கமல், பிக் பாஸ் நடிகர்கள் இருந்த இடத்தில் 10 நாள்கள் இருங்கள்! திருமாவளவன் அட்வைஸ்

''பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் உள்ளிட்ட குழுவினர் சேரியில் வந்து 10 நாள்கள் இருந்து பார்க்கட்டும். அப்போதுதான் சேரி மக்களின் அன்பு, அரவணைப்பு தெரியும். உங்க விளம்பரத்துக்காக சேரி மக்களை அசிங்கப்படுத்தாதீர்கள்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

கர்மவீரர் காமராஜரின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக சேரி மக்களை இழிவு படுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி விளம்பரத்துக்காக மட்டுமே நடத்தப்படுகிறது எனத் தோன்றுகிறது. வேண்டுமானால் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் உள்ளிட்ட குழுவினர் சேரியில் வந்து 10 நாள்கள் இருந்து பார்க்கட்டும். அப்போதுதான் சேரி மக்களின் அன்பும் அரவணைப்பும் தெரியும். இவர்கள் டிவி நிகழ்ச்சிக்காகச் சேரி மக்களைக் கொச்சைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்ற பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.

நீட்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுதான் மெத்தனம் காட்டுகிறது. நீட்தேர்வு சம்பந்தமான தபால்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் உள்துறைச் செயலர் அறையிலே முடங்கிக் கிடக்கிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு நீட் தேர்விலிருந்து மத்திய அரசு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் அல்லது முற்றிலும் நீக்க வேண்டும்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிமாகிக்கொண்டிருக்கிறது. இதனால், ஒருசில பகுதிகளில் அரசுப் பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளன. இது பெருந்தலைவர் காமராஜருக்கு நாம் இழைக்கும் துரோகம் ஆகும். ஆகவே, போதிய கட்டமைப்பு வசதி, போதிய அளவு ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றை தமிழக அரசு சரிசெய்ய வேண்டும். தமிழ்படித்த பட்டதாரிகள் 25,000 பேருக்கும் மேல் உள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக போதிய ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம்  கூறியுள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏற்கெனவே அவர் இதே கருத்தைத்தான் கூறினார்.  மத்திய அரசு இதைப் பொருட்படுத்தவில்லை அவரை சிறையிலடைத்தது. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது.

கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, எண்ணூர் காமராஜர் துறைமுகம், சேலம் உருக்காலை ஆகியவற்றை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். சாதிய வன்கொடுமைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, தமிழகம் முழுவதும் தலித்துகள் மீதான வன்கொடுமையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து திருச்சியில் இம்மாத இறுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது" என்றார்.

இதையடுத்து, அவர் தந்தை தொல்காப்பியனின் 7-ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது சொந்த ஊரான அங்கனூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் திருமாவளவன் கலந்துகொண்டுள்ளார். அங்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!