தமிழக அமைச்சர்களின் பேச்சு ஜனநாயகத்தை பறிக்கும் செயல்..! மு.க.ஸ்டாலின் தாக்கு

கமல் மீது வன்மம் கொண்டு தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டுவது ஜனநாயகத்தை பறிக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கமலின் இந்தக் கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கைது செய்யவேண்டும் என்றும் தெரிவித்துவருகின்றனர். அமைச்சர்களின் இந்தச் செயலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய அறிக்கையில், 'சி.பி.ஐ, அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசு துறைகள் தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்று தெரிவித்திருந்தன.

ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்பட வாக்களித்த அனைவருக்கும் உண்டு. விமர்சனங்களில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு விளக்கம் அளிப்பது தான் ஜனநாயகத்தின் அழகு. ஆனால், கமல் மீது பாய்ந்து பிறாண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். தமிழக அரசு குறித்த கமல்ஹாசனின் கருத்து மக்களின் குரலாகும். ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்லி வருவதை நடிகர் கமல் வெளிப்படுத்தியுள்ளார். கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பதும் அவரை மிரட்டுவதும் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்' என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!