Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிணங்களை வைத்தும் ஊழல் செய்யும் செஞ்சிலுவைச் சங்கம் - அதிர்ச்சித் தகவல்

செஞ்சிலுவைச் சங்கம்

செஞ்சிலுவைச் சங்கம் உலகநாடுகள் முழுவதிலும் பரவி மக்களுக்குப் பல நல்ல சேவைகளை இலவசமாகச் செய்துவருகிறது. தமிழகத்திலும் பல ஆண்டுகளாக செஞ்சிலுவைச் சங்கம் தனது சேவையை ஆற்றி, மக்கள் மனதில் நம்பிக்கைக்கு உரிய அமைப்பாக விளங்கிவருகிறது. ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தில் இருக்கும் பல உயர்மட்ட அதிகாரிகள், அண்மைக்காலமாக சேவைகளுக்காக அல்லாமல் தங்களின் சொந்த வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தச் சங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இயற்கைப்பேரிடர் உள்பட பல்வேறு தருணங்களில் மக்களின் உயிரைக்காப்பாற்ற உதவி செய்துவந்த செஞ்சிலுவைச் சங்கம், தற்போது மனிதர்களின் பிணத்தின்மேல் ஆதாயம் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஏராளமான முறைகேடுகளும் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதுபோன்ற முறைகேடுகளை பல ஆண்டுகளாகப் வெளியே கொண்டுவரப் போராடிவருபவர் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா. இவரின் முயற்சியால், செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏராளமான அதிகாரிகளின் சட்டைப்பைக்குள் கோடிக்கணக்கில் பணம் சென்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து பிரம்மா நம்மிடம் பேசியபோது, "RTI தகவலின் அடிப்படையில் ஆதாரங்களைத் திரட்டி, அதனடிப்படையில் இதுபோன்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்துள்ளேன். திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவரும் செஞ்சிலுவைச் சங்கம், கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை எடுத்து அரசு மின்மயானத்தில் எரித்ததில் பெரும் ஊழல் புரிந்துள்ளது. பிணங்களை எரிப்பதற்கான ஆவணங்கள் இல்லாமல் 2014-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுவரை 237 பிணங்களை எரித்துள்ளனர். இதில், சாந்தி என்ற ஒரு பெண்ணின் பிணம், காலை பத்து மணிக்கு ஒருமுறையும், மதியம் 2.30 மணிக்கு ஒருமுறையும் எரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 2015-ம் ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனை நான்கு பிணங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் எரிப்பதற்குக் கொடுத்துள்ளது. ஆனால், 'அரசு மருத்துவமனையில் வழக்கறிஞர் பிரம்மாஇருந்து 10 பிணங்களை வாங்கி எரித்துள்ளோம்' என்று செஞ்சிலுவைச் சங்கம் கணக்குக் காட்டியுள்ளது. இதுபோன்று முறைகேடாக பொய்யான எண்ணிக்கைகளைத் தெரிவித்து, பிணங்கள் எரிக்கப்பட்டதன்மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இது மிகப்பெரிய குற்றமாகும். இதேபோல் ரோட்டில் பாதுகாப்பு இல்லாமல் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, காப்பகத்தில் சேர்த்துவிடுவதிலும் பெரும் கொள்ளை நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு ஆண்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக்காட்டி, அதன்மூலம் மோசடி செய்த பணத்தையும் அதிகாரிகள் பதுக்கிக்கொண்டனர். அதுபோல சங்கத்துக்கு நன்கொடையாகக் கிடைக்கும் பணத்தை போலியான வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, பல லட்ச ரூபாய் அளவுக்குச் சுருட்டியுள்ளனர். இந்த மாபெரும் ஊழலின் பின்னணியில் திருநெல்வேலி செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் டி.ஏ. பிரபாகர், பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோருக்கு முக்கியப்பங்குண்டு. இதுவரை பலகோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலி செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இவர்கள் ஊழல் செய்திருப்பது RTI தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகாரை ஆதாரங்களுடன் அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தேன். விசாரணை நடத்தி, அவர்கள் இருவரும் பதவிவிலக வேண்டும் என்று அறிவித்தார். ஆனால், இது நிர்வாகரீதியான நடவடிக்கை மட்டுமே. அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.திருநெல்வேலி செஞ்சிலுவைச் சங்க ஊழலில், சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை செஞ்சிலுவச் சங்க செயலாளர் ஹரிஷ் எல்.மேத்தாவுக்கு பெரும் பங்கு உண்டு. இதுஎல்லாமே அவரின் கண்காணிப்பில்தான் நடந்துவருகிறது" என்றார்.

சென்னை எழும்பூரில் இயங்கிவரும் தமிழ்நாடு தலைமை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு விசிட் செய்தோம். செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மிக நெருக்கமான ஒருவர் கூறும்போது, "செஞ்சிலுவைச் சங்கத்தில் பல மோசடிகள் நடந்துவருகின்றன. செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இயக்கப்படும் அமரர் ஊர்திக்கு தமிழக அரசு புதிய வாகனங்கள் கொடுத்தது. அந்த வாகனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது. அவற்றுக்கு சென்னையிலிருந்துதான் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டிக்கர் வாங்கி அனுப்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அமரர் ஊர்தி எங்கு சர்வீஸ் செய்ய வேண்டும் மற்றும் சர்வீஸ் செய்ததற்கான பில் என அனைத்துமே சென்னையிலிருந்துதான் ஒப்புதல் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அனைத்துக்கும் மேலாக தன்னார்வலர்களிடம் இருந்து ரத்தம் பெற்று, அதைத் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கும் செயலும் நடந்து வருகிறது. முறையான விசாரணை செய்தால் செஞ்சிலுவைச் சங்க மோசடிகள் அனைத்தும் மக்கள் முன்னிலையில் வெளிச்சத்துக்கு வரும்" என்றார்.

செஞ்சிலுவைச் சங்க மோசடி பற்றி பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கூறும்போது, "தன்னார்வலர்களிடம் இலவசமாக ரத்தம் பெறுகிறார்கள். ஆனால், அவசரத்துக்கு ரத்தம் கேட்டு யாரேனும் வந்தால், பணம் வாங்கிக்கொண்டுதான் ரத்தம் கொடுக்கிறார்கள்.  'தன்னார்வலர்களிடமிருந்து பெரும் ரத்தத்தைச் சுத்தம் செய்ய வேண்டுமே என்று சொல்லி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.' ஆனால், அதுபோன்ற விதிமுறைகள் எதுவும் செஞ்சிலுவைச் சங்க பை-லா-வில் இல்லை. ரத்தம் கேட்டு வருபவர்களிடம் பெறப்படும் பணம், செஞ்சிலுவை சங்கத்துக்கும் சென்று சேர்வதில்லை. சங்க நிர்வாகிகளின் சட்டைப்பைக்குள் அது சென்றுவிடுகிறது. இவை எல்லாம் தன்னார்வலர்களுக்கு தெரிந்தால், இனி ரத்தம் கொடுக்க யார் முன் வருவார்கள்? இதுபோன்ற முறைகேடுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால், அடுத்ததாக அதிகாரத்துக்கு வருபவர்கள் பயந்து செயல்படுவார்கள். சங்கத்துக்கும், மக்களுக்கும் நல்லது செய்வார்கள்" என்றார்.

ரத்த தானம்

இதுபற்றி தமிழ்நாடு தலைமை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் ஹரிஷ் எல்.மேத்தாவை நேரில் சந்தித்து கேட்டபோது, "திருநெல்வேலி செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்கக்கூடாது" என்றார். "சென்னை செஞ்சிலுவைச் சங்கத்திலும் பல முறைகேடுகள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றனவே?" என்று கேட்டதற்கு "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இங்கு அரசு மருத்துவமனைக்குத்தான் ரத்தம் இலவசமாக தரப்படும்" என்றார். மற்ற கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் நம்மை வெளியே செல்லுமாறு சொல்லிவிட்டார்.

சேவை என்ற பெயரில் பிணங்களை வைத்தும், தன்னார்வலர்கள் அளிக்கும் ரத்தத்தின் மீதும் காசு பார்க்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருசில அதிகாரிகளால், ஒட்டுமொத்த சங்கத்தின் மீதும் அவநம்பிக்கை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது புதிய நம்பிக்கை பிறக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement