தாமிரபரணியைச் சுத்தம் செய்த தன்னார்வலர்கள்!

தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள், அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள் என 2000 பேர் இணைந்து செயல்பட்டனர்.

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக தாமிரபரணி ஆறு உள்ளது. பாரதி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா என சுதந்திர போராட்ட வீரர்களின் காலடிபட்ட இந்த புண்ணிய நதியானது சமீப காலமாக மாசிபட்டு வருகிறது. மணல் கொள்ளையர்களின் கைங்கர்யத்தால் முகம் சிதைந்த தாமிரபரணி ஆற்றில் வணிக நிறுவனங்களின் கழிவுகள் கலக்கின்றன. அத்துடன், பொதுமக்களும் பிளாஸ்டிக் குப்பைகளை தாமிரபரணி ஆற்றில் கொட்டுகின்றனர்.

இந்த நிலையில், தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்க வேண்டும் என தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தாமிரபரணி பாதுகாப்பு குறித்து பல்வேறு அமைப்பினருடன் இரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், எந்த முறையில் ஆற்றைப் பாதுகாப்பது என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் ஆலோசனை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கின. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார். அத்துடன், அவரே களம் இறங்கி சீமைக்கருவேல மரங்களை வெட்டி சுத்தம் செய்தார்.

இந்தப் பணியில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 2000 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டு இருந்ததால், அந்தந்த இடங்களில் சுத்தம் செய்தனர். 15 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெற்றன.

மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்ய மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!