'அனைத்து மக்களின் வழிபாட்டு தலமாக கலாம் நினைவிடம் விளங்கும் '-பொன்னார் பேட்டி!

ராமேஸ்வரம் அருகே, பேய்கரும்பு கிராமத்தில் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் டாக்டர் அப்துல்கலாம் தேசிய நினைவக பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "குறுகிய காலத்தில் கலாம் அவர்களின் நினைவிட பணிகள் நடந்து முடிந்துள்ளன. ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் போன்றவற்றிற்கு நிகராக இந்த நினைவிடம் அமைந்துள்ளது. நாடு முழுவதும் இருந்து இங்கு வரும் யாத்திரையினர், சுற்றுலாப் பயணிகளின் வழிபாட்டு தலமாக கலாமின் நினைவிடம் விளங்கும். நினைவிடத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ளன. தொடர்ந்து அறிவுசார் மையம், கோளரங்கம், ஆய்வு நூலகம் போன்றவை அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிலத்தினை தமிழக அரசு விரைவில் வழங்கும். வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ள கலாம் நினைவக நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது.

 

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் அவசியமில்லாதது. இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகள் விரைவில் மீட்கப்படும். இலங்கை மீனவர்கள்தான் இந்திய கடற்பகுதியில் அத்துமீறுகின்றார்கள்.

மீனவர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மீனவர்கள் பிரச்னை விரைவில் தீரும்" என்றார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், பி.ஜே.பி மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!