Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“கதிராமங்கலத்துக்கு ஓ.என்.ஜி.சி... எங்களுக்கு டி.என்.பி.எல்!” - கண்ணீர்விடும் கரூர்

   டி.என்.பி.எல்

ரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு காகித ஆலையான டி.என்.பி.எல், அப்பகுதியின் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருப்பதாகக் கதறுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.

 "கதிராமங்கலத்தில் உள்ள நிலங்களையும், நீர் ஆதாரத்தையும் ஓ.என்.ஜி.சி பாழ் பண்ணுதுன்னா, கரூர் மாவட்டம் காகிதபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இருபது கிராமங்களின் நிலத்தடி நீரை ராட்சத போர்வெல்களைப் போட்டு உறிஞ்சி எடுக்குது டி.என்.பி.எல்.ங்கிற அரசோட காகித ஆலை. காவிரி ஆற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நாளொன்றுக்கு மூன்று கோடியே, முப்பது லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்கிறாங்க. குடிநீருக்காக சமீபத்தில் திறந்துவிட்ட தண்ணீரையும், மடை கட்டி மோட்டார் போட்டு உறிஞ்சு எடுத்துட்டாங்க. இதனால், எங்க பத்துக் கிராம மக்களுக்குக் குடிக்க தண்ணீர் கிடைக்கலை. வயல்ல போட்ட வெள்ளாமை கருகிவிட்டது. ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு நீரால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசா போய்விட்டது. என வெடிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.


 கரூர் மக்கள்

கரூர் மாவட்டம்,காகிதபுரத்தில் 520 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது தமிழக அரசுக்குச் சொந்தமான காகித ஆலை. 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் திறக்கப்பட்ட இந்த ஆலை,காவிரியை ஒட்டி சில கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. அதுதான், இப்போது பிரச்னையையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. டி.என்.பி.எல்லுக்கு எதிரான போராட்டக் களத்தில் இருந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயனிடம் பேசினோம்.


  "இந்த ஆலையைத் துவக்கும்போது, 'இப்பகுதியின் நீர் ஆதாரம், சுற்றுச்சூழல், விவசாயம் என எதற்கும் பங்கமில்லாமல் நடத்துவோம் என்றும், இந்தப் பகுதி மக்களுக்கு ஆலையில் வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தனர். ஆனால், இதில் எதையும் நிறைவேற்றலை. அதேசமயம் அதிகமான எண்ணிக்கையில் ஆலைக்குள் ராட்சத போர்வெல்களை அனுமதியின்றி அமைத்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பிச்சாங்க. அதோடு, காவிரி ஆற்றில் இருந்தும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

இப்படிக் கடந்த ரெண்டு வருடங்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி, சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீரை அதள பாதாளத்திற்கு கொண்டு போய்விட்டனர். மேலும், கழிவு நீரை பாசன வாய்க்காலான புகழூர் வாய்க்காலில் திறந்துவிட்டு, அது வாங்கல் வாய்க்காலில் கலந்து, பின்பு நெரூர் வாய்க்காலில் கலந்து, மறுபடிம் காவிரியில் போய் கலக்குது. இதனால், கடந்த நான்கு வருடங்களில் இந்த மூன்று வாய்க்கால்களாலும் பாசனம் பெற்று கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் என முப்போகம் விளைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டு, இப்போது கோரை விளையுற வயல்களாக மாறிவிட்டன. இதனால், இப்பகுதி விவசாய குடும்பங்கள் நொடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர்

சமீபகாலமாக காலையிலும், மாலையிலும் ஏதோ பவுடர் மாதிரி பறந்து வந்து எங்க மேல படருது. இதனால், கைகால்கள் அரித்து, சில நாள்களில் தோல்நோய்கள் வர ஆரம்பிச்சிடுது. காவிரி வறண்டதால், போர்வெல்களை நம்பி மிச்சமிருந்த நிலங்களில் விவசாயம் பண்ணிட்டு இருந்தோம். ஆனால், ஆலைக்குள் வருவாய்த்துறை, ஊராட்சி மன்றம், குடிநீர் வடிகால் வாரியம்ன்னு எந்தத் துறையிடமும் அனுமதி பெறாமல் முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களைப் போட்டு, தண்ணீர் உறிஞ்சுறாங்க. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு, எங்க போர்வெல்களில் தண்ணீர் வரலை. மூலிமங்கலம், சொட்டையூர், செங்காடுதுறை என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வயல்கள் தண்ணீர் இல்லாம கருகிக்கிடக்கு. குடிக்கவும் தண்ணீர் கிடைக்கலை. இதனால், 'அனுமதி இல்லாமல் போடப்பட்ட போர்வெல்களை இயக்கக் கூடாது' என மக்கள் போராட்டம் நடத்தினோம். ஆனாலும், தொடர்ந்து இயக்கிட்டுதான் இருக்காங்க. கதிராமங்கலத்தை ஓ.என்.ஜி.சி பாழ்படுத்துதுன்னா, எங்க பகுதியை டி.என்.பி.எல் சீரழித்து வருகிறது. காவிரிக் கரையோரம் முப்போகம் விவசாயம் பண்ணினது போய் இப்போது கோரைகள் விளையும் அதிசயம் நடக்குது. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.


 டி.என்.பி.எல் ஆலைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்திருக்கும் வழக்கறிஞர் மதி, " ஆலைக்குள் 51 ராட்சத போர்வெல்கள் அனுமதியின்றி போடப்பட்டு ஒவ்வொன்றும் ஏழரை ஹெச்.பி மோட்டாரோடு, 1000 ல் இருந்து 1200 அடிகள் வரை போடப்பட்டிருக்கு. இதில், முப்பது போர்வெல்கள் கடந்த ஆறு மாதத்திற்குள் யாரிடமும் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக போட்டிருக்கிறார்கள். அதோடு, ஆலைக்குள் 38 ஆயிரம் கொள்ளளவு கொண்ட எம்.பியூப் மூன்று உள்ளது. இதன்மூலம், தினம் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதைத் தவிர, சொட்டையூர் அருகே உள்ள நாற்றங்கால் பண்ணையிலும் 6 போர்வெல்கள், கட்டிப்பாளையம் அருகே காவிரியின் நடு ஆற்றில் இருபது, முப்பது அடிகள்ல ஏழு வட்டக் கிணறுகள் என அமைத்து ஒவ்வொன்றிலும் இருந்தும் 35 ஹெச்.பி பவருள்ள மோட்டாரைப் போட்டு நீர் எடுக்கிறாங்க. காவிரியில் இருந்து மட்டும் தினம் மூன்று கோடியே,மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால்,இங்குள்ள மக்கள் குடிநீர்ப் பற்றாக்குறையில் தவிக்கிறாங்க. 

ஆலைக்கு எதிராக நான் தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அட்வகேட் கமிஷனை நியமித்தது. 03.6.2017ல் ஆலையைப் பார்வையிட அவர்கள் சென்றபோது, நிர்வாகம் பல போர்வெல்களை மறைத்து வைத்துவிட்டது. அப்படியும் வழக்கறிஞர்கள், 29 போர்வெல்களைப் பார்வையிட்டு அதில் 21 போர்வெல்கள் அனுமதியற்றது எனக் கண்டுபிடித்து தனது அறிக்கையை 28.06.2017 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன்பின் புதிய போர்வெல்களை இயக்கத் தடை விதித்தது நீதிமன்றம். செவிடன் காதில் சங்குபோல் இந்தத் தடையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் போர்வெல்களை இயக்கிக்கொண்டு,காவிரியிலும் கணக்கில்லாம தண்ணீரை இப்போதுவரை எடுத்துக்கிட்டுதான் இருக்காங்க. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடலாம்ன்னு இருக்கேன்" என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து ஆலை தரப்பில் பேச முயன்றோம். நம்மை உள்ளேகூட அனுமதிக்கவில்லை. ஆலையின் சிவில் பிரிவு பொது மேலாளர் தணிகாசலம் என்பவரிடம் பேச முயன்றோம். அவரும் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். 

விவசாயிகள் இந்தியாவில் சபிக்கப்பட்டவர்களா என்ன?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close