Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நல்லதுக்குக் காலமில்லை... ஏ.எஸ்.பி யின் டிரான்ஸ்பருக்காகப் புலம்பும் காஞ்சிமக்கள்!

துப்பாக்கி

திகாரி ஒருவரைப் பணி இடமாற்றம் செய்யும்போது மக்கள் கண்ணீர் சிந்துவதை திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அது நிஜமாகியுள்ளது. மக்களின் அபிமானம் பெற்ற அந்த அதிகாரி ஸ்ரீநாத் ஐ.பி.எஸ். இருவாரங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ் அளவிலான அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு பட்டியல் வெளியானது. இதில் காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி யாக பணியாற்றிவந்த ஸ்ரீநாத்தும் ஒருவர். சென்னை சிபிசிஐடி எஸ்.பியாக தற்போது பதவி உயர்வு மாற்றப்பட்டிருக்கும் ஸ்ரீநாத், இரண்டு வருடத்தில் காஞ்சி மாவட்டத்தில் மேற்கொண்ட பணிகளால் அவரை மறக்கமுடியாமல் தவித்துவருகின்றனர் மக்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஆன்மிக நகரமென்றாலும் அதை மறக்கடிக்கும் விதமாக கடந்த பத்து வருடங்களில் க்ரைம் ரேட் எகிறிய ஒரு மாவட்டமாக மாறியிருந்தது. குறிப்பாக தாதா ஸ்ரீதர். இப்போது வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்தபடி தமிழக காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் ஸ்ரீதர் அங்கிருந்தபடியே தன் பராக்கிரமங்கைளைக் காஞ்சியில் அரங்கேற்றிவந்தார். காவல்துறைக்குக் குடைச்சல் தந்துவந்த ஸ்ரீதரின் கொட்டம் கடந்த 2 வருடங்களாக காஞ்சியில் இல்லை. ஸ்ரீதர் தொடங்கி மாவட்டத்தின் கடைக்கோடியில் புழங்கிவந்த சிறுசிறு ரவுடிகள் வரை தங்கள் வாலை சுருட்டிவைத்துக்கொண்டிருந்தனர் கடந்த 2 வருடங்களாக. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஏ.எஸ்.பி ஆக இருந்த ஸ்ரீநாத் என்கிறார்கள். 

ஸ்ரீதர்இதுகுறித்து பேசிய உள்ளுர்வாசி ஒருவர், “கடந்த 2015 ம் வருடம் செப்டம்பர் மாதம் ஸ்ரீநாத் இங்கு பணிக்குச் சேர்ந்தார். அதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்த ஒரு மாவட்டமாக இருந்தது. பல எஸ்பி-க்கள் மாறி மாறி வந்தபோதும் இந்த ரவுடியிஸத்தை குறைக்கமுடியவில்லை. முன்னைவிடவும் சர்வ சாதாரணமாகக் கொலை கொள்ளைகள் நடந்தன. பெரிய கட்சிகளின் தலைவர்களையே சர்வசாதாரணமாக இங்கு கூறுபோட்டார்கள். குறிப்பாக ரவுடி ஸ்ரீதரின் அட்டகாசம் இங்கு அதிகமாக இருந்தது. ஸ்ரீதர் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவரது ஆட்கள் என்ற பெயரில் பலர் இங்கு அட்டகாசம் செய்துகொண்டிருந்தனர். ஸ்ரீதரின் பெயரைப் பயன்படுத்தி பலர் இங்கு வாரிசுகள் இல்லாத வீடுகளை மிரட்டி எழுதி வாங்குவது, விற்பது என ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திவந்தனர். அவர்களால் மக்கள் பெரும் அச்சத்தில் கிடந்த நேரத்தில்தான் ஸ்ரீநாத் இங்கு பொறுப்பு ஏற்றார். அவர் வந்தபின் காஞ்சியில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. 

அதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்த பல வழக்குகளை துாசித்தட்டி எடுத்து அரசியல் பின்னணி கொண்ட குற்றவாளிகளைக் கைது செய்தார். அரசியல்வாதிகளிடமிருந்து வந்த அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கைகள் அவர் மேற்கொண்டார். காவலர்களுக்கு அவர்கள் பணியில் முழு சுதந்திரத்தை அளித்தார். அவர்களுக்கான தனிப்பட்ட பிரச்னைகளிலும் அக்கறை காட்டினார். 

காவல்துறையில் க்ரைம் டீம்களில் திறமையானவர்கள் பலரை இணைத்து அதனை மாற்றியமைத்தார். காவல்துறை செயல்பாடுகளைக் கசிய விடுவதாகத் தெரியவந்தவர்களைப் பணியிடமாற்றம் செய்தார். இதன்மூலம் திட்டங்கள் வெளியே கசிவது நின்றது. ஒவ்வொரு பகுதியிலும் ரவுடிகளாக கோலோச்சி வந்தவர்களை ஆரம்பத்திலேயே அழைத்துப்பேசி எச்சரிக்கை செய்தார். எச்சரிக்கை மீறி நடந்துகொண்டர்களை வழக்குகளைப் பாய்ச்சி சிறையில் அடைத்தார். சில வழக்குகளில் மட்டும் சிக்கிய வளர்ந்து வந்த ரவுடிகளை அழைத்துப்பேசி அவர்களை மனம் திருந்தவைத்தார். சிலருக்கு அவர்கள் மாற்றுத் தொழில் துவங்கவும் உதவிகளை செய்தார். அவரது இந்த நடவடிக்கைகளால் 6 மாதத்துக்குள் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என சவால் விட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதரின் சாம்ராஜ்யத்தை ஒடுக்கியது ஸ்ரீநாத்தான். அதுதான் இன்று வரை காஞ்சி மக்களுக்குப் பெரிய ஆச்சர்யம். ஸ்ரீதரால் அத்தனை சிரமங்களுக்கு ஆளாகியிருந்தனர் அவர்கள். ரவுடி ஸ்ரீதரின் பெயரிலும் அவரது உறவினர்கள் பினாமிகள் என சிதறிக்கிடந்த எல்லா சொத்துகளையும் கண்டறிந்த ஏ.எஸ்.பி ஸ்ரீநாத், அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து அவற்றை முடக்கினார். 

ஸ்ரீநாத் ஐ.பி.எஸ்முக்கியமாக ஸ்ரீதரால் மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு மீட்டுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். காஞ்சியில் பிரபலமான ஒரு தியேட்டரின் அதிபர் பலகோடி மதிப்புள்ள ஓர் இடத்தை ஸ்ரீதரின் ஆட்கள் மூலம் மிரட்டி எழுதிவாங்கினார். புகாரை விசாரிக்கப்போனபோது தியேட்டர் அதிபர் சரிவர ஒத்துழைப்பு கொடுக்காதபோது ஸ்ரீநாத் அவரை காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதிர்ச்சிக்குள்ளான தியேட்டர் அதிபர் மிரட்டி வாங்கிய சொத்தை உரியவரிடம் திரும்ப ஒப்படைத்தார். அரசியல் செல்வாக்கும் பணபலமும் கொண்ட 'தியேட்டருக்கே' இந்தக் கதியா எனக் கதிகலங்கிப்போன மற்ற சிலர் தாங்களும் மிரட்டி எழுதிவாங்கியிருந்த இடங்களை சத்தமின்றி உரியவர்களிடம் மாற்றி எழுதித்தந்தனர். அவர்களில் சிலர் சொத்தின் உரிமையாளர்களுக்கு மேற்கொண்டு பணத்தைக்கொடுத்து புகார் எதுவும் தந்துவிடவேண்டாம் எனக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டதும் நடந்தது. 

இப்படி நேரடியாகவும் மறைமுகமாவும் இதுவரை பல கோடி சொத்துகள் இப்படி ஸ்ரீதர் ஆட்களிடம் இருந்து மீட்டுத்தரப்பட்டிருக்கிறது. இப்போதுதான் ஸ்ரீதரின் ஆட்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிக்கிடக்கிறார்கள். 

அதுமட்டுமின்றி ரவுடி ஸ்ரீதரின் மனைவி லண்டனுக்குச் சென்று கணவர் ஸ்ரீதரை பார்த்துவிட்டு  சென்னைக்குத் திரும்பிய ரகசியத் தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு அவரைப்பிடித்துவிசாரணை செய்தார். தொடர்ந்து நீதிமன்றம் ரவுடி ஸ்ரீதரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவித்ததோடு அவரது மகன் மீதும் வழக்குப் பதிந்து அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கியது. இப்படி ஸ்ரீதருக்கு நாலாபக்கமும் நெருக்கடி கொடுக்கத்துவங்கியுள்ளது. இதனால் 20 வருடங்களுக்கு மேலாக காஞ்சியை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த ஸ்ரீதரின் பராக்கிரமங்கள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் இப்போதுதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இதனால் பல காலமாக பயந்து நடுங்கிக்கொண்டிருந்த காஞ்சி மக்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்தார்கள். அதற்குள் ஏ.எஸ்.பி ஸ்ரீநாத்துக்கு டிரான்ஸ்பர் வந்திருப்பது எங்களுக்குப் பெரும் வருத்தமாக உள்ளது. வரதட்சணைக் கொடுமையினால் காஞ்சியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சந்தேக மரணம் என்றே பதிவானது, குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டபோது உயிரிழந்தவரின் பெற்றோர்கள் ஸ்ரீநாத்திடம் சென்று கதறினார்கள். அடுத்த 2 தினத்தில் தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள்.” என்றார் ஆதங்கமான குரலில். ஸ்ரீநாத்தின் நடவடிக்கைகளை அடுத்துவரும் அதிகாரிகள் தொடர்ந்தால் காஞ்சிபுரம் மீண்டும் ஆன்மிக அடையாளமாக மாற வாய்ப்புண்டு என்கிறார்கள் காஞ்சி மக்கள். 

மொத்தத்தில் நேர்மையும் துணிச்சலும் திறமையும் கொண்ட ஸ்ரீநாத் போன்ற அதிகாரிகள் தமிழகம் முழுக்க தேவைப்படுகிறார்கள். பாராட்டுகள் ஸ்ரீநாத் சார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close