நீதிமன்றத்தை ஏமாற்றிய நான்கு பேர்.... உண்மையைக் கண்டறிந்த காப்பீட்டு நிறுவனம்...! | Insurance company decodes a case after 16 years

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (16/07/2017)

கடைசி தொடர்பு:17:54 (16/07/2017)

நீதிமன்றத்தை ஏமாற்றிய நான்கு பேர்.... உண்மையைக் கண்டறிந்த காப்பீட்டு நிறுவனம்...!

திருப்பூர்

16 வருடங்களுக்கு முன்பு விபத்தில் கைவிரலை இழந்த ஒருவர், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டதால், விபரீதமானதொரு பிரச்னையில் சிக்கிக்கொண்டார். அவருக்குத் துணைபோனவர்களும் வசமாகச் சிக்கினர்.

திருப்பூரை அடுத்துள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். பின்னலாடை நிறுவனத் தொழிலாளியான இவர், கடந்த 2000-வது ஆண்டு திருப்பூர் பல்லடம் சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அமிர்தலிங்கம் என்பவர் ஓட்டிவந்த கார் மோதி விபத்தில் சிக்கினார். இவ்விபத்தில் சரவணனின் வலது கைவிரல் துண்டிக்கப்பட்டதாகக்கூறி, அவருடைய நண்பர் கணேசன் திருப்பூர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தவிபத்து தொடர்பான வழக்கை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராக இருந்த நடராஜன் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விபத்துக்குக் காரணமான அமிர்தலிங்கம் அபராதம் செலுத்திய நிலையில், தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக்கோரி, மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கையும் தொடுத்தார் சரவணன். இதனால் காப்பீட்டு நிறுவனத்தினர், சரவணனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் வழங்கினர். பணத்தைப் பெற்றுக்கொண்ட சரவணன், அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தத்தொடங்கினார். எனினும், சரவணன் மீது காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கு ஒருவித சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. தொடர்ந்து, சரவணனைக் கண்காணித்தனர். அப்போது, அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதற்குக் காரணம், காரை ஓட்டிவந்து, சரவணன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட அமிர்தலிங்கம்தான், சரவணனின் தந்தை என்ற தகவல் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிய வந்தது. மேலும் இந்த வழக்கில் அவர்களை தந்தை - மகன் என்ற உறவுமுறையைப் பதிவு செய்யாமலேயே இருந்திருப்பதையும் கண்டறிந்தார்கள் அதிகாரிகள். பின்னர், சரவணனுக்கு நேர்ந்த விபத்துகுறித்து அவர்கள் மிக அழுத்தமாக தேடித்தேடி விசாரித்தபோதுதான், சரவணன் தன் தந்தை, அமிர்தலிங்கத்தையும், உறவினர் கணேசனையும் சேர்த்துக்கொண்டு திட்டமிட்டு ஏமாற்றி இருப்பது கண்டறியப்பட்டது.

திருப்பூரில் கைது

கடந்த 2000-வது ஆண்டு சரவணன் பணியாற்றிய பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரம் ஒன்றில் அவருடைய கை சிக்கியதில் விபத்து ஏற்பட்டு அவரின் வலது கைவிரலை இழந்திருக்கிறார். உடனே, அவரை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். மேலும் மருத்துவக்காப்பீடாக 48,500 ரூபாய் காப்பீட்டுத் தொகையும் சரவணனுக்கு அப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

தான் பணியாற்றிய நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்துக்காக காப்பீட்டுத்தொகை பெற்றதோடு நிறுத்திக்கொள்ளமல், அந்த விபத்தை அப்படியே சாலையில் தனக்கு நேர்ந்த மோட்டார் வாகன விபத்தாக மாற்றியுள்ளார். அதன்பேரில், விபத்துக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெறுவதற்காக தந்தை அமிர்தலிங்கம் மற்றும் உறவினர் கணேசனுடன் சேர்ந்து நாடகமாடியுள்ளார். இதற்குக் காவல்துறை அதிகாரி நடராஜனும் பக்கபலமாக இருந்து உதவியுள்ளார். பொய்யாக ஒரு புகார் பதிவுசெய்து, நீதிமன்றத்தை ஏமாற்றி, காப்பீட்டு நிறுவனத்திடம் பணம்பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் கோவை சி.பி.சி.ஐ.டி  போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. 

தாங்கள் செய்த ஏமாற்று வேலைக்காக 16 ஆண்டுகள் கழித்து, இப்போது தண்டனை கிடைக்கப்பெற்றிருப்பதை வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டுமல்ல அனைவருமே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்