வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (15/07/2017)

கடைசி தொடர்பு:13:50 (15/07/2017)

‘ஆசிரியர்களுக்கு யூனிபார்ம்.. ஸ்கூலை கட் அடித்தால் பெற்றோருக்குத் தகவல்’ - அசத்தும் நெல்லை அரசுப்பள்ளி

  ஆசிரியர்களுக்கு யூனிபார்ம்

மாணவர்களின் ஒத்துழைப்பால் நெல்லையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி, முன்மாதிரியானப் பள்ளியாக மாறியுள்ளது. மாணவர்களைப் போல ஆசிரியர், ஆசிரியைகளும் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். 

நெல்லை சந்திப்பில் மதுரை திரவியம் தாயுமானவர் (ம.தி.தா) இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப்பள்ளியில்தான் பாரதியார், வ.உ.சி உள்ளிட்டோர் பயின்றதாகத் தகவல் உள்ளது. மேலும், மனோன்மணியம் சுந்தரனாரும் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தப்பள்ளியின் வரலாறே ஒரு வரலாறு. 

இதுகுறித்து பள்ளியின் மத்தியஸ்தர் வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "கடந்த 1859-ம் ஆண்டு நெல்லை டவுனில் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுகொடுக்கும் பள்ளியை நெல்லை சைவ பெருமக்கள் தொடங்கினர். இதன்பிறகு நெல்லை சந்திப்பில் 1861ல் இந்து கலாசாலை என்ற பெயரில் பள்ளி செயல்படத் தொடங்கியது. 1878ல் இரண்டாம் நிலைக் கல்லூரியும், பள்ளியும் செயல்பட்டது. கடந்த 1935ல் தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்தச்சமயத்தில் மதுரையைச் சேர்ந்த திரவியம் பிள்ளை என்பவர் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையாக கொடுத்தார். இதன்பிறகு பள்ளியும் கல்லூரியும் புத்துயிர் பெற்றது. 

அப்போது, நன்கொடை கொடுத்த திரவியம் பிள்ளைக்கு நன்றிக் கடனாக அவரது பெயரும், அவரது சகோதரர் தாயுமானவர் என்பவரின் பெயரையும் சேர்த்து பள்ளியின் பெயரை 1936ல் மாற்றினர். 1961ல் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1958ல் நெல்லை சந்திப்பில் செயல்பட்ட ம.தி.தா இந்துக்கல்லூரி நெல்லை அருகே உள்ள பேட்டைக்கு இடமாற்றப்பட்டது. 1978ல் உயர்நிலைப்பள்ளியாக இருந்தது, மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளி, திருநெல்வேலி கல்விச் சங்கம் மூலம் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மூன்று ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தனியார் பள்ளிகளின் வருகையால் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்ற இந்தப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், பள்ளியில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், சிறப்பாக பள்ளியை செயல்படுத்தவும் இந்த கல்வியாண்டில் என்னை மத்தியஸ்தராக திருநெல்வேலி கல்வி சங்கத்தினர் நியமித்தனர்.

இதன்பிறகு பள்ளி நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டேன். இதற்கு கல்வி சங்கத்தினரும், ஆசிரியர், ஆசிரியைகளும், பள்ளி ஊழியர்களும், மாணவ, மாணவிகளும் உறுதுணையாக இருந்தனர். இதனால், தனியார் பள்ளிகளைப் போல ம.தி.தா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கையேடு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கறுப்பு நிற பெல்ட், ஷு அணிந்து வர வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த கல்வியாண்டில் 20 சதவிகித மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. 

ஆசிரியர்களுக்கு யூனிபார்ம்..

அடுத்து, மாணவர்களைப் போல ஆசிரியர், ஆசிரியைகளும் யூனிபார்மில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதையடுத்து காமராஜர் பிறந்த தினமான இன்று முதல் ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளை நிற ஒவர் கோர்ட் அணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளி ஊழியர்களும் வெள்ளைச் சட்டையும், கறுப்பு நிற பேண்ட்டும் யூனிபார்மாக அணிந்துவந்தனர். 
பள்ளி நேரத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பைவிட்டு வெளியே வரத் தடை, பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் காலை பத்து மணிக்குள் அவர்களது பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பள்ளிக்கு வராமல் மாணவர்கள் ஊர் சுற்றுவது (கட் அடிப்பது) தடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் ஆசிரியைகள், கண்டிப்பாக தலைமுடியை கொண்டைப் போட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய நடைமுறை மாற்றங்களால் ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி மேலும் சிறப்பாக விளங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாற்றங்களுக்கு மாணவர்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணம்" என்றார் பெருமையுடன் 

கண்காணிப்பு குழுக்கள்

நெல்லை ம.தி.தா இந்து மேல் நிலைப்பள்ளியில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடையிருந்தாலும் மறைமுகமாக சிலர் பயன்படுத்திவருகின்றனர். அவர்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அதிரடி சோதனையில் ஈடுபடுவர். அடுத்து, மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் பயில்வதால் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு புகார் கொடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரவில்லை என்றாலும் கழிவறை சுத்தமாக இல்லை என்றாலும் புகார் செய்தால் அடுத்த அரை மணிநேரத்தில் அதை சரிசெய்து ரிப்போர்ட் கொடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் பள்ளி வளாகத்துக்குள் யாரும் நுழைய முடியாது. அதை கண்காணிக்கவும் ஒரு குழு செயல்படுகிறது. தென்மாவட்டங்களில் சாதி ரீதியான பிரச்னை அதிகமாக இருக்கும். அதை கண்காணிக்கவும்  ஒரு குழு உள்ளது. இவ்வாறு எல்லாவற்றுக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதால் பள்ளியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்