Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“முதலில் ஜல்லிக்கட்டு நடத்தியதே நான்தான்” - தனியொருத்தியின் தடாலடி..

ஜல்லிக்கட்டு நடத்திய நர்மதா

அது ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயம். தமிழகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மெரினாவை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவரோ மதுரை பாலமேட்டிலுள்ள மாடுகளை வைத்து அங்கே 'ரேக்ளா ரேஸ்' நடத்திக் கொண்டிருந்தார்.

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. பெண்கள் எல்லோரும் சுற்றியிருக்கும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டார்கள். ஆனால், இவரோ 'எய்தவன் இருக்க, அம்பை நோகுவது ஏன்?' என்று நேரடியாக மதுபான ஆலைகளுக்கேச் சென்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார். 

தற்போது, நீர்நிலைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி அம்பத்தூர் ஏரியையும், தஞ்சாவூர் அகழியையும் தூர்வார தனி மனிதராகக் களமிறங்கி இருக்கிறார்.

இப்படித்தான் கையிலெடுக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் தனியொரு ஆளாக நின்று வித்தியாசம் காட்டுவதுதான், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நர்மதா நந்தகுமாரின் பாலிஸி. சுமார் ஏழு வருடங்கள் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். 'எத்தனை நாளைக்குத்தான் மாணவர்களுக்குக் கற்பித்துக் கொண்டே இருப்பது, அதைச் செயலில் காட்டுவோம்' என்று கருதி வேலையை உதறிவிட்டுக் களமிறங்கியுள்ளார். போராட்டத்தின் அடையாளமாக எப்போதும் அவர் தோளில் ஒரு பச்சைத்துண்டு தொங்குகிறது.

நர்மதா

நர்மதா பேசுகையில், "எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம். ரெண்டு வருஷத்துக்கு முன்பு அங்கே கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்தது. தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காம மக்களுக்கு இலவச ஃபேன், இலவச மிக்ஸி மட்டும் ஒவ்வொரு வீடா வந்து தந்துட்டு இருந்தாங்க.
எங்கள் முறை வந்தபோது எனக்குத் தரப்பட்ட இலவசப் பொருட்களை திருப்பிக் கொடுத்தேன். இலவசங்களுக்குச் செலவிடற பணம், அத்தனையும் டாஸ்மாக்கிலிருந்து வரும் லாபத்தில் பெற்றதுதான் என்று எனக்குத் தெரிய வந்தது. குடிதண்ணிக்கே பிரச்னை இருக்கற நாட்டில், குடியைக் கெடுக்கிற டாஸ்மாக் தேவையா என்பதற்காகத்தான் நான் அப்படிச் செய்தேன். அதிலிருந்துதான் தொடர்ச்சியாக என்னுடைய போராட்டப் பயணம் ஆரம்பிச்சது” என்று சொல்லும் நர்மதாவுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள். 

நர்மதா

“எனக்குப் பக்கபலமே எனது பிள்ளைகள்தான். காலையில் எழுந்ததும் எனக்கு நியூஸ்பேப்பர் எடுத்துட்டு வந்து தருவாங்க. தினமும் நாட்டு நடப்பைப் பற்றி நான் தெரிந்துகொள்வேன்னு அவங்களுக்குத் தெரியும். நான் போராட்டங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது அவர்களை என் கணவர்தான் பார்த்துப்பார். இப்படித்தான் காவிரி நீர் பிரச்னைக்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று போராட காலிக்குடத்துடன் இங்கிருந்து பயணப்பட்டேன், டெல்லிக்குப்போன அந்த நாட்களில் என் பிள்ளைகள் அவங்களே அவங்களைப் பார்த்துக்கிட்டாங்க. நான் சாதாரணப் பெண். எனக்கு முன்பின் போராட்ட அனுபவம் எதுவும் கிடையாது. போகும் இடத்தில் நம் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் ஒவ்வொரு முறையும் 'உங்களை நீங்கதான் பார்த்துக்கணும்'னு என் பிள்ளைகளிடம் அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்புவேன்” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் நர்மதா. 

காலிக்குடத்துடன் நர்மதா போராடச் சென்ற சமயத்தில் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பு நீக்கத்தை அறிவிக்க, பாவம்! இவரது காவிரிக்கான போராட்டம் பற்றிய தகவல் வெளியே தெரியாமலேயே போய்விட்டது.

“போராட்டம் ஒவ்வொன்றையும் வித்தியாசமான முறையில் செய்கிறீர்களே, இது கவனம் ஈர்க்கவா?" என்று கேட்டால், "நிச்சயம் இல்லை. ஒவ்வொரு பிரச்னையையும் பார்க்கும்போது எனக்கு உணர்வுபூர்வமாக என்ன தோன்றுகிறதோ, அதைத்தான் செய்கிறேன்” என்கிறார் நர்மதா.

அடுத்த பிரச்னையாகக் கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். அதுவும் தனியொருத்தியாகவே களம் காணப்போகிறார். "இந்தமுறை போராட்டம் எப்படி இருக்கப்போகுதுன்னு தெரியலை, பிள்ளைங்களுக்கு இட்லிமாவு எல்லாம் அரைச்சு ரெடி பண்ணிட்டுப் போகணும்" என்று கூறும் நர்மதாவிடம், நம் அடுத்த வீட்டுப் பெண்மணியின் அப்பாவித்தனமான போராட்ட மனோபாவம் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement