யாழ்பாண நூலகத்துக்கு தஞ்சையிலிருந்து 16,000 நூல்கள்..! | 16,000 books has been donated to Yalpanam library from Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (16/07/2017)

கடைசி தொடர்பு:18:25 (02/07/2018)

யாழ்பாண நூலகத்துக்கு தஞ்சையிலிருந்து 16,000 நூல்கள்..!

170 வருட வரலாற்று பெருமை கொண்டது யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகம். தெற்கு ஆசியப் பகுதியில் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக திகழும் இந்த நூலகம் பாரம்பரிய கலாச்சாரம், கல்வி மற்றும் சமயத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியம் மற்றும் கல்வி குறித்து பேசும் போதோ அல்லது எழுதும் போதோ அறிவின் பொக்கிஷமாக திகழும் இந்த நூலகத்தை தொட்டு செல்லாமல் சென்று விட முடியாது.

 யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் நூலகமாக இயங்கி வந்த இந்த நூலகத்தில் அபூர்வமான தமிழ் நூல்களும், ஓலை சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவை தவிர உலகம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட மிகச் சிறந்த நூல்களும் இங்கு இடம் பெற்றிருந்தன. சுமார் 97 ஆயிரம் நூல்கள் இருந்த இந்த நூலகம் 1981-ம் ஆண்டு இன கலவரத்தின் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட்டது. நூலகத்தில் இருந்த 97 ஆயிரம் நூல்களும் எரிந்து போன நிலையில் நூலக கட்டிடமும் சேதமடைந்தது. 

 உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் யாழ்ப்பாணம் பொது நூலகம் இந்தியாவின் உதவியுடன் சீரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த நூலகத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்அ.ப்துல் கலாமின் மார்பளவு சிலை நிறுவப்பட்டது.

 இந்நிலையில் உலகெங்கும் உள்ள தமிழர்களின் தாய் நூலகமாக திகழும் இந்த நூலகத்திற்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ் சங்கம், திருவையாறு தமிழ் ஆய கல்விக் கழகம், தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கம், பாரத் மேலாண்மை கல்லூரி மற்றும் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரால் வரலாறு, இந்திய கலை மற்றும் கலாச்சாரம், மெய்யியல், விஞ்ஞானம், அரசியல், சமயம் என பலதரப்பட்ட துறை சார்ந்த 16 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

சமீபத்தில் இலங்கை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இந்த விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் ஆகியோர் இந்தப் புத்தகங்களை வழங்கினார்கள். இந்திய துணைத் தூதர் நடராஜன் தலைமையில் நடந்த இந்த விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறே, வடமாகாண சபை தலைவர் சிவஞானம், மாவட்ட செயலாளர் வேதநாயகன் மற்றும் மாகாண, மத்திய அரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.