வீட்டு உரிமையாளருடன் பிரச்னையா...? - இதோ வருகிறது தீர்ப்பாயம் | Tribunal to Solve Rent Related Disputes

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (15/07/2017)

கடைசி தொடர்பு:13:52 (15/07/2017)

வீட்டு உரிமையாளருடன் பிரச்னையா...? - இதோ வருகிறது தீர்ப்பாயம்

வீடு தீர்ப்பாயம்

வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடையே ஏற்படும் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவரும் சட்டமசோதா தாக்கலாகியுள்ளது.

தமிழ்நாடு கட்டடங்கள் குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் கடந்த 1960-ல் கொண்டுவரப்பட்டது. வாடகை குடியிருப்புகள் அவ்வளவாக வளர்ச்சியடையாத கால கட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் புதிய விதிகளை இணைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்து வந்தன. இந்த நிலையில்தான் இப்போது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டடங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமலில் உள்ள வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானதாக இருக்காது என்பதால் புதிய சட்டமசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சட்டமன்றத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார் “தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் -2017” என்ற சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த சட்டமுன்வடிவின் படி குத்தகை உரிமம், வாடகை, நில உரிமையாளர் மற்றும் வாடகைதாரரின் கடமை, உள்ளிட்ட சட்டங்களில் மாற்றமும் வாடகை நீதிமன்றங்கள் மற்றும் வாடகை தீர்ப்பாயங்கள், வாடகை அதிகாரிகள், அவர்களுடைய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த சட்டமசோதாவில் விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
இந்த சட்டத் திருத்தத்தின் படி இனி “கட்டட உரிமையாளர் வாடகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் பன்னிரண்டு மாதங்கள் முடிவடைவதற்கு முன்பே குடியிருப்போரிடம் தெரிவிக்க வேண்டும்” போன்ற சட்டமாறுதல்கள் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாடகை வீடு

வீ்ட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை வாடகை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வாடகை அதிகாரியின் உத்தரவுக்கு மாறாகத் தொடர்ந்து பிரச்னைகள் நீடித்தால், வீட்டின் உரிமையாளரோ, வாடகைதாரரோ வாடகை நீதிமன்றங்களையோ, வாடகை தீர்ப்பாயங்களையோ அணுகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல,  ஆட்சியர் தலைமையில் வாடகை தீர்ப்பாயமும் அமைக்கப்பட உள்ளது.  வாடகை நீதிமன்றம் மற்றும் வாடகை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நிர்வாக மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுதல் வேண்டும் என்றும் அந்த சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்டி வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு - தமிழக அரசு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது,  தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு விடுத்த கோரிக்கை ஏற்று, இந்தப் புதிய சட்டமசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 

காலச்சூழ்நி்லைக்கு ஏற்ப  வீட்டு வாடகை விஷயத்திலும் மாற்றம் வேண்டும் என்ற கருத்தையும் தமிழக அரசு தரப்பில் வைக்கிறார்கள். புதிய சட்டத் திருத்தம் வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இருவருக்குமான ஏராளமான ஷரத்துகளை உள்ளடக்கியுள்ளது. அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்பட்டதும், இந்தச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்