Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர் தன் இறுதிநாள்களைக் கழிக்க விரும்பிய இல்லம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா...? #SpotReport

எம்.ஜி.ஆரின் திருச்சி சொத்து

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி முடித்துவிட, அவரின் விசுவாசிகள் வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவினர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடுவது அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்திவருகிறது அ.தி.மு.க. ஆனால் அதே திருச்சியில் எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான ஒரு பங்களா பாழடைந்து கிடப்பதுடன், அதன் வளாகத்தில் இருந்த, விலை உயர்ந்த சந்தன மரம் ஒன்று, மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டுள்ள அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் சொத்துக்களுக்கே பாதுகாப்பில்லாத நிலையைத்தான் உணர்த்துகிறது இந்தச் சம்பவம்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தனது வாழ்நாள் முழுவதும் திருச்சியை மையப்படுத்தியே பல நிகழ்வுகளை முன்னெடுத்தார். முத்தாய்ப்பாக தன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் இன்னொரு தலைநகராக திருச்சியை அறிவிக்கும் யோசனையை முன்வைத்தார். ஆனால் அவரது ஆசை சில நிர்வாகக் காரணங்களால் நிறைவேறாமல் போனது. குறிப்பாக சென்டிமென்டாகவே திருச்சியை நேசித்த எம்.ஜி.ஆர், தனது முதுமைக் காலத்தை திருச்சியில் கழிக்க விரும்பினார். அதை அப்போதைய அமைச்சர் நல்லுச்சாமியிடம் எம்.ஜி.ஆர் சொல்ல, அவர் திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2 ஏக்கரில் பண்ணைவீடு பாணியில், தோட்டங்களுக்கு நடுவே ஒரு பங்களா வாங்கப்பட்டது. 

சந்தனமரம்

1984-ம் வருடம் இந்தப் பங்களாவை 4 லட்சத்துக்கு வாங்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர். 'ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. கோபாலமேனன் அவர்களின் புதல்வர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன்’ வாங்கியதாகப் பத்திரம் சொல்கிறது.

தமிழகத்தின் மத்தியில் இருப்பதால் திருச்சியைத் தலைநகராக்கத் திட்டம் தீட்டிய எம்.ஜி.ஆர், கட்சி அலுவலகம் அமைப்பதற்காகவே இந்த இடத்தை வாங்கியதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பணியாளர்கள் ஓய்வு இல்லம் உள்பட சகல வசதிகளுடன் இருந்த இந்தப் பங்களாவில், தனக்குப் பிடித்த சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர். அதன்படி பங்களாவின் முதல் மாடி, தரைத்தளம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டது. ‘அந்தப் பங்களாவில் விரைவில் வந்து தங்குவேன்’ என திருச்சியில் கட்சிப்பிரமுகர்களிடம் எம்.ஜி.ஆர் கூறிவந்தார். அவர் கூறியபடி மராமத்து வேலைகள் பார்த்து, கனஜோராகத் தயாரான நிலையில்தான், எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்னர் அவர் இறந்துவிட, அதன் பின்னர் பங்களா கேட்பாரற்றுப் போனது. எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்தினரும், கட்சியினரும் பங்களாவை சொந்தம் கொண்டாடினர். இதனால் சிக்கல் உண்டானது 

தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்குவதற்காக வாங்கப்பட்ட நிலங்களும் தோட்டமும் இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. சுற்றுச் சுவர்கள் இல்லாததால், அப்பகுதி மக்கள், குப்பைகளைக் கொட்டி, குப்பை மேடாக்கி உள்ளனர். மேலும், பங்களாவைச் சுற்றியுள்ள நிலத்தில் இருந்த மரங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி எடுத்துச் சென்றுவருகிறார்கள். இந்நிலையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இரவில் வந்த மர்ம நபர்கள், அப்பகுதியில் இருந்த சந்தன மரத்தை வெட்டி, மரத்தின் நுனிப்பகுதியையும், அடிப்பகுதியையும் அங்கேயே போட்டுவிட்டு, நடுப்பாகத்தை மட்டும் கடத்திச் சென்றுள்ளனர். விலை உயர்ந்த சந்தனமரம் வெட்டிக் கடத்தப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த பங்களாவைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைக் மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை, தற்போது வலுத்து வருகிறது.

பங்களாவின் காவலாளி ஆறுமுகம், “கடந்த 29 வருடங்களாக இங்கு காவலாளியாக இருக்கிறேன். கட்சியின் மாவட்டச் செயலாளராக வருபவர்கள்தான் எனக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். இந்தப் பங்களாவின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து கிடப்பதால், இந்தப் பகுதியில் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கு, சுவரை உடைச்சிட்டு, இப்பகுதி மக்கள் குப்பைத் கொட்டுகிறார்கள். இதனால் இந்த இடமே குப்பைமேடாக மாறிவருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தட்டிக்கேட்டால் பிரச்னை செய்கிறார்கள். போலீஸில் புகார் கொடுக்கச் சென்றால் எம்.ஜி.ஆர் சொத்திலேயே வில்லங்கம்னு பத்திரிகையில செய்தி வந்தால், தங்களுக்குச் சிக்கல் வரும்னு புகார் எடுக்க மாட்டேங்குறாங்க. ஒரு வாரத்துக்கு முன்னால், யாரோ சிலர் இரவோடு இரவாக, சந்தன மரத்தை, வெட்டிக் கடத்தி இருக்காங்க. அரசு, இந்த நிலத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொடுத்தால், எம்.ஜி.ஆர் அய்யாவோட சொத்தைப் பாதுகாக்க முடியும். இல்லைன்னா,  இந்த இடமே வீணாகப் போய்விடும்” என்றார் கவலையுடன்.

எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டுவிழாவில் அவர் சொத்தைப் பாதுகாக்கும் வேலையை அரசு செய்யலாமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement