Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நினைவு நாள் வரும்போதெல்லாம் பிள்ளைகளின் அலறல் சத்தம்தான் கேட்கிறது’ ... பரிதவிக்கும் பெற்றோர்கள்!

2004 ஜூலை, 16ம் தேதி காலை 10.30 மணி இருக்கும், கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், சமைப்பதற்காக பற்ற வைத்த தீ, கூரையால் வேயப்பட்ட வகுப்பிற்குள் புகுந்து கொளுந்துவிட்டு எரிந்த தீ தன்னுடைய கோரப்பசிக்கு 94 குழந்தைகளை விழுங்கியது. 18 பேரை மட்டும் தீக்காயங்களுடன் விட்டுவைத்தது. அன்று இச்சம்பவம் உலகையே உலுக்கிப்போட்டது. இன்று பதிமூன்று ஆண்டுகளாகியும், ஆறாத வடுக்களை நெஞ்சில் சுமந்தப்படி நினைவு நாளை அனுசரித்து வருகிறார்கள் குழந்தைகளை தீக்கு இரையாக கொடுத்த பெற்றோர்கள். 

ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்து ஏற்பட்ட பள்ளியின் அருகே 94 குழந்தைகள் படம் போட்ட பிளக்ஸ்கள் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், இறந்த குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்தும், அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பேரணியாக ஊர்வலம் சென்று கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவு சின்னத்திற்கு சென்று அங்கே மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பள்ளி தீ விபத்தில் தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த இன்பராஜிடம் பேசினோம், ”எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். தீ விபத்தில் எனது இரண்டு மகன்களும் எரிந்து கரிக்கட்டைகளாக மடிந்துவிட்டனர். என் மகள் சிறுகுழந்தையாக இருந்தாள். இல்லையன்றால் என்னுடைய மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்திருப்பேன். அன்று எங்கள் குடும்பத்தில் போன மகிழ்ச்சி, பதிமூன்று ஆண்டுகளாகியும் மகிழ்ச்சி என்பதே கிடையாது. இப்போது எனது ஒரே மகள் மட்டும் இருக்கிறாள். கடைசி காலத்தில் எங்களை பார்க்க யார் இருக்கா. இப்பவும் அந்த சம்பவத்தை நினைத்து பார்க்கவே முடியலை. ஏன்னா...ஒருத்தன் இருந்திருந்தா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். ஆண்டவன் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆண்டவன்தான் கொடுத்தான் அவனே பறிச்சுக்கிட்டான். அரசு சார்பில் எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் என் மகன்கள் இருந்து, எங்களை கடைசி காலத்தில் காப்பாற்றுவது போல், இந்த அரசால் முடியுமா?  பதிமூன்று ஆண்டுகளாக  தினம், தினம் மகன்களை நினைத்து, நினைத்து செத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் காலத்தில் நானும் என் மனைவியும் மகன்கள் இருக்கின்ற இடத்திற்கே போய்விடுவோம்” என்றார்.


தீ விபத்தில் இறந்துபோன மூன்று வகுப்பு மாணவி சுஷ்மிதாவின் தாயார் மாலாவிடம் பேசினோம், ”என் மகள் இப்ப இருந்தா காலேஜ் படித்துக்கொண்டிருப்பா... சம்பவம் நடந்த அன்று என் மகள் ஆசையா முத்தம்கொடுத்துவிட்டு  போனா... நான் ஸ்கூல் விட்டு வரும்போது எனக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுங்கன்னு  சொன்னா... சரின்னு  சொல்லி அனுப்பி வச்சேன். சாயங்காலம் 4 மணி இருக்கும்.. பள்ளிக்கூடம் எரிஞ்சுக்கிட்டு இருக்குன்னு  சொன்னாங்க. போய் பார்த்தா ஒரே புகை மண்டலமா இருந்துச்சு... என் மகளை அடையாளம் கண்டுபிடிக்க முடியல, அவள் போட்டிருந்த கொலுசை பார்த்து  கண்டுபிடிச்சப்ப அவளை கட்டிப்பிடித்துகூட அழமுடியவில்லை. என் செல்ல அம்முவை பொனாமாத்தான் வீட்டுக்கு கொண்டுவந்தோம்” என அழுதுகொண்டே பேசி முடித்தார்.

தீ விபத்தில் காயமடைந்த மாணவி கௌசல்யாவிடம் பேசினோம், ”நான் மூன்றாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன், முதல் மாடியில்தான் எங்கள் வகுப்பு, அப்போதுதான் திடீரென தீ பிடித்து எறிந்தது. நான் பெஞ்சுக்கு அடியில் போய் ஒழிஞ்சுக்கிட்டேன். யார் என்னை காப்பாற்றினாங்கன்னு  தெரியல. சென்னையில் எனக்கு சிகிச்சை அளித்தார்கள். அதனால் இரண்டு வருஷம் ஸ்கூலுக்கு போகவில்லை. இப்ப பிஎஸ்ஸி முதலாமாண்டு படிச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு தலை, கை, கால்களில் தீ காயம் ஏற்பட்டிருக்கு என்னால் வெளியில் செல்லவே வெட்கமாக இருக்கிறது. கல்லூரிக்கு போகும்போதுகூட நான் அச்சப்பட்டுக்கிட்டேதான் போய்கிட்டே இருப்பேன் என்று கண்ணீர் மல்க பேசிமுடித்தார்.

மற்றொரு பெண்ணான மெர்சியிடம் பேசினோம், ”என்கூட படிச்ச பிள்ளைங்கெல்லாம் அழுதுகிட்டு ஓடினாங்க, ஒரே புகையாக இருந்துச்சு நான் பெஞ்சுக்கு அடியில போய் படுத்துக்கிட்டேன். என் இரண்டு கைகளும், கால்களும் தீயில எறிஞ்சுபோச்சு. இப்ப நர்சிங் காலேஜ்ல மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன், அன்று நான் செத்திருந்தேனா யாரும் எதைப்பற்றியும் கவலைப்படப் போறதில்லை, அழகா இருந்த எனக்கு தீ புண் தழும்பு உடம்பு முழுக்க இருக்கு. நினைவு நாள் வரும்போதெல்லாம் என்கூட படிச்ச பிள்ளைங்களோட அழுகை சத்தம்தான் கேட்கிறது. இதுக்கு மேல என்னிடம் எதுவும் கேட்காதீங்க”  என்றார் கண்ணீரோடு.

 

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement