“பவர்பாண்டி படம் போல 75 வயது முதியவரைக் கண்டுபிடிக்க உதவிய ‘ஃபேஸ்புக்’ ” - சென்னை நெகிழ்ச்சி | Facebook helps to find an oldman alike in the movie 'Power Pandi'

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (17/07/2017)

கடைசி தொடர்பு:12:04 (17/07/2017)

“பவர்பாண்டி படம் போல 75 வயது முதியவரைக் கண்டுபிடிக்க உதவிய ‘ஃபேஸ்புக்’ ” - சென்னை நெகிழ்ச்சி

தாமோதரன்

பவர்பாண்டி படத்தில் 'ஃபேஸ்புக்' மூலம் நடிகர் ராஜ்கிரன் குடும்பத்துடன் சேருவார். அதுபோல சென்னையில் மாயமான 75 வயது முதியவர், ஃபேஸ்புக் மூலம் ஏழுநாள்களுக்குப்பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.

பள்ளிக்கரணை, பிள்ளையார் கோயில் அருகே முதியவர் ஒருவர் சில நாள்களாகத் தங்கியிருந்தார். இதை அந்தப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவன் சாமுவேல் பூபாலன் கடந்த 9ம் தேதி பார்த்துள்ளார். உடனே அவர், முதியவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, அவர் பெயர் தாமோதரன், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் தெரிந்தது. ஆனால், முகவரி தெரியவில்லை. இதையடுத்து சாமுவேல் பூபாலன், பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கும் சமூக சேவகர் வெங்கடேஷிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக வெங்கடேஷ், வசந்தி, சோமசுந்தரம் ஆகியோர் பள்ளிக்கரணைக்குச் சென்று முதியவர் தாமோதரனை மீட்டு சென்னை போரூரில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இதன்பிறகு சாமுவேல் பூபாலனின் செயல் தாமோதரனை அவரது குடும்பத்தினருடன் சேர்க்க வைத்துள்ளது.

தாமோதரன்

இதுகுறித்து சாமுவேல் பூபாலன் கூறுகையில், "பள்ளிக்குச் செல்லும் வழியில் முதியவர் ஆதரவற்ற நிலையில் படுத்திருந்ததைப் பார்த்ததும் அவரிடம் விசாரித்தேன். அப்போது, அவர் வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்துவிட்டதாகத் தெரிவித்தார். அக்கம், பக்கத்தில் முதியவர் குறித்து விசாரித்தேன். யாருக்கும் விவரம் தெரியவில்லை. இதன்பிறகு போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தேன். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் மூலம் முதியவரை மீட்டோம். அவரது புகைப்படத்தை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். அந்தப்புகைப்படத்தை என்னுடைய நண்பர்கள் பலர் ஷேர் செய்திருந்தனர். 
ஒரு வாரத்துக்குப்பிறகு முதியவர் தாமோதரனை,  கல்பனா என்பவர் தேடுவதாக  தகவல் கிடைத்தது. மேலும், தாமோதரனின்  பேத்தி கல்பனா என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம், விவரத்தைச் சொன்னேன். உடனே தாமோதரனின் குடும்பத்தினர் இன்று சென்னைக்கு வந்தனர். போரூரில் உள்ள முதியோர் இல்லத்துக்குச் சென்று தாமோதரனை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 

தாமோதரன்

 குடும்பத்தினரைப் பார்த்த தாமோதரன், கண்ணீர்விட்டு கதறினார். அதுபோல தாமோதரனின் குடும்பத்தினரும் அவரைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர்விட்டனர். இந்த உருக்கமான நிகழ்வைப் பார்த்த அனைவரும் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். 

இதையடுத்து தாமோதரனைப் பத்திரமாக மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவிய வெங்கடேஷ், வசந்தி, சோமசுந்தரம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர் தாமோதரனின் குடும்பத்தினர். குறிப்பாக மாணவர் சாமுவேல் பூபாலனுக்கு நன்றி தெரிவித்ததோடு கைகுலுக்கி அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். போரூர் முதியோர் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு தாமோதரன் அங்கிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து தாமோதரனின் பேத்தி கல்பனா கூறுகையில், “கடந்த 9ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்காக சென்றோம். அப்போது, தாமோதரன் தாத்தா மட்டும் தனியாக வீட்டிலிருந்தார். அவருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லை. திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு நாங்கள் வந்தபோது, தாத்தாவைக் காணவில்லை. அவருக்கு சென்னையில் அனைத்து இடங்களும் தெரியும். இதனால் வெளியில் சென்றிருப்பார் என்று கருதினோம். அவர் வீட்டுக்கு வராததால் உறவினர் வீடு, என அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடினோம். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 13ம் தேதி பள்ளிக்கரனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்தசமயத்தில், பள்ளிக்கரனை பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் தாத்தா போட்டோவைக் காட்டி விசாரித்தோம். அதில் ஒரு டிரைவர், இந்த தாத்தா புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தேன் என்று தெரிவித்ததோடு, அந்தப்புகைப்படத்தை பதிவு செய்த சாமுவேல் பூபாலன் குறித்த விவரத்தை தெரிவித்தார்.

இதன்பிறகு சாமுவேலிடம் போனில் பேசினோம். அவர்தான் தாத்தாவை மீட்டு போரூர் முதியோர் இல்லத்தில் சேர்த்ததாகத் கூறினார். இதன்பிறகு கடந்த 15ம் தேதி தாத்தாவை வீட்டுக்கு அழைத்துவந்தோம். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்கள் இதுபோன்ற நல்ல செயலுக்கும் பயன்படுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்துக்காக உழைத்த தாமோதரன் தாத்தாவை மீட்க உதவிய சாமுவேல் தம்பிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

ஃபேஸ்புக் உதவியால் முதியவர் தாமோதரன் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார். பவர்பாண்டி படத்தில் நடிகர் ராஜ்கிரனும் ஃபேஸ்புக் உதவியால் குடும்பத்தினருடன் சேருவார். அந்த சினிமா காட்சியை இந்தச் சம்பவம் நிஜமாக்கியுள்ளது.  


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை