பிளாஸ்டிக் சர்ஜரியில் தனியாரை மிஞ்சி `கெத்து’ காட்டும் அரசு மருத்துவமனை! | A success Story of stanley hospital in plastic surgery

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (15/07/2017)

கடைசி தொடர்பு:19:42 (15/07/2017)

பிளாஸ்டிக் சர்ஜரியில் தனியாரை மிஞ்சி `கெத்து’ காட்டும் அரசு மருத்துவமனை!

பிளாஸ்டிக் சர்ஜரி என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு வார்த்தை. பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தன் வாழ்நாளில் பலமுறை தனது முகத்தைப் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்துக்கொண்டவர். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட தகவல் தெரிந்தவர்களில் பலருக்குப் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றித் தெரியாது என்பதே உண்மை. 

ஸ்டான்லி பிளாஸ்டிக் சர்ஜரி கட்டிடம் 

`பிளாஸ்டிக் சர்ஜரி’ எனும் `ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை’ என்றதும், அது அழகுக்கான சிகிச்சை (காஸ்மெட்டிக் சர்ஜரி) என்ற தவறான கருத்தே பரவலாக இருக்கிறது. ஆனால் இதை, `பிறவிக் குறைபாடுகள், விபத்து, தீக்காயங்கள், கைகளில் ஏற்படும் காயங்கள், புற்றுநோய் போன்றவற்றால் பாதித்தவர்களுக்கு மருத்துவ உலகம் அளித்த வரப்பிரசாதம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

அதேபோல, பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் அது பிரபலங்கள் செய்துகொள்வது, வசதி படைத்தவர்கள் அதிகப் பணத்தைச் செலவழித்து செய்துகொள்ளும் சிகிச்சை என்றே நினைக்கிறார்கள். ஆனால், ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாகவே தனியார் மருத்துவமனைக்கு நிகராக, சகல வசதிகளுடன் இந்த சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளும் இருக்கின்றன. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவனை அவற்றில் முதன்மையானது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அனைத்து வசதிகளுடன்கூடிய, பிளாஸ்டிக் சர்ஜரிக்கென தனியாக ஒரு துறையே செயல்பட்டுவருகிறது. வட சென்னையில் அமைந்திருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது என்றே சொல்லலாம்.

ஸ்டான்லி- வெளிநோயாளிகளைப் பார்க்கும் இடம்

`சர்வதேச பிளாஸ்டிக் சர்ஜரி தினமான இன்று (15.7.17) ஸ்டான்லி மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறைக்கு ஒரு விசிட் அடித்தோம். மற்ற துறைகளைப்போல, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல், இயங்கிக்கொண்டிருந்தது அந்தத் துறை. தீக்காயமடைந்தோர், கைகளை இழந்த தொழிற்சாலைப் பணியாளர்கள், சாலை விபத்தில் கைகள் மற்றும் உடல் உறுப்புகளை இழந்த பலர் ஒருபக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிறந்த சிகிச்சை பெற்ற மகிழ்ச்சியில் நிம்மதிப் பெருமூச்சுடன் சிலர் வீடு திரும்பிக்கொண்டிருப்பதையும் காண முடிந்தது.  

நோயாளிகளைப் பார்வையிட்டுவிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டு எதிரே வந்துகொண்டிருந்தார் மருத்துவமனையின் டீன் டீன் பொன்னம்பல நமச்சிவாயம்பொன்னம்பல நமசிவாயம். அவர் நம்மிடம் மருத்துமனையின் வசதிகள் குறித்து விளக்க ஆரம்பித்தார்... 

``ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 1971-ம் ஆண்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. 2003-ம் ஆண்டில் இந்தத் துறைக்கென புதிய இரண்டு மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் வெறும் 20 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு, தற்போது 125 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரசிகிச்சைப் பிரிவும் உள்ளது. அவசரசிகிச்சைப் பிரிவில், மாதத்துக்கு சுமார் 1,000 பேர் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவில் வெவ்வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் உள்நோயாளிகளாக மட்டும்  200 பேருக்கு மேல் சிகிச்சை பெறுகிறார்கள். 

தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்தும் இந்தச் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகிறார்கள். குறிப்பாக, வட சென்னையில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால், இயந்திரங்களால் கைகள், விரல்கள் இழந்த தொழிற்சாலைப் பணியாளர்களும், விபத்துகளால் உடல் உறுப்புகளை இழந்தவர்களும்தான் அதிகளவில் சிகிச்சைக்காக வருகிறார்கள். இங்கு உடலில் தீக்காயங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது, விபத்தில் காயம் அடைந்தோருக்கு உறுப்பு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, புற்றுநோயால் அகற்றப்படும் சதைகளை மீண்டும் இணைப்பது... எனப் பல சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. 

ஸ்டான்லி மருந்துவமனை ஒட்டுறுப்பு சிகிச்சை மையம்

இந்தியாவிலேயே ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும்தான் அனைத்து வசதிகளுடன்கூடிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, அடிபட்ட கைகள், விரல்களுக்கு உடனடி அறுவைசிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு சீரமைப்புச் சிகிச்சையின் பகுதிகளாகத் தோள்பட்டை, மூட்டு, கை மணிக்கட்டு, விரல், அசைவுகளுக்கு நரம்பு அறுவைசிகிச்சை, தசை நார் நுண்ணியல் அறுவைசிகிச்சை, மூட்டு அறுவைசிகிச்சை என அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை வல்லுநர்கள் தனியாகவும்... எலும்பு சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள், தோல் மருத்துவர்கள், முகச் சீரமைப்பு மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை நிபுணர்கள் மற்றும் நரம்பு அறுவைசிகிச்சை நிபுணர்கள் என எல்லா மருத்துவர்களுடன் இணைந்தும் பணியாற்றிவருகிறார்கள்.

ஸ்டான்லி மருத்துவமனை 

அத்துடன், இந்தியாவிலேயே, அரசு மருத்துவமனையில், 'காஸ்மெட்டாலஜி' என்ற அழகுக்கலைக்கென பிரத்யேகத் துறை, சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டுமே இருக்கிறது. இந்தத் துறையை மறைந்த டாக்டர் ரத்னவேல் தொடங்கிவைத்தார். இந்தத் துறையில் சரும நோய்கள், தலையில் முடி நடுவது போன்ற சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. தீ, அமிலம், மின்சாரம், மருந்து மற்றும் கெமிக்கல் அலர்ஜி, ஆறாத புண்கள் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் 29-ம் யூ எஸ் ஜி இயந்திரம்தேதி 70 லட்ச ரூபாய் செலவில் காஸ்மெட்டாலஜி துறையில் தோல் வங்கி தொடங்கப்பட்டது. இயற்கை மரணம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள் இங்கே தோல் தானம் செய்கிறார்கள். குறிப்பாக, முகச் சீரமைப்பு, தொந்தி குறைக்கும் அறுவைசிகிச்சை, வழுக்கைத் தலையில் முடி நடுவது, மார்பகச் சீரமைப்பு, முகத் தாடைச் சீரமைப்பு, பிறவிக் குறைபாடுகள்... எனத் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் அனைத்து சிகிச்சைகளும் இங்கு செய்யப்படுகின்றன’’ பெருமிதத்துடன் சொல்கிறார் பொன்னம்பல நமசிவாயம்.

பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் வீ.ரமாதேவி ஸ்டான்லியில் அளிக்கப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து விரிவாகப் பேசினார்... ``பிளாஸ்டிக்கோஸா’ (Plastikosa) என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்ததுதான் இந்தப் பெயர். ‘பிளாஸ்டிக்கோஸா’ என்ற வார்த்தைக்குடாக்டர் ரமா தேவி ‘மோல்டு செய்வது’ என்று பொருள். அதாவது, ஒருவரது உடலில் ஒரு பாகம் சேதமடைந்தால், அவரது உடலில் இருந்து வேறு ஏதாவது பகுதியில் இருந்தோ அல்லது வேறு தானம் தருபவரிடமிருந்தோ தோல்களையோ, திசுக்களையோ, எலும்புகளையோ, தசைகளையோ எடுத்துச் சரிசெய்வதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி.

ஏதாவது அசம்பாவிதத்தாலோ, விபத்தின் காரணமாகவோ மூக்கோ, விரல்களோ, கைகளோ சேதமடைந்தாலோ, துண்டிக்கப்பட்டுவிட்டாலோ உடனே இழந்த அந்த உறுப்பை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதை ஐஸ் கட்டி உள்ள பெட்டியில் போட்டு, கொண்டு வந்தால், அதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் சீரமைத்து விட முடியும்.

காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது பிளாஸ்டிக் சர்ஜரியில் ஒரு வகை. இது முழுக்க முழுக்க அழகுக்காக செய்யப்படும் அறுவைசிகிச்சை. குறிப்பாக, காது, முகம், புருவம் போன்றவற்றை மாற்றி அமைப்பது, முகத்தில் ஏற்பட்டிருக்கும் சுருக்கங்களைச் சரிசெய்வது, மார்பகங்களின் அளவை மாற்றுவது, பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி மீண்டும் பழையநிலைக்கே கொண்டு வருவது... எனப் பல பாகங்களை நம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளலாம்’’ என்கிறார் ரமாதேவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்