டும்” என்றனர்.

திருப்பூர்

மேலும், இன்று மாலை மீண்டும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மொய்யாண்டம்பாளையம் ஊர் மக்கள், சார் ஆட்சியரை சந்தித்து சம்பந்தப்பட்ட தனியார் தார் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்குமாறு மனு அளித்தனர்.
சம்பந்தப்பட்ட தார் தொழிற்சாலை அமைக்கப்படும்போது இருந்தே எங்கள் ஊர் மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து வந்தோம். ஆனால் எங்களின் எதிர்ப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த தார் தொழிற்சாலை நிர்வாகம் தங்களின் வேலைகளை மும்முரமாக செய்துகொண்டு இருக்கின்றனர். அரசு உடனடியாக தலையிட்டு நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நாங்கள் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.

சம்பந்தப்பட்ட அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தனிடம் பேசினோம்.

“தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு பயன்படும் வகையில் அங்கு தார் கலவை தொழிற்சாலையை ஒப்பந்ததாரர்கள் அமைத்து வருகிறார்கள். அந்த தொழிற்சாலைக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் இடையேயான தூரத்தை அளவீடு செய்து அறிக்கை தருமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதற்கட்ட அளவீடு நடத்தியிருக்கிறோம். மீண்டும் ஒருமுறை இறுதியாக அளவீடு நடத்தப்பட்டு அதன் அறிக்கையைத்தான் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம். மாவட்ட நிர்வாகம் எனக்கு அளித்துள்ள பணியை மட்டுமே செய்கிறேன். அதற்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிவிட்டார்கள்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement