ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த மாணவிக்கு குண்டாஸ்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சேலம் சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் மாணவி வளர்மதி.

இந்நிலையில், வளர்மதி மீது இன்று காலை குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வளர்மதியின் வழக்கறிஞர் தமயந்தி, “அரசுக்கு எதிராகக் கலகத்தை உருவாக்கியதாகவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதழியல் படித்து வரும் வளர்மதியை கடந்த மூன்று நாள்களாக சேலம் பெண்கள் சிறையில் வைத்திருந்தனர். அங்கு அவர் தனக்கு நியாயம் கிடைக்க உண்ணாவிரதம் இருந்துவந்தார். இன்று காலையில் சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் கோவை சிறைக்கு மாற்ற உள்ளதாகக் கூறினர். ஒரு கல்லூரி மாணவியை நக்சல்வாதி என பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியுள்ளனர். விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்வோம்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!