அப்துல்கலாம் நினைவிடத்தில் நூலகம் அமைக்க திட்டம்!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் ஜூலை 27-ல் கடைபிடிக்கப்பட உள்ளது இதையொட்டி ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டு வரும் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவிடப் பணிகளை மத்தியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கிறிஸ்டோபர்  இன்று ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "மறைந்த கலாம் அவர்கள் தனது சிறந்த கண்டுபிடிப்புகளின் மூலம் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்குப் பெரும் உதவிகளை வழங்கியிருக்கிறார். அவரைப் பெருமைபடுத்தும் வகையில் அவரது நினைவிடத்தை மிகச் சிறப்பாக அமைத்து வருகிறோம். கலாம் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக கலாம் பயன்படுத்திய புத்தகங்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து அறிவுசார் மையம், கோளரங்கம் என பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. அதற்கு தேவையான கூடுதல் நிலத்தினை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். அவை கிடைத்தவுடன் அடுத்தக் கட்ட பணிகள் துவக்கப்படும். 

கலாம் நினைவிடப் பணிகள் குறைந்த நாள்களில் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்தை உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் காண வருவார்கள். அவர்கள் கலாமின் பெருமைகளை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இதைத் திறந்து வைக்க பிரதமரை அழைத்துள்ளோம். எங்கள் அழைப்பை ஏற்று பிரதமர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என நினைக்கிறோம்" என்றார்.

இதன்பின் ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன கட்டுமானப் பிரிவு பொறியாளர் பி.கே.சிங் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!