வெளியிடப்பட்ட நேரம்: 23:07 (16/07/2017)

கடைசி தொடர்பு:09:45 (17/07/2017)

'பாரதி பிறந்த தினத்தை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்யும்!'- கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்திலுள்ள உமறுப்புலவர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில், 'பாரதி பிறந்த தினத்தை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்கும் கோரிக்கையை அரசு பரிசீலனைசெய்யும்’ என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அரண்மனையில் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் பயின்று, பின்னர் தன் ஆசானுக்குப் பிறகு அவைப்புலவராகப் பொறுப்பேற்று சீறாப்புராணம் இயற்றி, நல்லடக்கமான அமுதகவி உமறுப்புலவருக்கு, தமிழக அரசால் கடந்த 29.10.2007 அன்று எட்டயபுரத்திலேயே மணி மண்டபம் திறக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. 

உமறுப்புலவரின் பிறந்த தினம், அரசு விழாவாக நடைபெறும் என சமீபத்தில் சட்டமன்றத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விழா, உமறுப்புலவர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,

‘’எட்டயபுரம் என்றாலே மகாகவி பாரதியார் என்றுதான் அனைவருக்கும் நினைவில் வரும். பாரதி பிறந்த வீட்டின் அடுத்த தெருவிலேயே அமைந்துள்ளது உமறுப்புலவர் மணிமண்டபம். இது, எட்டயபுரத்துக்கு இன்னொரு சிறப்பு. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பாரதியார் நூற்றாண்டு விழா நடத்தியது மட்டுமல்லாமல் பாரதியார் மணிமண்டபம், பாரதியார் பெயரில் மகளிருக்கான தொழில்நுட்பக் கல்லூரி, பாராதியார் கூட்டுறவு நூற்பாலை ஆகியவை அமைத்து சிறப்பித்தார்கள். அவருக்குப் பின், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவும், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப் பண்பாட்டு அறிஞர்கள் ஆகியோருக்கு நினைவு மணி மண்டபங்கள் அமைத்து, அரசு விழாக்கள் நடத்திப் பெருமைசேர்த்தார். அதன்படியே சீறாப்புராணம் தந்த அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாள் விழாவும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரும் கவிஞருமான இந்த மண்ணில் பிறந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை, ‘’பத்திரிகையாளர் தினமாக’’ அறிவிக்க வேண்டும் என்ற பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழார்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பரிசீலனை செய்யும்’’ என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க