Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஜூலை புத்தகக்காட்சி இளைஞர்களை வசீகரிக்கும்” புதுத் திட்டத்துடன் அமைப்பாளர்கள்!

சென்னை புத்தகக்காட்சி 2017 ஜூலை

சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் மூன்றாவது புத்தகக்காட்சி நடத்தப்படுகிறது. இதில் அனைவரும் இலவசமாக புத்தகங்களைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

இது குறித்து குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம், ''மூன்றாவது சென்னைப் புத்தகத் திருவிழா ஜூலை 2017, 21 முதல் 31வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 252 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்தும் புத்தகப் பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். 

புத்தகவிழாவின் முன்னோட்டமாக, ஜூலை 18-ம் தேதி இதே மைதானத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகம் வழங்கப்படும். வாசித்த புத்தகம், அவர்களுக்கே வழங்கப்படும். அந்த நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாட ஆஸ்திரேலியாவிலிருந்து குழந்தை எழுத்தாளர் டிம்முரே வருகைதருகிறார். 

ஜூலை 20 அன்று காலையில் ஓவியர் விஸ்வம் தலைமையில், ‘ஆணியாய் அறையப்படும் கல்வியை விதைகளாய்  தூவுவது எப்படி?’ என்ற பொருளில், தமிழகத்தின் பிரபல ஓவியர்கள் ஓவியம் வரைவார்கள். மாணவர்களும் கல்வி ஆர்வலர்களும் இதைப் பார்வையிடமுடியும். இது மட்டுமின்றி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, பள்ளி அளவில் முதல் 3 பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். 

புத்தகத் திருவிழா வளாகத்திலும் ஜூலை 22 அன்று காலை 9 மணிக்குப் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்படும். 12 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 

ஜூலை 21 காலை 10 மணியளவில் நிதியமைச்சர் தலைமையில், பள்ளிக் கல்வி அமைச்சர் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைக்கிறார். 

ஜூலை 22 அன்று மாலை, நீண்டகாலம் பதிப்புத் துறையில் பணியாற்றிய அருணோதயம் அருணன், சைவ சித்தாந்தக் கழகம் இரா.முத்துக்குமாரசாமி, இந்து பப்ளிகேஷன் வி.கரு.ராமநாதன் மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மருத்துவத்துறை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆங்கில மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதி சாதனைபடைத்த மருத்துவர் முத்துச்செல்லக்குமாருக்குச் சிறப்பு விருதும் நீதியரசர் மகாதேவனால் வழங்கப்படுகிறது. 

நிறைவு நாளன்று 2016, 2017-ல் வெளிவந்த சிறந்த 10 நூல்களுக்கு, கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை தொகுப்பு வரலாறு, மொழி பெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் எனப் பத்து பிரிவுகளில் விருது வழங்கப்படும். 

புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் தினமும் மூன்று எழுத்தாளர்கள் என 35 எழுத்தாளர்கள் பங்கேற்கும் ‘எழுத்தாளர் முற்றம்’ நிகழ்ச்சி நடைபெறும். எழுத்தாளர்களுடன் அவர்களின் படைப்புகள் குறித்து வாசகர்கள் உரையாடும் நிகழ்வாக இது இருக்கும் . 

இந்நிகழ்வில் முருகவேள், ஆதவன் தீட்சண்யா, நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, ச.சுப்பாராவ், இரா.முருகன், மனுஷி, முபீன் சாதிகா, ஜெயராணி, சரவணன் பார்த்தசாரதி, சகானா, கறீம், எச்.பீர்முகமது, மருதன், இரா.முருகன், பேரா.தெய்வசுந்தரம், பேரா.இளமாறன், கௌதம சித்தார்த்தன், லட்சுமி சரவணகுமார், கொ.மா.கோ. இளங்கோ, நாறும்பூ நாதன், எஸ்.சண்முகம், கடற்கரய், யெஸ்.பாலபாரதி, சி.,இளங்கோ, அகரமுதல்வன், கரன் கார்க்கி, வேலு சரவணன் உட்பட  பலர் பங்கேற்கின்றனர். 

தினசரி இலக்கிய நிகழ்வுகள் தவிர, இராமானுஜர் 1000 ஆம் ஆண்டுச் சிறப்புக் கருத்தரங்கம், ’தமிழ் சினிமா 100’விழாவாக சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள், ’மார்க்ஸ் 200’ சிறப்புக் கருத்தரங்கமும் நடைபெறும். 

புத்தகவாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதல் முதலாக புத்தகக்காட்சியைப் பார்வையிட கட்டணம் வசூலிப்பதில்லை என முடிவுசெய்திருக்கிறோம். மாணவர்கள், இளைஞர்களை வாசிக்கவைப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக நூலகங்களுக்கு அரசு சார்பில் புத்தகங்கள் வாங்காதநிலையில் தமிழ்ப் பதிப்புலகம் மிகவும் நலிந்தநிலையில் உள்ளது. இத்துறையானது இப்போது முழுக்க வாசகர்களை மட்டுமே நம்பியுள்ளது. ஒரு கோடி மக்கள்(வந்துபோகும்)  வாழும் மாநகர் சென்னையில், கல்வியாண்டுத் தொடக்கத்தில் ஜூலை 2017ல் மீண்டும் ஒரு சென்னைப் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. 

கடந்த ஆண்டு 2 இலட்சம் வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்துசென்றனர். இந்த ஆண்டு 3 இலட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு நுழைவுக்கட்டணமாக வந்த தொகை நான்கு இலட்சம் ரூபாயை, முதலமைச்சர் வெள்ளநிவாரணத்துக்கு வழங்கினோம். இந்த ஆண்டு அந்தத் தொகையை வாசகர்களுக்கு வழங்கும்படி செய்துள்ளோம். தினசரி நடக்கும் பரிசுப்போட்டியில் வெற்றிபெறுபவருக்கு இந்த ஆண்டு டோக்கன் வழங்கப்படும். அதற்குப் பரிசை வழங்கும் பதிப்பகத்தில், தாங்கள் விரும்பிய புத்தகங்களைக் குறிப்பிட்ட வாசகர்கள் வாங்கிக்கொள்ளலாம்'' இவ்வாறு கூறினார்.

புத்தக விழாவின் ஒருங்கிணைப்பாளர் பாரதி நாகராஜன், நிர்வாகிகள் கவிதா சொக்கலிங்கம், நக்கீரன் சுரேஷ், அறிவாலயம் வெங்கட், டைகர் சுப்பிரமணி ஆகியோர், புத்தகத் திருவிழாவின் அறிவிப்பை வெளியிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close