Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூற்பாலையில் நொறுங்கிய சிறுமியின் விரல் - குழந்தைத் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்

குழந்தைத் தொழிலாளி

 

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள ஊமச்சிவலசு என்ற கிராமத்தில் உள்ளது, 'கோமதி ஸ்பின்னிங் மில்'. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான நூற்பாலைகள் புறநகர்ப் பகுதியில்தான் செயல்படுகின்றன. வேலைச் செய்பவர்களைத் தவிர, வெளியாட்கள் யாருமே நுழைந்துவிட முடியாத அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும். தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி உள்பட அனைத்தும், நூற்பாலைகளின் வளாகத்துக்குள்ளேயே அமைந்திருக்கும். தென் மாவட்டங்களில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களும், சிறுமிகளும்தான் இத்தகைய நூற்பாலைகளின் கூலித் தொழிலாளிகள். 

வாரம் முழுவதும் ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். இலவச தங்குமிடம், மூன்று வேளை உணவு, மிகவும் சொற்பமான ஊதியம்... நூற்பாலைகளில் வேலைக்குச் செல்பவர்களின் வாழ்க்கைச் சுழற்சி இது மட்டும்தான். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊரிலிருந்து வந்திருக்கும் தங்கள் பெற்றோரைப் பார்க்கும்போது மட்டும் இவர்களின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். 

குழந்தைத் தொழிலாளி

தென் மாவட்டத்தின் கிராமம்தோறும் சென்று, நைஸாகப் பேசி வேலை என்ற வலைக்குள் வரவைப்பதற்காகவே பல புரோக்கர்களை நூற்பாலை நிறுவனங்கள் வேலைக்கு வைத்திருக்கின்றன. அப்படி ஒரு புரோக்கரால் விழுப்புரம் மாவட்டம், கிளியூர் என்ற ஊரிலிருந்து திருப்பூருக்கு அழைத்து வரப்பட்ட சிறுமிதான் மகேஸ்வரி. சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் நிலையில், விவசாயக் கூலியான மகேஸ்வரியின் தந்தை பழனிச்சாமியால் என்ன செய்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்? கழுத்தை நெரிக்கும் வறுமை, எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகேஸ்வரியின் பள்ளிப் படிப்புக்கு முழுக்கு போடவைத்தது. வேறு வழியே இல்லை. புரோக்கர் சொல்படி திருப்பூருக்கு வந்து சேர்ந்தபோது மகேஸ்வரியின் வயது 14. 

நூற்பாலையின் குழந்தைத் தொழிலாளியாக ஒரு வருடம் கடந்து உழைத்துக்கொண்டிருந்தது அந்தக் குழந்தை இயந்திரம். கடந்த ஜுலை ஐந்தாம் தேதி, வழக்கம்போல காலை வேலைக்குச் சென்றிருந்த மகேஸ்வரி, ஒரு இயந்திரத்தின் அருகில் நின்று வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக மகேஸ்வரியின் இடது கை அந்த இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. தப்பிக்க வாய்ப்பே இல்லை. அடுத்த சில நொடிகளில், அவளின் இடது ஆட்காட்டி விரல் முற்றிலுமாக சிதைந்தது. ரத்தம் ஒழுக வலியால் கதறித் துடித்த மகேஸ்வரியை, சக வேலையாட்கள் மீட்டு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிதைந்துபோன மகேஸ்வரியின் இடது ஆட்காட்டி விரலை நீக்கிவிட்டார்கள். தகவல் அறிந்து வந்த சிறுமியின் குடும்பத்தினர், மருத்துவமனையில் இருந்த மகேஸ்வரியைக் கண்டதும் கதறினார்கள். 

குழந்தைத் தொழிலாளி

உடனடியாக இச்சம்பவம் குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரியை மீட்டு, விசாரணை நடத்தினார்கள். பின்னர், குழந்தைகள் நலக்குழு முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார் மகேஸ்வரி. இறுதியில் தன் மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்கள் அவர் குடும்பத்தினர். 

நூற்பாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துவதும், அங்கே விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்துகொண்டிருக்கிறது. விபத்து ஏற்பட்டு குழந்தைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பிறகே, அதைப் பற்றி விசாரிப்பது, நூற்பாலைகள்மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றையே மாவட்ட நிர்வாகங்கள் ஒரு சடங்குபோல செய்துவருகின்றன. நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்களா என்பது போன்ற ஆய்வுகளை நடத்துவதே கிடையாது. 

குழந்தைத் தொழிலாளர்களைத் தடுப்பது நம் கடமை என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement