Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஒண்ணாதான் சாப்பிடுவோம் தூங்குவோம்” - காணாமல் போன நாய்க்காக போஸ்டர் அடித்த ஜெயலட்சுமி உருக்கம்

நாய்

வாழ்த்த வயதில்லாமல் வணங்கும் கட்சித் தலைவரின் பிறந்தநாள், சிக்கிவிட்ட நண்பனுக்கான திருமண வாழ்த்து, காணவில்லை, கண்ணீர் அஞ்சலி என விதவிதமாக ஒட்டப்படும் போஸ்டர்களைத் தினமும் நாம் கடந்து சென்றிருப்போம். ஆனால், சமீபத்தில் தஞ்சாவூர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர், அனைவரின் கவனத்தையும் திருப்பி நெகிழச்செய்தது. அது, நாய் ஒன்று காணவில்லை என்கிற போஸ்டர். 

நாய் காணவில்லை

அந்த நாயின் பெயர் விக்கி. காணாமல் போன அந்த நாயைக் `கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுக்கப்படும்’ என்ற வாசகங்களுடன் செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணில் தொடர்புகொண்டதுமே, ''எங்கே சார் இருக்கான் எங்க விக்கி? பத்திரமாக இருக்கானா?'' எனப் படபடக்க கேட்டது ஒரு குரல். என்னை அறிமுகம் செய்துகொண்டு. நேரில் சென்றதும் விரிவாகப் பேச ஆரம்பித்தார் அந்தப் பெண். 

விஜயலட்சுமி

''என் பெயர் விஜயலட்சுமி. அரியலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றுகிறேன். எனக்கு ஒரு மகள், மகன். பப்பி, விக்கி என்ற இரண்டு நாய்களையும் எங்கள் குழந்தைகளாக வளர்த்துவந்தோம். ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தச் செல்லங்கள் முகங்களில்தான் விழிப்போம். அந்த அளவுக்கு எங்கள் வாழ்வோடு பப்பியும் விக்கியும் கலந்திருக்கு. சாப்பிடும்போது ஒண்ணாத்தான் சாப்பிடுவோம். எங்களுடன் சேர்ந்து ஏசி அறையில்தான் படுத்துக்கொள்வார்கள். எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் இந்த இரண்டு பேருக்கும் சேர்த்துத்தான் தின்பண்டங்கள் வாங்கி வருவார்கள். விழா நாள்களில் அவர்களையும் சேர்த்துத்தான் அலங்கரிப்போம். என் மகள் கவிதா, பப்பி மற்றும் விக்கி மீது உசுரையே வெச்சிருந்தா.

ஆனா, வீட்டுல இருந்த விக்கியைத் திடீர்னு ஒருநாள் காணோம். எங்கேயாவது போயிருப்பான் வந்திருவான்னு நினைச்சோம். நாள்கள் நகர்ந்ததுதான் மிச்சம். விக்கி காணாமப் போய் பத்து நாள் ஆச்சு. அவனைத் தேடாத இடமில்லை. காலேஜ் படிக்கும் என் பொண்ணு, விக்கி நினைப்பாகவே சாப்பிடாமல் இருக்கா. என் கணவரோ, 'அது எங்கே ஓடிப்போச்சோ... அதையே நினைச்சு வருத்தப்படுறதில் அர்த்தமில்லை'னு பேசிட்டார். இதைக்கேட்ட என் பொன்ணு 'அப்போ நாங்க காணாமல் போனாலும் இப்படித்தான் சொல்வீங்களா அப்பா?'னு கேட்டதும் ஆடிப்போயிட்டார் என் கணவர். அப்போதான் விக்கி எங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு அவருக்குப் புரிஞ்சது.

நான்தான் போஸ்டர் அடிச்சு ஒட்டலாம்ன்ற ஐடியாவை அவருக்குச் சொன்னேன். காணவில்லைனு போஸ்டர் அடிச்சு ஒட்டினா, யார் கண்ணிலாவது விக்கி சிக்குவான்னு நினைச்சோம். ரெண்டாயிரம் ரூபாய் செலவு பண்ணி தஞ்சாவூர் முழுக்க போஸ்டர் ஒட்டினோம். போஸ்டர்ல என் கணவர் நம்பரை போட்டிருந்தோம். அதைப் பார்த்த ஒருத்தர் எங்களுக்குப் போன் பண்ணி, 'சார் உங்க விக்கி என்கிட்டதான் இருக்கான். வந்து வாங்கிக்கோங்க'னு சொன்னதும் சந்தோஷத்தோட உச்சிக்கே போயிட்டோம். அடிச்சுப் புடிச்சுகிட்டு நேர்ல போய் பார்த்தா அது எங்க விக்கி இல்ல. அங்கேயே துக்கம் தாங்காம அழுதுட்டேன். அதே மாதிரி வாட்ச்மேன் ஒருத்தரும் விக்கி இருக்கான்னு போன் பண்ணினார். போய் பார்த்தா அது விக்கி இல்ல. இந்நேரம் விக்கி எங்கே எப்படி கஷ்டப்பட்டுட்டிருக்கானோ... அவன் நினைப்பும் தவிப்புமா இருக்கோம். எப்படியும் எங்களோடு வந்து சேர்ந்துடுவான் என்கிற நம்பிக்கை இருக்கு. நீங்களும் பார்த்தா சொல்லுங்க'' என்று சொல்லும்போதே விஜயலட்சுமி குரல் உடைகிறது.

உண்மையான நேசத்துக்கு எல்லா உயிர்களும் ஒன்றே! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close