Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நாங்களும் வெட்ட மாட்டோம்... நீங்களும் வெட்டக் கூடாது!” - பிடிவாத வனத்துறை... இடம்பெயரத் தயாராகும் கிராமம்

               மரம் வெட்ட மறுக்கும் வனத்துறை

மேட்டூர் டேம் தொடங்கி தமிழகம் முழுக்க உள்ள உள்ளூர் ஏரி, குளங்கள் வரை அனைத்தையும் தூர் வாரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். ஆனால், கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவுள்ள தாதம்பாளையம் ஏரியில் காடுபோல் மண்டிக் கிடக்கும் சீமை கருவேலம் மரங்களை ஒரு ஏக்கரில் மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அம்போவென விட்டிருக்கிறார்கள். "இந்த ஏரியைத் தூர் வாரி நீர் சேமிக்காததால், சில கிராமங்களில் உள்ள மக்கள் வெளியூர்களுக்கு பஞ்சம் பொழைக்க போயிட்டாங்க. இனியும் தூர் வாரலன்னா,மொத்த கிராம மக்களும் வெளியூர்களுக்கு மூட்டை முடிச்சை கட்ட வேண்டி இருக்கும்" என்று சோகத்துடன் எச்சரிக்கை செய்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.


 மரம் வெட்ட மறுக்கும் வனத்துறை

இது தொடர்பாக விசாரிக்க, பெரிய தாதம்பாளையம் கிராமத்திற்கே சென்றோம். கடல்போல் காட்சியளிக்க வேண்டிய தாதம்பாளையம் ஏரி, கருவேலம் மரங்கள் இரு அடிக்கு ஒன்று என்று வளர்ந்து ஏரியை முற்றிலும் மூடி இருந்தன. அதன் கீழ்கரையோரம் மட்டும் கொஞ்சம் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. தாதம்பாளையம் ஏரிநீர் பாதுகாப்புச் சங்க செயலாளரும், பிரபல ஆடிட்டருமான திருநாவுக்கரசுவிடம் பேசினோம்.
 திருநாவுக்கரசு"இந்த பகுதியே வறட்சியான பகுதி. அந்தக் காலத்திலேயேயே வறட்சியான பகுதியாக இங்குள்ள கிராமங்கள் இருந்திருக்கின்றன. மழைக்காலத்திலும் 200 முதல் 300 மில்லிமீட்டர் மழையே இங்கு பெய்திருக்கிறது. அந்த நீரும் ஆரியூர் வழியாக உப்பாறு என்ற பெயரில் அமராவதி ஆற்றில் கலந்து வந்திருக்கிறது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் 1881-ம் ஆண்டு பெரிய அணைக்கட்டை போன்று 250 ஏக்கரில் அமைத்ததுதான் இந்தத் தாதம்பாளையம் ஏரி. இந்த ஏரியில் மழை தேங்கியதால், சுற்றியுள்ள பவுத்திரம், விஸ்வநாதபுரி, பள்ளப்பாளையம், தும்பிவாடி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. இருபதாயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசனம் கிடைக்க இந்த ஏரி காரணமா இருந்திருக்கு.

ஆனால், இந்த ஏரியைக் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்புள்ளவர்கள் தூர் வாராததால், சீமை கருவேலம் மரங்கள் முளைத்து காடு போல மண்டத் தொடங்கி இருக்கு. அதை அப்புறப்படுத்தாததால் இப்போது அடர்ந்த காடுபோல் ஆயிட்டு. இந்த ஏரி முதலில் பவித்திரம் ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்தது. ஊராட்சிமன்ற பொறுப்பில் இருந்தவர்களும் இதை கண்டுக்கலை. அதன்பிறகு, பொதுப்பணித்துறையின் கன்ட்ரோலுக்குப் போனது. அவர்களும் ஏரியைச் சீந்தவில்லை. பத்து வருடங்களாக ரிசர்வ் ஃபாரஸ்ட் கன்ட்ரோலில் இருக்கிறது. அவர்களும் இந்த ஏரியைச் சுத்தப்படுத்தலை. இதனால்,கடந்த வருடத்தில் இருந்து எங்க பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் வறட்சிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பாததால்,நூற்றுக்கணக்கான பாசன கிணறுகளும் தண்ணீர் இன்றி கடுமையாக வறண்டுபோய்விட்டன. குடிக்கக் கூட பத்துகிலோமீட்டருக்குப் போய் தண்ணீர் பிடிக்க மக்கள் போகக் கூடிய நிலைமை. இதனால், இந்த ஏரியில் உள்ள மரங்களை வெட்டி, தூர் வாரி மழைநீரை சேமியுங்கள் என்று பத்து வருஷத்துக்கு மேலாக கோரிக்கை வச்சுகிட்டு வர்றோம்.

ஏரி

ஆனால், ஃபாரஸ்ட்காரங்க கண்டுக்கலை. இந்நிலையில்தான், சமீபத்தில் கோர்ட்டே சீமைக் கருவேல மரங்களை வெட்டச் சொன்னது. இரண்டு வழக்கறிஞர்கள் அடங்கிய ஆணைக்குழுவும் வந்து எங்களிடமும், ரிசர்வ் ஃபாரஸ்ட்காரங்ககிட்டயும் வெட்டச் சொன்னாங்க. உடனே, அதுக்காக கரைகளில் உள்ள கொஞ்ச மரங்களை மட்டும் வெட்டிவிட்டு,அம்போவென விட்டுட்டாங்க. எங்க பகுதி இளைஞர்கள் அந்த மரங்களை வெட்டலாம்ன்னு இறங்கினாங்க. அதைத் தடுத்து,ஸ்டே ஆர்டர் வாங்கிட்டு ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட். முழுவதையும் அப்புறப்படுத்திவிட்டு, ஏரியைத் தூர்வாரி தண்ணீர் சேமிக்க உதவனும். இது தொடர்பா வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து மனு கொடுக்கப் போறோம்" என்றார்.

அதன் பின் பேசிய,ஆண்டிப்பட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சண்முகானந்தம்,

 "தாதம்பாளையம் ஏரியை முழுக்க நீர் நிரப்ப இன்னொரு திட்டத்தையும் நாங்க பதினைந்து வருடங்களா முன்வச்சுக்கிட்டு வர்றோம். சண்முகானந்தம்அதாவது, அமராவதி ஆற்றில் வெள்ளக்காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை எங்க ஆண்டிப்பாளையத்தில் இருக்கும் குளத்தை நிரப்பி தாதம்பாளையம் ஏரி வரையில் உள்ள பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அரை கிலோமீட்டருக்கு ஒன்றாக இருக்கும் இருபத்தாறு குளங்களை நிரப்பி, இறுதியாக இருபத்தி ஏழாவதாக இருக்கும் தாதம்பாளையம் ஏரியை நிரப்ப நாங்க திட்டம் தயாரித்து அரசு பார்வைக்கு அனுப்பினோம். அதாவது, 26 குளங்கள், அதன்பிறகான 27வதாக இருக்கும் தாதம்பாளையம் ஏரி வரையில் நீர்வழித்தடம் இருக்கு. ஆனால்,தூர்ந்து கிடக்கு. அதை தூர் வாரினாப் போதும்.

புதிதாக அமராவதி ஆற்றில் இருக்கும் அணைப்புதூர் அணைக்கட்டில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதுபோல் பம்பிங் மூலம் குழாய் வழியாகத் தண்ணீர் கொண்டு வந்து எங்க ஊரில் உள்ள முதல் குளத்தில் விட்டால், அது தானாக நிரம்பி, அதில் இருந்து ஒவ்வொரு குளமா நிரம்பி, இறுதியில் தாதம்பாளையம் ஏரி நிரம்பும். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும், ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். ஐம்பது வருடங்களாகக் கடும் வறட்சி நிலவுவதால், பல ஊர்களில் உள்ள பல குடும்பங்கள் பஞ்சம் பொழைக்க வெளியூர்கள் போய்விட்டன. அதனால், இந்தத் திட்டம் நிறைவேறினால் கிளம்ப நினைக்கும் மீதமுள்ள மக்களும் மனம் மாறி இங்கேயே இருக்க வாய்ப்பிருக்கு. இந்தத் திட்டத்தை இப்போதைய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, எம்எல்ஏ-க்கள் பலர்கிட்டயும் கோரிக்கையா வச்சோம். நாங்களே முட்டி மோதி பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து, இந்தத் திட்டத்தை வலியுறுத்தினோம். ஒருவழியாக,இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்த ஒப்புதல் அளித்ததோடு, 2013-14 ஆண்டில் முப்பத்தஞ்சரை கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்காக எஸ்டிமேட்டாக

மரம் வெட்ட மறுக்கும் வனத்துறை

போட்டார்கள். ஆனால், இன்னைய வரைக்கும் வெறும் எஸ்ட்டிமேட்டாக மட்டும் இருக்கு. விரைவில் தாதம்பாளையம் ஏரியில் உள்ள சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்திவிட்டு, தூர் வாரி நாங்க சொல்ற இந்த பம்பிங் நீர் நிரப்பல் திட்டத்தை அமல்படுத்தலன்னா, ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் ஒன்றுதிரண்டு பிரமாண்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம். அப்பயும் நடக்கலன்னா, மொத்த ஊர் மக்களும் வெளியூர்களுக்குப் பஞ்சம் பொழைக்க போகலாம்ன்னு இருக்கோம்" என்றார்.

 இந்த விவகாரம் சம்மந்தமாக கரூர் கோட்ட வனத்துறை அலுவலர் அன்புவிடம் பேசினோம்.

“இது ரிசர்வ் ஃபாரஸ்ட் கன்ட்ரோலில் இருக்கு. அதனால், எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்ய முடியாது. கோர்ட் உத்தரவுப்படிதான் நாங்க முதலில் கொஞ்சம் மரங்களை வெட்டினோம். ஆனால்,எங்களுக்குன்னு சில நடைமுறைகள் இருக்கு. அதற்காக, உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். மரம் வெட்ட சொல்ற கோர்ட், பின்பு ஏன் நடைமுறைப்படி மரங்களை வெட்டலைன்னு சொல்லும். அதனால், முறைப்படி செய்ய கொஞ்சம் காலதாமதமாவுது. அதேபோல்,நாங்க ஸ்டே ஆர்டரெல்லாம் வாங்கலை. ரிசர்வ் ஃபாரஸ்ட் கன்ட்ரோலில் உள்ள மரங்களைத் தனி நபர் யாரும் வெட்ட முடியாது. அதேபோல், இந்த ஏரியைத் தூர் வாரவும்,பம்பிங் திட்டம் மூலம் நீர்த் தேக்கவும் நாங்க உயரதிகாரிகளுக்குத் திட்டம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருக்கோம். உத்தரவு வந்ததும் கடகடன்னு வேலையில் இறங்கிடுவோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement