Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிணற்றின் விலை 10 கோடி! விலை சொல்லிய ஓ.பி.எஸ்! வாங்கத் தயாராகிய கிராமம்! #followup

 ராட்சத கிணறுகள் அருகில் பெண்கள் போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கு கடந்த ஒரு மாதமாகப் போராடிவந்தார்கள். அவர்களின் போராட்டம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஓ.பி.எஸ். தோட்டத்தில் மூன்று ராட்சத கிணறுகள் தோண்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும், நான்கு போர்வெல்கள் அங்கே போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நாம் ஜூ.வி-யில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

கடந்த 10-ம் தேதி கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஓ.பி.எஸ்ஸூக்குச் சொந்தமான தோட்டத்தில் இருக்கும் கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட 188 பெண்கள் மற்றும் 52 ஆண்கள் உள்பட மொத்தம் 240 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி, கிராம மக்களுக்கும், ஓ.பி.எஸ் தரப்புக்கும் இடையே முதன்முதலாக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து 12-ம் தேதி காலை லெட்சுமிபுரம் கிராம மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். கருப்புக்கொடியுடன், கையில் காலிக்குடங்களுடன் கிராமப் பெண்கள் அனைவரும், சாலையில் அமர்ந்து ஓ.பி.எஸ்ஸூக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஓ.பி.எஸ் தோட்டத்தில் இருக்கும் மூன்று கிணற்றில் இரண்டு கிணற்றை தங்கள் ஊருக்கு எழுதிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் கிராம முக்கியஸ்தர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வைகை அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் லெட்சுமிபுரம் கிராம மக்களுக்கு தண்ணீர் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருப்பதாக சொல்லப்பட்டது. அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், "எங்களுக்கு குடிதண்ணீர் மட்டும் பிரச்னை இல்லை, எங்கள் பகுதி விவசாயமும் அந்த ராட்சத கிணற்றால்தான் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தக் கிணற்றை எங்களுக்கு கொடுத்து விடுங்கள்" என்றனர். உடன்பாடு ஏதும் எட்டப்படாமலே பேச்சுவார்த்தை முடிந்தது.

இந்நிலையில், ஜூலை 13-ம் தேதி காலை, கிராம மக்களுடன் ஓ.பி.எஸ் தரப்பினர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓ.பி.எஸ் தரப்பில், அவரது மைத்துனர் சந்திரசேகர் மற்றும் சகோதரர்கள் ஓ.ராஜா மற்றும் ஓ.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், வைகை அணையில் இருந்து கிராமத்துக்கு தண்ணீர் கொடுக்க பண உதவி செய்வதாக ஓ.பி.எஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், கிணறுதான் எங்கள் இலக்கு என்று சொல்லிவிட்டார்கள் கிராமமக்கள்.

பெண்கள் போராட்டம்

தன் உறவுகள் பேசியும் எந்த முடிவும் எட்டப்படாததை அறிந்த ஓ.பி.எஸ், இதற்கு மேல் பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்திருப்பார்போலும், உடனே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். கிராம முக்கியஸ்தர்களும் அங்கே ஆஜரானார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் அங்கே வந்தனர். பேச்சுவார்த்தை சரியாக 10 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 1.30 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. வெளியே வந்த ஓ.பி.எஸ், "என் மீது எந்த தவறும் இல்லை, கிராம மக்கள் என்னை புரிந்துகொள்வார்கள்" என்று இரண்டு வரி மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

கிராம முக்கியஸ்தர்களிடம் பேசியபோது, "அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த கிணற்றை நம்பி அங்கே 44 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட்டிருப்பதாகவும், கிணற்றை கிராமத்திற்கு எழுதிவைத்தால், தென்னைகள் தண்ணீர் இல்லாமல் போய்விடும், அதனால் முதலில் அந்த 44 ஏக்கர் நிலத்தை வாங்குங்கள். அதன்பிறகு நான் கிணற்றை ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறேன். 90 நாள்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் நிலத்தை வாங்கிக்கொண்டு, கிணற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் கிணற்றோடு சேர்ந்து அந்த 44 ஏக்கர் நிலத்தை வேறொருவருக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிடுவேன். அதுவரை தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார். நாங்கள் கிராம மக்களிடம் கலந்துபேசி முடிவு சொல்வதாகத் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

மலை அடிவாரத்தில் வெறும் கரட்டுக்காடாக இருந்த நிலத்தை வாங்கி அங்கே தென்னைகளை பயிரிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அந்தவகையில் சம்பந்தப்பட்ட 44 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பைக் கணக்கிட்டால், ஒரு ஏக்கர் நிலம் 23 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையது. அப்படியானால், சுமார் 10 கோடி ரூபாய் வரை அந்த நிலத்தை வாங்குவதற்கு செலவாகும்.

நிலத்தை வாங்கினால்தான் கிணறு கிடைக்கும் என்று சொல்லிய ஓ.பன்னீர் செல்வத்தின் முடிவில் ஒரு தந்திரம் இருப்பதை உணர ஓ.பன்னீர்செல்வம்முடியும். நிலத்தை ஊர்மக்கள் அனைவரும் இணைந்து விலைகொடுத்து வாங்குவது சாத்தியமில்லாத ஒன்று. எப்படியும் தனிநபர்கள் சிலர் ஏக்கர் பிரித்துதான் வாங்குவார்கள். அப்படி இருக்க, ஊர் மக்களுக்கு எழுதிவைக்கப்பட்ட ஒரு கிணற்றில் இருந்து தனிநபர்களின் நிலத்திற்கு எப்படி தண்ணீர் எடுக்க முடியும்? மக்கள் விடுவார்களா? மீண்டும் கிணறு பிரச்னை உருவாகும். இதனால் அந்த நிலத்தை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள். "44 ஏக்கர்  நிலத்தை யாரும் வாங்க மாட்டார்கள். 90 நாள்கள் கழித்து வேறொருவருக்கு கிணற்றோடு சேர்த்து நிலத்தையும் விற்றுவிடலாம்" என்று கணக்குப்போட்டிருக்கும் ஓ.பி.எஸ்ஸின் தந்திரத்தை சமாளிப்பது எப்படி என்று கிராம மக்கள் அனைவரும் ஜூலை 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், கிராம மக்கள் அனைவரும் இணைந்து பணம் போட்டு, அந்த 44 ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

அரசியல்வாதி தந்திரம் செய்தால், அரசியல்வாதிகளை உருவாக்கும் மக்கள், அவர்களுக்கு மேல் தந்திரம் பண்ணுவார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்கள் லெட்சுமிபுரம் கிராம மக்கள்.

அதிலும் ஓ.பி.எஸ். சொன்ன தகவலின்படி, முழுவதுமாக 44 ஏக்கர் நிலத்துடன் கிணற்றை சொல்கிறாரா அல்லது கிணறு அமைந்துள்ள 18 சென்ட் நிலத்தைச் சொல்கிறாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. அந்த நிலத்தை கிராம மக்கள் வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக ஓ.பி.எஸ். தற்போது, நிலத்தையே கிராம மக்களுக்கு விற்பதாக நாடகமாடி இருக்கலாம் என்றும் லெட்சுமிபுரம் மக்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close