Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் இல்லாத படிப்புகள்... கதறும் மாணவர்கள்! #AnnaUniversity

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதியில் இருந்து நடைபெறவிருக்கிறது. இந்தக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) நடத்துகிறது. கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் கோர்ஸில் சேர மாணவர்களிடையே பெரிய அளவில் போட்டி இருக்கும். படித்து முடித்தவுடன் உயர் படிப்புக்குச் செல்லவும், கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம். 

Anna University

"மேற் படிப்புக்குச் செல்லலாம், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்கும் போன்ற விஷயங்களை நம்பித்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் (அக்ரிக்கல்சர் & இரிக்கேஷன் இன்ஜினீயரிங்) படிப்பில் சேர்ந்தோம். ஆனால், நான்கு ஆண்டு படிப்புக்குப் பின்புதான் நாங்கள் படித்த படிப்புக்கு அங்கீகாரம் இல்லை என்றும் வேலையும், உயர்கல்வி படிக்க வாய்ப்பும் மறுக்கப்படுகின்றன என்றும் தெரியவந்தது" என்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் அஸ்வின் பிரகதீஷ், ராஜ்குகன். 

அண்ணா பல்கலைக்கழகம்

“தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமும் எங்கள் படிப்புக்கு அங்கீகாரம் இல்லை என்று புறக்கணித்து விட்டன. நாங்கள் இருவரும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று கரக்பூர் ஐஐடி-யில் படிக்க விண்ணப்பித்தோம். அங்கும் எங்கள் படிப்புக்கு அங்கீகாரம் இல்லை என்று முதுநிலைபடிப்பில் சேர்க்க மறுத்துவிட்டார்கள். வங்கித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கிறார்கள். நேர்முகத் தேர்வில் அங்கீகாரம் இல்லாத படிப்பை படித்திருக்கிறீர்கள் என்று வெளியே அனுப்பி விடுகிறார்கள்" என்று வேதனையோடு விவரித்தார்கள். 

இவர்கள் இருவரும் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பாடம் குறித்து பல அதிர்ச்சிகரமான விவரங்களையும் பகிர்ந்தனர். "இந்தப் படிப்புக்கு மத்திய அரசின் இந்தியா வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் படிப்பை ஆரம்பித்து 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அங்கீகாரம் பெற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. முறையான ஆய்வக வசதியும் இல்லை. வேளாண் பாடத்திற்கு ஒரு பேராசிரியர், ஒரு இணை பேராசிரியர், மூன்று உதவி பேராசிரியர் எனக் குறைந்தபட்சம் ஐந்து பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு உதவி பேராசிரியர் மட்டுமே எல்லா வேளாண்சார்ந்த பாடங்களையும் சொல்லி கொடுக்கிறார். 

சிவில் இன்ஜினீயரிங் துறையின் கீழ் செயல்படுவதால் வேளாண் பாடங்களுக்குப் பதிலாக சிவில் இன்ஜினீயரிங் பாடங்களைத்தான் அதிகளவில் படித்து இருக்கிறோம். வேளாண் குறித்த பாடங்கள் மிகமிகக் குறைவு. 2010-ம் ஆண்டு முதல் அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும் என்று போராடி வருகிறோம். ஆனால், இதுவரை பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எங்களை அலைக்கழித்து வருகிறார்கள். 

எங்களுடைய படிப்பைப்போலவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பல படிப்புகள் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. காரணம், பிற படிப்புகள் பல பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் நடத்தப்படுவதால் பிரச்னை எழுவதில்லை. ஆனால், எங்கள் படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் இருக்கிறது.  நாங்கள் தனித்துத் தெரிவதால் எங்களை எளிதில் அடையாளம் கண்டு புறக்கணித்து விடுகிறார்கள்" என்கிறார்கள். 

இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசி இருக்கிறீர்களா? என்று கேட்டோம். 

“நாங்கள் இந்த விஷயத்தை மூன்று துணைவேந்தர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். ஆனால், உடனே அங்கீகாரம் வாங்குவதாக வாக்குறுதி தருவதோடு சரி. துணைவேந்தர்கள் முன்று வருடப் பதவி முடிந்து வெளியில் செல்வார்களே தவிர, அங்கீகாரம் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பதிவாளரிடம் முறையிட்ட போது 'பல்கலைக்கழகத்தில் 1000 பிரச்னைகள் இருக்கின்றன. இதில் உங்களுடைய பிரச்னையை எப்படித் தீர்ப்பது? போய் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விடுகிறார். சிவில் இன்ஜினீயரிங் துறைத்தலைவர் 'நீங்கள் எங்களுடைய துறையே கிடையாது. துணைவேந்தர் அறிவுறுத்தலின் பேரில்தான் உங்களுடைய படிப்பை சிவில் இன்ஜினீயரிங் துறையில் வைத்திருக்கிறோம். நீங்கள் துணைவேந்தரிடம் போய் பேசுங்கள்' என்று அனுப்பி விடுகிறார். 

தொடர்ந்து பதிவாளருக்கும், துணைவேந்தருக்கும் கடிதம் எழுதிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், அவர்களும் நாங்கள் அமைச்சரிடம் பேசுகிறோம், கல்வித் துறை செயலாளரிடம் பேசுகிறோம் என்று சொல்வதோடு சரி. ஆனால், அதற்குப்பின்பு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை " என்று கடிதங்களின் தொகுப்புகளைக் காண்பித்தார்கள் குகனும், அஸ்வினும். 

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நீர்வள மேலாண்மை மையத்தின் இயக்குநரும் பேராசிரியருமான அம்புஜம் என்பவரிடம் கருத்துக்கேட்டோம். அனைத்து விஷயங்களையும் விரிவாகக்கேட்டவர், "இதுகுறித்து பதிவாளரிடம்தான் நீங்கள் பேச வேண்டும்" என்று சொல்லி விட்டார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளரிடம் பேச முயற்சித்த போது, "ஆளுநர் மாளிகையில் அவ்வையார் சிலை திறப்பு விழாவில் பிஸியாக இருக்கிறார்" என்று பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்தார்கள்.

Anna University

எனவே, பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள், முறையாக அங்கீகாரம் பெற்ற படிப்பைத் தேர்ந்தெடுப்பது அவசியம். புதிய படிப்பாக இருக்கிறதே என்று ஏதேனும் ஒரு படிப்பில் சேர்ந்து விட்டு பின்பு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று வாழ்நாள் முழுவதும் போராடுவது தேவையில்லாதது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close