Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாட்டில் விற்கப்பட்ட இளைஞர்கள்! மீட்டுக்கொடுத்த ‘வாட்ஸ் அப்" !

வாட்ஸ்-அப்

"அரபு நாட்டில் கௌரவமான வேலை, கைநிறையச் சம்பளம், உணவும், தங்குமிடமும் இலவசம்" என்னும் கவர்ச்சிகர வார்த்தைகளை நம்பி சவுதி அரேபியா சென்ற நான்கு தமிழக இளைஞர்கள், கொத்தடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகினர். தப்பிக்க வழிதெரியாமல் தவித்த அவர்கள், வாட்ஸ்-அப் மூலம் தங்கள் சோகக்கதையைத் தெரிவித்த பின், இந்தியத் தூதரகம் மூலம் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே கொடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன், ராமன், தாமஸ்ராஜ், எபினேசர் லூகாஸ்வெளிநாட்டில் விற்கப்பட்ட கலைவாணன்... மீட்டுக்கொடுத்த வாட்ஸ்-அப் ஆகிய நான்குபேரிடமும் அதே ஊரைச்சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் நடந்தவற்றை சவுதியில் இருந்து உயிர்பிழைத்து மீண்டுவந்த கலைவாணன் நம்மிடம் விவரித்தார். "எனக்கு டிரைவர் வேலை என்றுதான் சொல்லி, இங்கிருந்து அழைத்துச் சென்றார். ஆனால், அங்குசென்ற பின்னர் பாலைவனத்தின் நடுவே செயற்கையாய் அமைக்கப்பட்ட பண்ணையில் ஆடுகளைப் பராமரிக்கும் வேலைகொடுத்தார்கள். நான் மறுத்தபோது மூன்றுநாள்கள் கையைப் பின்புறம் கட்டிவைத்து அடித்தார்கள். 'என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள்' என்று கேட்டபோது, 'நான் உன்னை விலைக்கு வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தால் அனுப்புகிறேன்' என்று கூறியதுடன், அந்தப்பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு தனி அறையில் மூன்று நாள்கள் சோறு, தண்ணி இல்லாமல் அடைத்து வைத்தார். வேறுவழியில்லாமல் 'ஐயா, நீங்க என்ன வேலை சொன்னாலும் செய்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க' என்று காலில்விழுந்து கதறினேன். ஒரு பிரட்டும், கூல்டிரிங்சும் உடனடியாக வாங்கிக் கொடுத்தார். அதன்பின், ஆடு மேய்க்கும் வேலைதான். பேசிய சம்பளத்தைவிட குறைத்து மூன்றுமாதம் மட்டும் சம்பளம் கொடுத்தார்கள். சரியான சாப்பாடு கிடையாது. கொத்தடிமை வாழ்க்கைதான். எதிர்த்துப்பேசினால் அடி, உதைதான் விழும். என் நண்பர்களுக்கும் இதேநிலைதான். அப்போதுதான், எனக்குத் தோன்றியது, 'வாட்ஸ்-அப்' எங்களின் நிலைமையை அனுப்பலாம் என்று. யாருக்கும் தெரியாமல் ஒரு செல்போனில் 'எங்களின் நிலையைப் பதிவுசெய்து எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று செய்தி அனுப்பினேன். இதனைப் பார்த்து, இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கானோர், சவுதி அரேபியாவில் உள்ள தூதரகத்திற்கு அந்தத் தகவலை அனுப்பி வைத்ததுடன், எங்களைக் காப்பாற்ற வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, சவுதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் எங்களைத் தேடிவந்தார். நாங்கள் தப்பித்து அவருடன் ஓடிவந்து, மூன்றுமாதம் தூதரகத்திலேயே தங்கியிருந்தோம். எங்களை நல்லபடியாகக் கவனித்துக் கொண்டார்கள்.  ஒருவழியாக கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்து சேர்ந்தோம்” என்றார். 

சுந்தரிகலைவாணன் மனைவி சுந்தரி, "எங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார், அரபியாவிலும் என் கணவரை விற்று பணம் பெற்றுள்ளார். சமீபத்தில் சுரேஷ்குமார் ஊருக்கு வந்தபோது, அவர்மீது நடவடிக்கை எடுத்து, எங்களுடைய பணத்தை மீட்டுத்தருமாறு பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் குலோத்துங்கனிடம் புகார் கொடுத்தோம். ஆனால், சுரேஷ்குமாரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர் மீண்டும் வெளிநாடு செல்ல காவல் ஆய்வாளர் உதவியாக இருந்துவிட்டார். எங்களின் பணத்தை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை, எந்த நடவடிக்கையும் இல்லை. எப்படியோ என் கணவர் உயிருடன் ஊருக்கு வந்துசேர்ந்ததில் நிம்மதி" என்றார்.

விடைபெறும்போது எம்.ஜி.ஆர். நடித்த விவசாயி படத்திலிருந்து, "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்... ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்... உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டிருப்பதைக் கேட்கமுடிந்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close