வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (17/07/2017)

கடைசி தொடர்பு:15:16 (17/07/2017)

‘இது 7 வருஷக் காதல்’ - இரோம் ஷர்மிளாவுடனான காதல் தருணங்கள் பகிர்கிறார் தேஸ்மண்ட் குட்டின்ஹோ #VikatanExclusive

ஜூலை மாதம் என்பது, கொடைக்கானலுக்கு சீஸன் அல்ல. ஆனால், இந்த மாதம் 12-ம் தேதி கொடைக்கானலில் செம கூட்டம். ‘சீஸன்ல ஏதும் ஆஃபர் தர்றாங்களோ அல்லது நயன்தாரா ஷூட்டிங்கா’ எனப் பார்த்தால், இரோம் ஷர்மிளா வந்திருந்தார். பாதிப் பேருக்கு அவரைத் தெரியவே இல்லை. ‘மூக்குல டியூப் வெச்சுக்கிட்டுப் போராடினாங்களே’ என, சிலர் அடையாளம் கண்டுகொண்டு செல்ஃபி எடுத்தார்கள்.

இரோமுக்கு கொடைக்கானலில் என்ன வேலை? தன் வருங்கால கணவரை இந்தச் சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தத்தான் கொடைக்கானல் தாலுகா அலுவலகத்துக்கு வந்திருந்தார் இரோம் ஷர்மிளா. `இந்தியாவின் இரும்பு மனுஷி' எனப் பெயரெடுத்த இரோம் ஷர்மிளா, அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ராணுவச் சட்டத்துக்கு எதிராக தன் இளமைக்காலம் முழுவதும் போராட்டத்திலேயே கழித்தவர். இதைக் காரணம்காட்டி தேர்தலிலும் நின்றார். ஆனால், படுதோல்வி அடைந்தார். தோல்வி தந்த துக்கமோ என்னவோ, மணிப்பூரைவிட்டு வெளியேறி தற்போது கொடைக்கானல் பகுதியில் செட்டிலாகிவிட்டார் இரோம் ஷர்மிளா. சோலார் அப்சர்வேட்டரி அமைந்துள்ள பூம்பாரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார். கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சொல்கிறார் அவர், 

இரோம் ஷர்மிளா

“மணிப்பூர் தோல்வி என்னைப் பாதிப்படையச் செய்தது உண்மைதான். அதற்காக தேர்தல் தந்த தோல்வியில் நான் ஊரைவிட்டுக் கிளம்பி வரவில்லை. மக்கள் போராட்டத்தைக் கொஞ்சகாலம் ஒத்திவைத்து, அமைதியான வாழ்க்கையில் ஈடுபட எண்ணினேன். சிறு வயதிலிருந்தே மலைவாசஸ்தலங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். முதலில் கர்நாடக வனப்பகுதியில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். பிறகு, கொடைக்கானல்தான் சரியான சாய்ஸ் எனத் தேர்ந்தெடுத்தேன். காரணம், இங்கு உள்ள தமிழ் மக்கள். இயற்கையோடு அமைந்துள்ள வாழ்க்கைச்சூழல், சீதோஷ்ணநிலை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் கொடைக்கானலையே என் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுத்துவிட்டேன்’’ என்கிறார்.

“இனிமேல் கொடைக்கானலில்தான் நிரந்தரமாக செட்டில் ஆகப்போகிறீர்களா?’’ என்ற கேள்விக்கு, ‘‘என் வருங்கால கணவரின் முடிவில்தான் இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறது’’ என்று அவர் மழுப்பினார். இந்நிலையில் கொடைக்கானலில் அவர் தங்கி திருமணம் செய்யக் கூடாது எனப் பலர் போராடிவரும் வேளையில், தேஸ்மண்ட் குட்டின்ஹோவிடம்``உங்கள் காதல் கதையைச் சொல்லுங்கள்?’’ என்றதற்கு, மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டே பேசினார். 

“கிட்டத்தட்ட 16 வருடங்களாக ஒட்டுமொத்த மாநிலங்களுக்காகப் போராடிவருகிறார் இரோம் ஷர்மிளா. ஆனால், அவரின்  போராட்டங்கள் அண்மைக்காலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்தன. அவரை நான் கடந்த ஒன்பது வருடங்களாக ஃபாலோ செய்துவருகிறேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, `இப்படியும் ஒரு போராளியா!' என வியந்து அவர் மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல்கொண்டேன். `இதுபோன்ற போராட்டக் குணம்கொண்ட ஒரு பெண் நம் வாழ்க்கைக்குக் கிடைத்தால், எதையும் சாதிக்கலாம்' என்ற தன்னம்பிக்கை வந்தது. 

இரோம் ஷர்மிளா திருமணம்

இரோமை, கடந்த ஏழு வருடங்களாகக் காதலிக்கிறேன். அதிலும் அவரின் ‘பர்னிங் ஆஃப் பிரைட்’ என்ற புத்தகம் என்னுள் பெரிய தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியது. அவரை சோஷியல் மீடியாவில்தான் முதலில் அப்ரோச் செய்தேன். எல்லோரையும்போலவேதான் அவர் என்னையும் ட்ரீட் செய்தார். 2010-ம் ஆண்டில்தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் என் உண்மையான காதலைப் புரிந்து ஏற்றுக்கொண்டார். ‘நான் ஒன்றும் கடவுள் அல்ல; எனக்கும் காதல் வரும்’ என எப்போதோ சொன்னார். அதற்குக் காரணம் நான் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. 

இரோம், போராட்டத்தில் இருக்கும்போது அவரின் வலதுபக்கத்தில் நெல்சன் மண்டேலாவின் படம் இருக்கும். நான் அவரிடம் காதலுடன்  கொடுத்த ‘ஐ லவ் யூ’ எனப் பொறிக்கப்பட்ட பொம்மையை, தன் இடதுபக்கத்தில் வைத்திருப்பதாக ஒரு பேட்டியில் படித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன் - அவரும் என்மீது காதலில் விழுந்துவிட்டார் என்று. ஆனால், அவர் அதற்கு முன்னரே இரோம் என்மீது காதல்கொண்டுவிட்டதாக, இயக்குநர் விஷால் பரத்வாஜ் தெரிவித்திருந்தார். 

ஒருதடவை மணிப்பூர் கோர்ட் வாசலில் நான் அவரின் கையைப் பற்றியிருந்ததைப் பார்த்து, என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். `மணிப்பூரில் இதற்கு அனுமதியில்லை’ என சில பெண் போராளிகள் என்னைத் தாக்கியபோதும், அவர்களைத் தடுத்து எனக்காக வாதாடியபோதும் அவரின் கண்களில் காதலைக் கண்டேன். இனிமேல் அவருக்காக நான்; எனக்காக அவர் என வாழ இருக்கிறோம்!’’ என்கிறார் தேஸ்மண்ட்.

தேஸ்மண்ட், அயர்லாந்துவாசி என்கிறார்கள். ‘‘நான் அயர்லாந்துக்காரன் அல்ல. நான் பிரிட்டிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவன். அடிப்படையில் என் ஊர் கோவா. அப்படியென்றால், நான் இந்தியன்தானே!’’ என்ற தேஸ்மண்ட், மீடியாக்காரர்கள் என்றாலே அலறினார். ‘‘தயவுசெய்து எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். மீடியாவின் சகவாசமே வேண்டாம்’’ என்றவர், தன்னைச் சந்திக்க வந்த பொதுமக்களிடம், ‘‘உங்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்!’’ என்று சிரிக்கச் சிரிக்கப் பேசி செல்ஃபி எடுத்து வழியனுப்புகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்